Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

”எங்களை எடப்பாடி பழனிசாமியும் ஏமாற்றிவிட்டார்..!” ஜல்லிக்கட்டு இளைஞர்களுடன் இணைந்த விவசாயிகள்

விவசாயிகள் போராட்டம்

விவசாயக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தொடர்ந்து விவசாயிகளுக்காக போராடி வரும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள்  சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சென்னையில் இன்று விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

இந்திய நாட்டையே, ஏன் உலகையே திரும்பிப் பார்க்கவைத்த மெரினா ஜல்லிக்கட்டுப் போராட்டக் கள இளைஞர்கள் முன்னிலையில் தொடங்கியுள்ள போராட்டம், வரும் 13 ஆம் தேதிவரை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடைபெறவுள்ளது. 

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், 50-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு போராட்டக்கள இளைஞர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர். இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, மக்கள் தேசிய கட்சித் தலைவர் சேம.நாராயணனும் இன்றைய போராட்டத்தில் பங்கேற்றார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்த நாச்சம்மாளிடம் பேசினோம்.
"நான் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் இருந்து வந்துள்ளேன். விவசாயம் செய்யக்கடன் வாங்கிவிட்டு, அந்தக்கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், கூனிக்குறுகிப் போய் விட்டோம். 'எங்களுக்கு இனி என்ன நடந்தாலும் சரி' என கடந்த இரண்டு வருடங்களாகப் போராடிவருகிறேன். எங்களிடம் தக்காளியை கிலோ இரண்டு ரூபாய்க்கு வாங்கும் வியாபாரி 12 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார். வருடம் முழுவதும் உழைக்கும் விவசாயிக்கு ஒரு ரூபாய் லாபம் என்றால் வியாபாரிக்கு ஒரேநாளில் 10 ரூபாய் லாபம் கிடைக்கிறது. இதுதான் விவசாயிகளின் வாழ்க்கை. இதனைக் கருத்தில்கொண்டு, விளைபொருள்களின் விலையை விவசாயிகளே நிர்ணயம் செய்யும் உரிமை, 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகளை வைத்துள்ளோம். அவற்றை மத்திய-மாநில அரசுகள் நிறைவேற்ற முன்வர வேண்டும்" என்றார்.

தஞ்சை மாவட்ட விவசாயிகள் சங்கச் செயலாளர் விமல் கூறுகையில், " 'குறு, சிறு மற்றும் பெரும் விவசாயிகளின் கடன் தொகையை தள்ளுபடி செய்வதில் எந்தவிதப் பாகுபாடும் இல்லாமல் அரசு அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே தமிழ்நாட்டில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க முடியும்' என நீதியரசர் நாகமுத்து தீர்ப்பு கூறியுள்ளார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவேண்டாம் என மே மாதம் 10 ஆம் தேதி அன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கோரிக்கை வைத்தோம். அப்போது, சரி என்று ஒப்புக்கொண்ட முதல்வர், தற்போது மேல்முறையீடு செய்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியுமே இப்போராட்டம் நடைபெறுகிறது" என்றார்.

மேலும் மீத்தேன் எரிவாயுத் திட்டம், விவசாய நிலங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டம் போன்றவற்றுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ள விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். 

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கூறுகையில், "வறட்சியால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள விவசாயிகளுக்கு நஷ்டஈடாக பணம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கைக்கு எதுவும் வழங்கவில்லை. இடுபொருள் மானியமாக மட்டும் 1,245 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. ஆனால், இந்தத் தொகை இந்த வருட இழப்புக்கு போதுமானதல்ல என்பது மத்திய, மாநில அரசுகளுக்கு புரியவில்லை. டெல்லியில் போராட்டத்தின்போது எங்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, '60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவோம். விவசாயிகளுக்கு ஆதரவான தீர்ப்பை எதிர்த்து  மேல்முறையீடு செய்யமாட்டோம்' என உறுதியளித்தார். ஆனால், இப்போது தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர்களும் எங்களுக்கு ஆதரவு அளித்துள்ளனர். தவிர, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மக்களின் ஆதரவும் எங்களுக்கு உள்ளது" என்றார்.

விவசாயிகளுக்கு ஆதரவாக இளைஞர்களும் கைகோத்துள்ளதால், இந்தப் போராட்டம் இன்னும் தீவிரம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மெரினா ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர் எபினேசரை சந்தித்தபோது, "ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாட்டுக்காக போராடினோம். ஆனால். இப்போது விவசாயிகளுக்காக... மனிதர்களுக்காக... போராட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். விவசாயம் நாட்டின் முதுகெலும்பு. நவீன யுகத்தில் பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை போன்ற பொருள்கள் கார்ப்பரேட் கம்பெனிகளால் உற்பத்தி செய்யப்பட்டு, மக்களிடையே உலவுவதாக இன்று நாம் சமூக வலைத்தளங்கள் மூலம் அறிகிறோம். இப்படியே போனால் மனிதன் உண்ண உணவின்றி தவிக்கும் நிலை உருவாகும். ஜல்லிக்கட்டில் தொடங்கி அனைத்து நடவடிக்கைகளுமே தமிழகத்தை, இந்தியாவைச் சீர்குலைக்க கார்ப்பரேட் கம்பெனிகள் அரசின் உதவியுடன் நடத்தும் நாடகமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது" என்றார். 

கார்ப்பரேட் கம்பெனிகளிடம் தமிழக அரசு விலை போய் விட்டதா? விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? என்ற நிலையில் மக்கள் தவிக்கிறார்கள்.

ம. நிவேதா

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close