Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆட்டம் மீண்டும் தொடக்கம்! அ,தி.மு.க எம்.எல்.ஏ-க்களும், இப்போதைய கூவத்தூர் ரிசார்ட்டும்! #SpotVisit

கூவத்தூர்

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வில் தொடங்கிய நீயா... நானா யுத்தம், தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஓ.பி.எஸ் அணி, சசிகலா அணி என இரண்டு அணிகளாக இருந்தபோது நடைபெற்ற களேபரங்களில், கூவத்தூர் ரிசார்ட் கும்மாளங்களை மறக்க முடியாது. இப்போது தினகரன், ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ் என மூன்று அணிகளாகப் பிரிந்து இருக்கிறது. அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் தினம் ஒருவராய் தினகரன் அணிக்குத் தாவிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இன்னொரு ரவுண்டுவர கூவத்தூர் ரிசார்ட் தயாராக இல்லை. 

இந்த நிலையில், சசிகலா ஏற்பாட்டின்பேரில் அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் சிதையாமல் இருப்பதற்கு கிழக்குக் கடற்கரைச் சாலை, கூவத்தூரில் உள்ள கோல்டன் பே ரிசார்ட்டினைத் தேர்வுசெய்தனர். அப்போது, நூற்றுக்கும் மேற்பட்ட அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களை அங்குள்ள ரிசார்ட்டில் தங்கவைத்தனர். ரிசார்ட்டுக்கு அருகில் ஆந்திராவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கட்டுமஸ்தான ஆட்களைக் கொண்டு, பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டது. தேசிய அளவில் ஊடகங்கள் அனைத்திலும் கூவத்தூர்தான் ஹாட் டாபிக்காக மாறியது. இதனிடையே, பன்னீ்ர்செல்வத்துக்கு ஆதரவு அதிகரிக்கத் தொடங்கியது. கூவத்தூரில் போலீஸ் குவிப்பு, செல்போனில் பேசக் கட்டுப்பாடு, கேட்ட உணவு கிடைக்கவில்லை என தகராறு, குத்தாட்டம், உள்ளூர் மக்கள் எதிர்ப்பு, மீடியாக்கள் ஆர்ப்பாட்டம், காவல் துறை அதிகாரிகளுக்கு மிரட்டல், அ.தி.மு.க-வினரின் பேட்டி, சசிகலா மற்றும் தினகரனின் மீட்டிங், தப்பிச்சென்ற எம்.எல்.ஏ என தினம்தினம் மீடியாக்களில் தலைப்புச் செய்திகள் வந்துகொண்டிருந்தன.
 
ஆரம்பத்தில், எம்.எல்.ஏ-க்கள் ஒருசில மணிநேரம் ஓய்வு எடுக்க அறை வேண்டும் என்றுதான் ரிசார்ட்டில் அனுமதி வாங்கினார்கள். கவர்னரிடம் இருந்து எவ்வித அழைப்பும் வராததால், 11 நாள்கள் அங்கேயே எம்.எல்.ஏ-க்களை அடைகாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. படிப்படியாக ரிசார்ட்டில் உள்ள அனைத்து அறைகளும் எம்.எல்.ஏ-க்களுக்கு திறந்துவிடப்பட்டன. ரிசார்ட் சமையல்காரர்களால் சமாளிக்க முடியாததால் மதுராந்தகத்திலிருந்து சமையல்காரர்களைக் கொண்டுவந்தார்கள். கடைசி சில தினங்களில் சசிகலாவும் தினகரனும் வந்தபோது ரிசார்ட் உரிமையாளர் தங்கும் அறையைக்கூட பிடுங்கிக்கொண்டார்கள். சிலர் குடித்துவிட்டு பெட்டை கிழிப்பதும், நீச்சல் குளத்தில் வாந்தி எடுப்பதும், அலங்காரப் பொருட்களையும், பீங்கான் தட்டுகளையும் போட்டு உடைப்பதுமாக இருந்தார்கள். 11 நாள்களும் பதற்றமாகவே இருந்தது கூவத்தூர். எம்எல்ஏ-க்கள் ரிசார்ட்டைவிட்டு வெளியேறியதும், பராமரிப்புக்காகக் காலவரையின்றி ரிசார்ட் மூடப்படுகிறது என்ற அறிவிப்பினை வாயிலில் ஒட்டினார்கள். தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியலையும் பரபரப்பாக்கித் தன்னுள் அடக்கிவைத்திருந்தது கோல்டன் பே ரிசார்ட்.

