Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

யார்மீது பாய வேண்டும் குண்டாஸ்...? பட்டியலிடும் மனித உரிமை ஆர்வலர்!

திருமுருகன் காந்தி


மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட நான்குபேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், அவர்களுக்கு காவல்துறை வழங்கிய ஆவணங்கள் பொதுவெளியில் வைக்கப்பட்டுள்ளது. அந்த ஆவணங்களின் அடிப்படையில் சில கேள்விகளையும், விளக்கங்களையும் மனித உரிமை ஆர்வலர்கள் முன்வைத்துள்ளனர். 2009 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின்போது, இலங்கையில் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மே 17 இயக்கம் உள்ளிட்ட தமிழ் ஈழ ஆதரவாளர்கள் ஆண்டுதோறும் 'நினைவேந்தல்' நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். சென்னை மெரினாவில் கடந்த 21-ஆம் தேதி மே 17 இயக்கம் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்நிகழ்ச்சிக்கு போலீஸார் அனுமதி மறுத்தனர்.போலீசாரின் தடையை மீறி அஞ்சலி செலுத்த முயன்ற அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, அவருடன் சென்ற டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோரை போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

திருமுருகன் காந்தி உள்ளிட்ட நான்கு பேர் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு அரசியல்கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதிநிதிகளும் கண்டனம் தெரிவித்தனர். அவர்கள் மீது காவல்துறை பதிவுசெய்துள்ள ஆவணங்களை, மனித உரிமை ஆர்வலரான ஹென்றி டிபைன், பொதுவெளியில் வைத்து சில கேள்விகளை எழுப்பியுள்ளார். அதுமட்டுமன்றி சில விளக்கங்களையும் அவர் கொடுத்துள்ளார். 
"திருமுருகன்காந்திக்கு எதிராக காவல்துறை எடுத்துள்ள நடவடிக்கை மனித உரிமைகளுக்கு எதிரானது. அவர் மீதான வழக்குகளை வைத்து, திருமுருகன் காந்தி மீது குண்டர் சட்டத்தைப் பதிவு செய்திருப்பார்கள் எனில், கிரானைட் ஊழல் வழக்கில் கைதான பி.ஆர்.பி மற்றும் தொழிலதிபர் வைகுண்டராஜன் ஆகியோர் மீது ஏன் குண்டர் சட்டம் பதிவுசெய்யப்படவில்லை? 

பொதுவாக இந்தச் சட்டத்தை யார் மீதும் போடக்கூடாது என்பதுதான் எங்களுடைய வாதம். திருமுருகன் காந்திக்கு எதிராக போலீஸார்ஹென்றி டிபைன் ஐந்து வழக்குகளை காட்டுகின்றனர்.அதில் ராயப்பேட்டை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு 805 நாள்கள் ஆகிறது. இதுவரை அதற்கான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. ஒரு வழக்கை 805 நாள்கள் வரை, முதல் தகவல் அறிக்கை நிலையிலேயே வைத்திருப்பது யாருடைய தவறு? எழும்பூர் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கும் 624 நாள்களைக் கடந்துள்ளது. மற்றொரு வழக்கு சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் போடப்பட்டதாகும். இவ்வழக்கு போடப்பட்டு 387 நாள்கள் ஆகின்றன. நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 189 நாள்கள் கடந்துள்ளன. இப்படி பதிவு செய்யப்பட்ட 4 வழக்குகளிலுமே  காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. 60 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்க வேண்டும். அப்படியானால், இங்கே யார் குற்றவாளிகள்? இந்த வழக்குகள் எதிலுமே திருமுருகன் காந்தி பொதுசொத்துக்கு சேதம் விளைவித்ததாகத் தகவல் இல்லை. அப்படி இருக்கும்போது, போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தாக வழக்குப் பதிவு செய்துவிட்டு, அதனை குண்டர் சட்டத்தின் கீழ் எப்படி கொண்டுவரமுடியும்? தேனாம்பேட்டை காவல்நியைலத்தில் பதிவுசெய்த வழக்கில் மட்டுமே பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்ததாகப் பதிவு செய்துள்ளார்கள். அதில் பேருந்து கண்ணாடி உடைந்ததாக சொல்லப்பட்டுள்ளது. அதிலும் போலீஸார் உண்மையை மறைத்துப் பொய்வழக்குப் போட்டுள்ளனர்.

அந்த வழக்கில், திருமுருகன் காந்தியை மாஜிஸ்திரேட் முன்னிலையில் நிறுத்தியபோது, காவல்துறையினரிடம் சில கேள்விகளை முன்வைக்கிறார். அதற்கு திருமுருகன்காந்தி குறுக்கிட்டு மாஜிஸ்திரேட்டுக்குப் பதில் சொல்லியுள்ளார்.அதில் 'நாங்கள் போராட்டத்துக்கு வந்தபோது போலீஸார் பேருந்தைக் கொண்டு வந்தனர். அந்தப் பேருந்து ஏற்கெனவே உடைந்து இருந்தது' என்று கூறியுள்ளார். ஆனால், காவல்துறையினர் அதனை மறுத்துள்ளனர். 'பேருந்தை உடைத்தார்கள் என்றால், விசாரணை முடிந்ததாகத்தானே அர்த்தம்; பிறகு ஏன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல்.இங்கு அழைத்து வந்துள்ளீர்கள்?' என்று மாஜிஸ்திரேட் கேள்வி எழுப்பினார். எனவே, அங்கேயும் காவல்துறையின் தவறான  நடவடிக்கை வெளிச்சத்துக்கு வந்தது. இப்படியான நிலையில், இந்த ஐந்து வழக்குகளிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல், காலம் கடத்திவிட்டு அவற்றை குண்டர் சட்டத்தில் சேர்த்திருப்பது எந்த வகையில் நியாயம்? இது யார் செய்த தவறு? 

குண்டர் சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பின்படி, திருமுருகன் காந்திக்கு எதிராக அந்தச்சட்டத்தை பிரயோகப்படுத்தியிருப்பது சட்டப்படி குற்றமாகும்.கடந்த 24 ஆம் தேதி தெலுங்கானா மாநில வழக்கு ஒன்றை விசாரித்த உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யாத வழக்குகளை குண்டர்சட்டத்தில் சேர்ப்பது சட்டவிரோதம் என்று தீர்ப்பளித்துள்ளது.'ஜாமீனில் வரக்கூடாது' என்ற காரணத்தாலேயே போலீஸார் இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளனர். உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையே நாங்களும் முன்வைக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், "திருமுருகன் காந்தி உள்பட 4 பேருக்கு எதிராக குண்டர்சட்டத்தை போட்டிருக்கும் சென்னை மாநகர காவல்துறையின் நடவடிக்கை அபத்தமானது. எங்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டியது காவல்துறையின் கடமை" என்றார் அவர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close