Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அன்று ரூ.1.6 லட்சம்... இன்று ரூ.2.2 லட்சம்..! அதிரவைக்கும் தமிழக அரசின் பத்திரப்பதிவு கட்டணம்

பத்திரப்பதிவு கட்டணம் அதிகரிப்பால் அடித்தட்டு மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், அரசு சாதாரண மக்களுக்கு பதிவு கட்டணத்தில் சலுகை தர முன்வர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "நிலத்தின் வழிகாட்டு மதிப்பு 2012-ஆம் ஆண்டு பல மடங்கு உயர்த்தப்பட்டதால் தமிழகம் முழுவதும் அனைத்து பத்திரப்பதிவு அலுவலங்களிலும் பத்திரப்பதிவு எண்ணிக்கை குறைந்தது. அன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு வருடமும் பத்திரப்பதிவு கட்டணம் மூலமாக வருகின்ற வருமானம் அதிகரித்த வண்ணம் இருந்ததால் சில அதிகாரிகள் அன்றைய முதல்வர் ஜெயலலிதா இடத்தில் வழிகாட்டு மதிப்பை ஏற்றினால் பலமடங்கு பத்திரப்பதிவு மூலம் வரும் வருமானம் அதிகரிக்கும் என்று தவறாக சொன்ன காரணத்தினால் நிலத்தின் வழிகாட்டு மதிப்பு உயர்த்தப்பட்டது.

கடந்த 4 ஆண்டுகளாக பத்திரப்பதிவு வருமானத்தில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டு தற்போது தேக்கநிலை ஏற்பட்டிருக்கிறது. இதை அன்றைக்கே எச்சரித்தோம். இந்திய அரசின் ரூபாய் மதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு பிறகு இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்ட சரிவின் காரணமாக சொத்துக்கள் வாங்குவதோ, விற்பதோ முழுமையாக குறைந்து போனது. இன்றைக்கு தமிழக அரசு நிலத்தின் வழிகாட்டு மதிப்பை 33 சதவீதம் குறைப்பதன் மூலமாக சொத்து பரிமாற்றத்தை அதிகப்படுத்திட முடியாது. இந்த நடவடிக்கை தமிழக அரசுக்கு பலன் தராது. இருந்தாலும் இன்றைக்காவது களநிலவரங்களை புரிந்து கொண்டு நடவடிக்கை எடுத்திருப்பதை வரவேற்கிறோம்.

அதேசமயத்தில் பதிவுக்கட்டணத்தை ஒரு சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயர்த்தியிருப்பது தவறான அணுகுமுறை. இதில் பாதிக்கப்பட போவது நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள். 20 லட்சம் ரூபாய்க்கு நிலமோ, வீடோ வாங்கக்கூடிய ஒருவர் இதற்கு முன்பு பத்திரப்பதிவு துறைக்கு 1 லட்சத்து 60,000 ரூபாய் கட்டியிருந்தால் போதும். ஆனால் இப்போது 2 லட்சத்து 20,000 ரூபாய் கட்ட வேண்டி வரும். 50 லட்சம் ரூபாய் வரை சொத்துக்கள் வாங்குகின்றவர்களுக்கு வழிகாட்டு மதிப்பை குறைப்பதன் மூலமாக எந்த பலனும் கிடைத்துவிட போவதில்லை. வசதியில்லாத சிறிய குடும்பத்தை சார்ந்தவர்கள் அந்த குடும்ப உறுப்பினர்களுக்கான சொத்து பரிமாற்றத்தின் போதும் அதிகப்படியான கட்டணத்தை செலுத்த வேண்டி இருக்கும். தானமாக கொடுக்கப்படுகின்ற சொத்துக்களுக்கு கூட அதிகமான கட்டணத்தை செலுத்த வேண்டிய கட்டாயத்தை அரசு ஏற்படுத்தியிருக்கிறது. அதிகாரிகள் மட்டத்தில் இதை எல்லாம் அமைச்சர்களுக்கும், முதலமைச்சருக்கும் எப்படி சொல்லாமல் விட்டார்கள் என்று புரியவில்லை.

2012-ஆம் ஆண்டு எப்படி வழிகாட்டு மதிப்பை ஏற்றி தவறு செய்தார்களோ அதையே இன்றைக்கும் புதிய தவறை செய்திருக்கிறார்கள். அதனால் தமிழக அரசு 50 லட்சம் ரூபாய் வரை வழிகாட்டு மதிப்பு இருக்கின்ற சொத்து பரிமாற்றத்துக்கு பழைய முறை போல 1 சதவீத பதிவுக்கட்டணமும், 50 லட்சத்துக்கு மேல் உள்ள சொத்து பரிமாற்றத்துக்கு 2 சதவீத பதிவுக்கட்டணமும் நிர்ணயித்தால் பத்திரப்பதிவுகள் அதிகரித்து அரசு எதிர்பார்க்கின்ற பலன் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அறிவித்திருக்கின்ற 4 சதவீத பதிவுக்கட்டணமானது சாதாரண மக்களை பாதிக்கும் என்பதை ஏற்றுக்கொண்டு மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று கோரிக்கை வைத்துள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close