Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வனப்பகுதியை ஆக்கிரமித்துள்ள கேரளா... மௌனம் காக்கும் தமிழகம்!

வனப்பகுதி

மிழக - கேரள எல்லைப்பகுதிகளில் ஒன்றான தேனி மாவட்டம் கம்பம்மெட்டு பகுதியில் ஜூன் 7-ம் தேதி அன்று, இருமாநிலத்தைச் சேர்ந்த அதிகாரிகள் எல்லையை அளக்கும் பணியில் ஈடுபட்டனர். எல்லைகள் வரையறுக்கப்பட்டு அந்தப்பகுதிகளில் சர்வே கல் நடவேண்டும் என்ற தமிழக அதிகாரிகளின் முடிவை, கேரள அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏன்? எல்லைப்பகுதியில் அப்படி என்னதான் பிரச்னை? ஒரு சின்ன 'பிளாஷ்பேக்' இதோ...

தமிழ்நாட்டிற்கும், கேரளாவிற்கும் இடையே சர்சைக்குரிய எல்லைப்பரப்பு என்று பார்த்தால், குமுளியிலிருந்து போடிமெட்டு வரையிலான மலைப்பகுதிதான். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, குமுளியை ஒட்டியுள்ள ஆசாரிப்பள்ளம் பகுதியிலிருந்து ஆறாம் மைல் எனும் இடம்வரை நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பிலான தமிழக வனப்பகுதிகளைக் கேரளாவைச் சேர்ந்தவர்கள் ஆக்கிரமித்திருப்பது கண்டறியப்பட்டது. அப்போதைய வன அலுவலர் நாதன் தலைமையில், டி.ஐ.ஜி. வெங்கடசுப்பிரமணியன், எஸ்.பி. சுப்பிரமணியன், பயிற்சி ஏ.எஸ்.பி-க்கள் ஜெயந்த்முரளி, ஷகில் அக்தர் போன்றோர் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸாருடன் இணைந்து ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை மீட்டனர். அப்போது இருதரப்புக்கும் இடையே கலவரம் வெடித்தது. சில உயிர்களும் பலியாகின.

இறுதியில் வெறும் 150 ஏக்கர் வனப்பகுதி மட்டுமே மீட்கப்பட்டது. பல நூறு ஏக்கர் தமிழக வனப்பகுதிகளில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் இன்றும் ஏலம், காப்பி, இலவங்கம் போன்றவற்றைப் பயிரிட்டு சாகுபடி செய்துவருகிறார்கள். கலவரம் ஏற்பட்ட பிறகு, தமிழக-கேரள எல்லையில் எப்போதுமே பரபரப்பு நிலவும். அடிக்கடி சின்னச்சின்ன தொந்தரவுகளைக் கேரள வனத்துறை கொடுத்துக்கொண்டே இருக்கும். "நமக்கு எதுக்கு வம்பு.?" என்று சொல்லி இந்த விவகாரங்களில் தமிழக வனத்துறை தலையிடுவதில்லை. இப்படித்தான் வருடங்கள் கடந்தன.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 22ம் தேதி தமிழக வனப்பகுதிக்குள் கேரள கலால் மற்றும் ஆயத்தீர்வை துறையினர், சோதனைச்சாவடியை அமைத்தனர். "எங்கள் பகுதிக்குள் நீங்கள் எப்படி சோதனைச்சாவடி அமைக்கலாம்?” என்று தமிழக வனத்துறை ஊழியர்கள் கேட்டிருக்கிறார்கள். "அப்படித்தான் அமைப்போம்" என்று கேரள அதிகாரிகள் சொன்னதோடு மட்டுமல்லாமல், அவர்களைத் தாக்கியும் உள்ளனர் கேரள போலீஸார். 

வனப்பகுதி

'தமிழக வனப் பகுதிக்குள் எப்படி கேரள போலீஸார் வந்தனர்?' என்ற சந்தேகம் வரலாம். ஆனால், அதற்கான பதிலில்தான் மொத்தப்பிரச்னையுமே அடங்கியிருக்கிறது. அது என்ன என்பதைக் கடைசியில் பார்க்கலாம்.