அந்தக் கோல்டன் பே ரிசார்ட் இப்போது எப்படி இருக்கிறது?

கூவத்தூர்

இதற்காக ஒரு மதியவேளையில் அந்த ரிசார்ட்டுக்குச் சென்றோம். கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருந்து ரிசார்ட் செல்லும்வரை மக்கள் நடமாட்டமே இல்லை. ரிசார்ட்டில் வாயிற்கதவு திறந்தே இருந்தது. நம்மை வரவேற்ற செக்யூரிட்டி, ''யாரைப் பார்க்கணும் சார்'' என்று விசாரித்து உள்ளே அனுப்பினார். “எம்எல்ஏ-க்கள் தங்கியிருந்தபோது கெடுபிடிகள் அதிகமாக இருந்ததால், உள்ளே வர முடியவில்லை. இப்போது, ரிசார்ட்டைச் சுற்றிப் பார்க்கலாமா'' என்றோம். “தாராளமாக எங்கு வேண்டுமானாலும் சுற்றிப் பார்க்கலாம்” என்றார் அதன் வரவேற்பாளர். ஓ.எம்.ஆரில் உள்ள கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் சாஃப்ட்வேர் ஊழியர்கள் அன்று ரிசார்ட்டில் ஓய்வெடுக்க வந்திருந்தார்கள். 

ரிசார்ட் அலுவலக மேனேஜர் சுமா ஜார்ஜ், அதன் வசதிகள் பற்றி நம்மிடம் பகிர்ந்துகொண்டார். “ஐந்து வருடங்களுக்கு முன்பு, பக்தவத்சலம் என்பவரால் இந்த ரிசார்ட் தொடங்கப்பட்டது. ஆறு ஏக்கரில் அமையப் பெற்ற இந்த ரிசார்ட்டுக்குப் பல்வேறு இடங்களில் இருந்து அவர், விலை உயர்ந்த பொருள்களை வரவழைத்து மெருகேற்றினார். அவர் மறைவுக்குப் பிறகு, அவரது இரண்டு மகன்களும் ரிசார்ட்டை நிர்வகித்து வருகிறார்கள். இங்கே மூன்றுவிதமான தங்கும் அறைகள் உள்ளன. இவற்றுக்கான வாடகை முறையே 5,500, 6,600, 9,900 ரூபாய் எனக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மொத்தம் 56 அறைகள் உள்ளன. 400 பேர்வரை கலந்துகொள்ளக்கூடிய மீட்டிங் ஹால் இருக்கிறது. கார்ப்பரேட் கம்பெனிகளில் இருந்தும், குடும்பமாகவும் இங்கே வந்து தங்கிப் பொழுதைக் கழிக்கிறார்கள். நீச்சல் குளம், ஸ்னூக்கர், டேபிள் டென்னிஸ், வாலிபால், பேட்மிண்டன், கிரிக்கெட், கேரம் போர்டு, செஸ், பெடல் போட், மோட்டார் போட், ரோயிங் போட், மீன்பிடிப் படகு, ஜிம், ஸ்பா என அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் இருக்கின்றன. ஃபேமிலியாக வருபவர்கள் நீர்த்தேக்கத்தில் போட்டில் பயணித்துக்கொண்டே சாப்பிட விரும்புவார்கள். அதற்கான ஏற்பாடுகளையும் நாங்கள் செய்துகொடுக்கிறோம். பொழுதை மகிழ்ச்சியாகவும் அமைதியாகக் கழிக்கவும் ஏற்ற இடம்” என்றவரிடம், “ அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களை எப்படிச் சமாளித்தீர்கள்” என்றோம். ''நான் அந்தச் சம்பவத்துக்குப் பிறகுதான் இங்கே வந்தேன். அது, ஓர் எதிர்பாராத நிகழ்வு” என்றார், புன்னகையோடு.

மீண்டும் அ.தி.மு.க-வில் ஓடிப் பிடித்து விளையாடத் தொடங்கிவிட்டார்கள்... இப்பவே கண்ணைக் கட்டுதே!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close