Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜந்தர் மந்தராக மாறிய சேப்பாக்கம்... ஒடுக்க நினைக்கும் காவல்துறை!

சென்னை சேப்பாக்கம் தற்போது ஜந்தர் மந்தராக மாறியுள்ளது. டெல்லியைத் தொடர்ந்து சென்னையில் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர் விவசாயிகள். வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர்  அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்திரில் 41 நாள்களுக்கு போராட்டம் நடத்தப்பட்டது.

 


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த உறுதியின் பேரில் அவர்களது போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால், உறுதியளித்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், தற்போது சென்னையில் போராட்டத்தை தொடங்கியுள்ளனர் விவசாயிகள். கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

Farmers Protest


இந்நிலையில், போராட்டக் களம் நள்ளிரவில் எப்படி இருக்கிறது? என்பதை அறிய சென்றோம். போராட்டக் களம் முழுவதுமே காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. போராட்டம் நடக்கும் இடம் அருகே இரு புறமும் சாலை  பேரிகார்டு போட்டு அடைக்கப்பட்டுள்ளது.


அந்தப் பகுதியே காக்கிகள் சூழ் சேப்பாக்கமாக மாறியிருந்தது. நாம், "விவசாயிகளின் போராட்டக்களத்துக்கு செல்ல வேண்டும்" என்று கூறினோம். அவர்கள் அனுமதியில்லை என்றனர். நாம் விடுவதாய் இல்லை... "போராட்டக்களத்துக்கு சென்றே ஆக வேண்டும். நாங்கள் அங்கு செல்வதில் என்ன பிரச்னை" என்றோம். இதனால் கடுப்பான ஒரு பெண் போலீஸ், "இப்போது யாரையும் அனுமதிக்க முடியாது சார்.. இது எங்களுக்கு வந்த உத்தரவு" என்றார்...


"நாங்கள் அங்கு யாரையும் தொந்தரவு செய்யப்போவதில்லை. கள நிலவரத்தை பதிவு செய்ய வேண்டியது எங்களது கடமை. அதை செய்ய விடுங்கள்" என்றோம். நமது தொடர் போராட்டத்தையடுத்து, ஐ.டி கார்டு காட்டிவிட்டு உள்ளே செல்ல அனுமதித்தனர். போராட்டம் நடத்தும் விவசாயிகளை விட, போலீசார்களின் எண்ணிக்கையே அதிகமாக இருந்தது. 

Farmers Protest


தெரு ஓரத்திலேயே விவசாயிகள் உறங்கி இருந்தனர். அவர்களை சுற்றி பேரிகார்டு போடப்பட்டிருந்தது. செய்தியாளர்கள் கூடியிருந்ததால் அய்யாக்கண்ணு எழுந்து வந்தார். இதைத்தொடர்ந்து அவரிடம் பேச்சுக் கொடுத்தோம்.


"ஜனநாயக நாட்டில் விவசாயிகளின் உரிமைகளுக்காகவும், பொது மக்களுக்காகவும் போராடுவது அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமை. ஆனால் விவசாயிகள் போராடக் கூடாது, கோரிக்கைகளைக் கேட்கக் கூடாது என்ற நிலைபாட்டை எடுத்துள்ளனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் எங்களுக்கு உறுதியளித்ததால்தான் அங்கிருந்து வந்தோம்.

Farmers Protest


கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர மாட்டோம் என்று முதல்வர் கூறினார். ஆனால், தற்போது உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. விவசாயிகளுக்கு ஓய்வூதியம் தர நடவடிக்கை எடுக்கப்படவில்லை.


இதனால், சென்னையில் போராட்டம் நடத்த முன்வந்தோம். 32 நாள்களுக்கு போராட்டம் நடத்த அனுமதி கேட்டோம். அவர்கள் முதல் ஐந்து நாள்களுக்கு போராட்ட அனுமதி தருகிறோம். இங்கே வந்த பின், 32 நாள்களுக்கு போராட்டம் நடத்த அனுமதி தருகிறோம் என்றனர். ஆனால், தற்போது ஐந்து நாள்களுக்கே போராட்டம் நடத்த அனுமதியில்லை என்று கூறுகின்றனர்.


