Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கீழடியில் தொல்லியல் அதிகாரியை மாற்றியது ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி

கீழடியில், தொல்லியல் அதிகாரியை இடமாற்றம்செய்தது ஏன் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வியெழுப்பி உள்ளது. 

keeezhadi
 

மத்திய தொல்லியல் துறையினர்,  2015 ஆம் ஆண்டு முதல் சிவகங்கை மாவட்டம், கீழடியிலுள்ள தனியார் தென்னந்தோப்பைத் தேர்வு செய்து, நதிக்கரை நாகரிகம் பற்றி ஆய்வு மேற்கொண்டனர். தொல்லியல்துறை அகழாய்வு, பெங்களூரு பிரிவு கண்காணிப்பாளர் கே.அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் ஆய்வு நடைபெற்றது. ஆய்வில்,  2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் நாகரிகமாக வாழ்ந்ததற்கான அரிய பொருள்கள், வீட்டுச் சுவர்கள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன. 

இந்த நிலையில், கீழடியில் கண்டெடுக்கப்பட்ட அரிய தொல்பொருள்களை, பெங்களூருக்குக் கொண்டுசெல்லக் கூடாதென்றும்,  தோண்டப்பட்ட குழிகளை மூடக்கூடாதென்றும் கனிமொழி என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடர்ந்தார். அந்த மனுவில், ''தமிழகத்தின் மிகப் பழைமையான நகரங்களில் மதுரையும் ஒன்று. மதுரையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் சாலையில் 17 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, கீழடி நகரம். இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வின்மூலம், இந்தப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் 2,000 ஆண்டுகள் பழைமையானவை என்பது தெரியவந்துள்ளது. இங்கிருந்து 5,300 பழம்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மேலும், தமிழ், பிராமி எழுத்துக்களுக்கான சான்றுகளும் உள்ளன. 110 ஏக்கர் அளவில் இதற்கான சான்றுகள் புதைந்திருக்கும் நிலையில், சுமார் 1 ஏக்கர் அளவிலேயே ஆய்வுகள் முடிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், இங்கு சேகரிக்கப்பட்ட பொருள்களைத் தொல்லியல் துறையினர் பெங்களூரு எடுத்துச்சென்று காட்சிப்படுத்த உள்ளது. சமீபத்திய நிலவரப்படி, பெங்களூருவில் சரியான சூழலில்லாத நிலையில், பழம்பொருள்களை லாரி மூலம் அங்கு கொண்டுசெல்வது சரியாக இருக்காது. மேலும், அகழ்வாய்வை இந்தத் தொடக்க நிலையிலேயே முடிவுக்குக் கொண்டுவர தொல்லியல்துறை திட்டமிட்டுள்ளது. எனவே, அகழ்வாய்வில் கிடைக்கப்பெற்ற பொருள்களை பெங்களூரு எடுத்துச்செல்ல தடைவிதிப்பதோடு, கீழடியிலேயே அகழ்வாய்வைத் தொடரவும் கீழடிப் பகுதியிலேயே அருங்காட்சியகம் ஒன்றை அமைத்துப் பராமரிக்கவும் உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கீழடி ஆய்வுப் பணிகளுக்கு நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை விதித்தது. இதனிடையே தொல்லியல் இயக்குநர் அமர்நாத்துக்குப் பதில் ஸ்ரீராமன் நியமிக்கப்பட்டார். இதற்கு, பல்வேறு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்துவந்தனர். 
இந்த நிலையில், கனிமொழி தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் செல்வம், ஆதிநாதன் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கீழடியில் தொல்லியல் அதிகாரியை இடமாற்றம் செய்தது ஏன் என்று கேள்வியெழுப்பி உள்ளனர். இதற்கு பதிலளித்த தொல்லியல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நாடு முழுவதும் நிர்வாக ரீதியாக அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து, அகழாய்வுப் பொருள்களை ஆய்வுக்காக பெங்களூரு கொண்டுசெல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இந்தக் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், சிவகங்கைப் பகுதியிலேயே ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளலாமே என்று கூறியதோடு, வழக்கை ஜூன் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close