நியாயம் கேட்கப்போன தமிழக வன ஊழியர்கள் கேரள போலீஸாரால் தாக்கப்பட்டிருப்பதை அறிந்த தமிழக வனத்துறை அதிகாரிகள், நேராக தமிழக காவல்துறையினரிடம் புகார் செய்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கேரளப் போலீஸாரிடமும், அம்மாநில கலால் மற்றும் ஆயத்தீர்வை அதிகாரிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். சர்ச்சைக்குரிய இடத்தில் சோதனைச்சாவடி அமைத்திருப்பதாகவும், அதை உடனே அகற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். அதைக் கேரள தரப்பு ஏற்றுக்கொள்ள மறுத்ததால், தமிழக எல்லை மூடப்பட்டது. இதனால், இரு மாநிலங்களுக்கும் செல்லும் பேருந்து போக்குவரத்துக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

நிலைமையை உணர்ந்த இரு மாநில அதிகாரிகள் கூட்டாக இணைந்து பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில் அந்தச் சோதனைச்சாவடி தற்காலிகமாக மூடப்பட்டது. ஆனால் அகற்றப்படவில்லை. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 21-ம் தேதி இரவு, மூடப்பட்ட சோதனைச்சாவடி அருகில், கேரள ஆளுங்கட்சியைச் சேர்ந்த சிலர் கொடிக்கம்பம் நட்டு அதில் அவர்களின் கட்சிக்கொடியை ஏற்றியுள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தமிழக வனத்துறையினர், அந்தக் கட்சிக்காரர்களிடம் கொடிக்கம்பத்தை அகற்றச்சொல்ல, வாக்குவாதம் முற்றி இருதரப்புக்கும் இடையே 'தள்ளுமுள்ளு' ஏற்பட்டது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள், கம்பம் வடக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். ஆய்வாளர் உலகநாதன் தலைமையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட போலீஸார் எல்லைப்பகுதிக்கு விரைந்து சென்று நடப்பட்ட கொடிக்கம்பத்தை அகற்றினர். சோதனைச்சாவடியும் அகற்றப்பட்டது. நிலைமை சீரடைந்துவிட்டது என்று பெருமூச்சு விட்ட தமிழக வனத்துறை ஊழியர்கள், அப்பகுதியைச் சுத்தம் செய்யச்சென்றனர். 

"அந்த இடம் எங்களுடையது. அதை சுத்தம் செய்ய நீங்கள் யார்.?" என்று மல்லுக்கு நின்றிருக்கிறார்கள் கேரளப் போலீஸார். இதுக்கு ஒரு முடிவுகட்டும் நோக்கில், தமிழக வனத்துறை, "வாங்க எல்லையை அளந்து பார்க்கலாம். இந்த இடம் யாருக்குச் சொந்தம் என்று பிறகு முடிவுகட்டலாம்” என்று தெரிவித்தது. "எங்களுக்கே சவாலா?” என்ற தொனியில் கேரள அதிகாரிகள் வரைபடத்தோடு புறப்பட்டனர். உண்மையில் அதுபோன்ற வரைபடங்களைத் தமிழக வனத்துறை அதிகாரிகள் பார்த்தே பல வருடங்கள் ஆகியிருக்கும். அடைக்கப்பட்ட அறையில் கிடந்த பழைய வரைபடத்தைத் தூசிதட்டி எடுத்து ஜெராக்ஸ் போட்டு களத்திற்கு வர, தமிழக வனத்துறைக்கு மொத்தமாக ஒரு மாதம் பிடித்திருக்கிறது.

வனப்பகுதி  மேப்

ஒருவழியாக கடந்த 7-ஆம் தேதி, தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் ஒன்றான கம்பம்மெட்டில் எல்லையை அளக்கும் பணியை மேற்கொண்டனர். இரு மாநில போலீஸாரின் பலத்த பாதுகாப்போடு நடந்த ஆய்வுப்பணியில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது, அதிகாரபூர்வ அரசாங்க வரைபடத்தை வைத்துப்பார்த்தால், தமிழக எல்லையைக் கடந்து பல நூறு ஏக்கர் பரப்பளவைக் கேரளாவைச் சேர்ந்தவர்கள் ஆக்கிரமித்திருந்தது தெரியவந்தது. "அளந்து விட்டோம். கையோடு சர்வே கல்லையும் நட்டுவிடலாம்" என்று தமிழக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், அதனை ஏற்க மறுத்த கேரள அதிகாரிகள், "கல் நடப்பட்டால், இங்கிருக்கும் மக்களால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படலாம். முறையாக நோட்டீஸ் கொடுத்து இவர்களை அப்புறப்படுத்தலாம். அதனால், இப்போதைக்கு கல் இருக்கவேண்டிய இடத்தில், வரைபடத்தில் புள்ளி வைத்து குறித்துக்கொள்வோம்" என்று சொல்லிவிட்டார்கள். அதைத் தமிழகத் தரப்பும் ஏற்றுக்கொண்டது.