நேற்று மாலையே போராட்டத்தை கைவிடுங்கள் என்றுக் கூறி போலீசார் எங்களை கைது செய்ய வந்தனர். நான் அவர்களிடம்,' நாங்கள் ஏற்கெனவே முக்கால்வாசி நிர்வாணமாக போராட்டம் நடத்தி வருகிறோம். எங்களை கைது செய்து முழு நிர்வாணமாக்கிய பெருமையை காவல்துறையினருக்கு கிடைக்க வேண்டுமா?' என்றேன். இதனால், எங்களை கைது செய்யாமல் சென்று விட்டனர்.

Farmers Protest


இன்று (சனிக்கிழமை) முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வைப்பதாக கூறியுள்ளனர். எங்களது கோரிக்கையை நிறைவேற்றும் வரையில், இங்கு போராட்டம் தொடரும். எங்களது போராட்டத்துக்கு இளைஞர்கள் வருவதைப் பார்த்து, யாரும் எங்களைச் சந்திக்கக் கூடாது என்று இரு புறமும் பேரிக்கார்டு வைத்து அடைத்து விட்டனர். எங்களுக்கு இரவு உணவே 12 மணிக்குதான் வழங்கினர்.


இது ஜனநாயக நாடா? சர்வாதிகார நாடா? எங்களது இயக்கம் சார்பாக சட்டத்துக்கு உட்பட்டு எங்கும் போராட்டம் நடத்த, உயர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுள்ளோம். கார்ப்ரேட் மற்றும் வெளிநாட்டு உணவு உற்பத்தி மூலம் பிளாஸ்டிக் முட்டைகள், பிளாஸ்டிக் அரிசி தற்போது வர ஆரம்பித்து விட்டது. இந்த உணவுகள் மக்களை முடவர்களாவும், அறிவற்றவர்களாகவும் மாற்றும். மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றால் விவசாயிகளான நாங்கள் உற்பத்தி செய்யும் உணவை உண்டால்தான் முடியும். இல்லையென்றால், கிழக்கு இந்திய கம்பெனி எப்படி மக்களை அடிமைகள் ஆக்கியதோ?, அப்படி இந்த பிளாஸ்டிக் உணவுகள் மூலம் கார்ப்ரேட் நிறுவனங்கள் மக்களின் உணர்வுகளை, உடல்களை முடமாக்கி அடிமையாக்கி விடுவார்கள்.


எனவே, விவசாயிகளை காப்பாற்ற இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் முன்வர வேண்டும்" என்று நள்ளிரவிலும் உறுதியான குரலில் முடித்தார் அய்யாக்கண்ணு.


சேப்பாக்கம் இன்னொரு ஜந்தர் மந்தராகவோ, மெரினாவாகவோ ஆகிவிடக் கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. நள்ளிரவிலும் 10 நிமிடத்திற்கு ஒரு முறை, ஒரு வாகனத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு வருகின்றனர். எந்த நேரத்திலும் அவர்களை கைது செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது காவல்துறை.


தங்களது உரிமைக்காக போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியது தமிழக அரசின் கடமை. அதை விட்டுவிட்டு, மெரினா போராட்டத்தின் முடிவையே இதற்கும் தமிழக அரசு எழுதும் என்றால், அது தமிழக அரசுக்கு மிகப்பெரிய அவமானக்கறையாக இருக்கும். கட்சிக்குள் இருக்கும் அணிகள் பிரச்னைகளை கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு, தெருவில் படுத்துக் கிடக்கும் விவசாயிகளின் பிரச்னையை கவனிக்க, இனியாவது தமிழக அரசு முன் வரவேண்டும்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close