"ஏன் ஒப்புக்கொண்டீர்கள்? கல்லை நட்டே ஆக வேண்டும் என்று அழுத்தமாகச் சொல்லியிருக்கலாமே?” என்று தமிழக வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டோம். “நாங்கள் அப்படி சொன்னதில் உள்நோக்கம் இல்லாமல் இல்லை. முதலில் இதெல்லாம் எங்கள் இடம் என்று சொல்லிக்கொண்டிருந்த கேரள அதிகாரிகளே, 'இது உங்கள் இடம்தான் குறித்துக்கொள்ளுங்கள்' என்கிறார்கள். இதுவே நமக்குக் கிடைத்த வெற்றிதான். மேலும், அவர்களே நோட்டீஸ் கொடுத்து காலி செய்துவிடலாம் என்றும் சொல்கிறார்கள். இந்த ஓர் இடத்திலே இவ்வளவு ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தால், குமுளி முதல் போடிமெட்டுவரை எவ்வளவு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும்? எல்லையில் கேரள போலீஸ் ஸ்டேஷன் இருக்கே, அந்த இடம்கூட நம்ம இடம்தான். என மேப் சொல்லுது. எல்லாவற்றையும் முதலில் கண்டுபிடிப்போம். பிறகு நடப்பதைப் பாருங்கள்” என்று கேஷூவலாகச் சொல்கிறார்கள். 

வனப்பகுதி

"எல்லாம் சரிதான். முழுமையாக எல்லையை அளக்க விடுவார்களா?" என்பதற்கான பதில் என்னவோ, “சந்தேகம்தான்!” என்பதுதான். பரந்துவிரிந்த மலைப்பகுதி யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதில் ஆரம்பிக்கிறது பிரச்னைக்கான மூலக்காரணம். தமிழக எல்லைப்பரப்பு,  தமிழக வனத்திறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், கேரளப் பகுதிகள் என்னவோ கேரள வருவாய் துறையினரிடமே இருக்கிறது. ஆய்வுக்கு கேரள மாநிலம் தேவிக்குளம் துணை ஆட்சியர் ஸ்ரீராம் வெங்கட்ராமன் நேரில் வந்திருந்தார். ஆனால், தமிழகம் சார்பில், வனத்துறை அதிகாரிகள், நில அளவை அதிகாரிகள் மட்டுமே வந்திருந்தனர். சர்ச்சைக்குரிய இடம் என்று தெரிந்தே அப்பகுதிகளை வருவாய் துறையினரிடம் கொடுத்திருக்கிறது கேரள அரசு. அதனால்தான் எல்லையில் கேரள போலீஸாரை நிறுத்தி தமிழக வனத்துறையை அடிக்கடி சீண்டிப்பார்க்கிறார்கள். ஆனால் தமிழக வனத்துறை ஒவ்வொரு முறையும் காவல்துறையை அழைத்து பிரச்னையைத் தீர்க்கிறது. இப்போதுகூட எல்லையை அளக்கும் பணி முழுமையாக நடக்காது எனவும், ஆட்களைத் தயார் செய்து, அதிகாரிகளின்மீது கற்களைவீசி, பணியை நிறுத்த, கேரள போலீஸார் திட்டம் போட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்படியே அளக்கும் பணி முழுமையாக முடிந்தாலும், ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப்புறப்படுத்த கேரளப் போலீஸார் துணை நிற்க மாட்டார்கள் எனவும், அங்கே இருக்கும் ஆக்கிரமிப்பாளர்கள் அனைவரும் கேரள அரசுக்கு விசுவாசமானவர்கள் என்றும் கூறப்படுகிறது. 

தமிழகத்தின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து விட்டு, " நிலம் உங்களுடையதுதான். ஆக்கிரமிப்பாளர்களைப் பொறுமையாய் அப்புறப்படுத்தலாம்" என்கிறது கேரள அரசு. அமைதியாய் ஆமோதிக்கிறது தமிழக வனத்துறை. எவ்வளவு காலம் என்று பார்ப்போம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close