Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஓ.எம்.ஆர்-ல் மூடப்படும் சாலைகள்... அவதிப்படும் மக்கள்!

மூடப்படும் சாலை

சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக மாறிவிட்ட பழைய மகாபலிபுரம் சாலை எனப்படும் ஓ.எம்.ஆர். சாலையில், மக்கள் பயன்பாட்டில் இருந்த ஒருபகுதி சாலையை தற்போது அரசு மூடியுள்ளதால், மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். பல ஆண்டுகளாக புழக்கத்தில் இருந்த சாலைகள், திடீரென முன்னறிவிப்பின்றி மூடப்பட்டதால், ஆயிரக்கணக்கான மக்கள் ஐந்து கிலோமீட்டர் சுற்றிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அந்த சாலைகளை மீண்டும் மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து விடுமாறு அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.

சென்னை ஓம்.எம்.ஆர். சாலையில் தரமணி தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் எம்.ஜி.ஆர். ஃபிலிம் இன்ஸ்ட்டியூட், லெதர் இன்ஸ்ட்டியூட், கெமிக்கல் இன்ஸ்ட்டியூட், அரசு பாலிடெக்னிக் கல்லூரி என பல்வேறு அரசு கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. தரமணி தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தின் பின்புறம் பள்ளிப்பட்டு, கலிகுன்றம், கானகம் போன்ற மக்கள் குடியிருக்கும் பகுதிகள் அமைந்துள்ளன. இந்தப் பகுதிகளுக்குச் செல்லும் மக்கள் கல்லூரி வளாகத்தின் வழியாகவே சென்று வந்தனர். அதாவது, டாக்டர் பவானி பட்டேல் ரோடு, செகண்ட் கிராஸ் ஸ்ட்ரீட் மற்றும் ஃபோர்த் கிராஸ் ஸ்ட்ரீட் ஆகிய சாலைகளைத்தான் அவர்கள் பயன்படுத்த வேண்டும். இந்த சாலைகளை தொழில்நுட்பக் கல்லூரி தொடங்கிய நாள் முதலே இப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். கல்லூரி வளாகத்தின் மற்றொருபுறம் ஓ.எம்.ஆர் சாலை அமையப்பெற்றுள்ளது. இப்பகுதி மக்கள் மட்டுமல்லாமல் தரமணி மற்றும் வேளச்சேரியைச் சேர்ந்த மக்களும் கல்லூரியின் குறுக்கே உள்ள சாலைகள் வழியாக ஓ.எம்.ஆர் சாலையை சென்றடைந்தனர். அங்குள்ள அரசு மருத்துவமனை, பள்ளிக்கூடங்களுக்கு செல்லவேண்டுமானால் தொழில்நுட்பக்கல்லூரி வளாகத்திற்குள் புகுந்து, அவ்வழியாகப் பயணம் செய்து வந்தனர். சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவுக்கு சுற்றி வருவதற்குப் பதிலாக அப்பகுதி மக்கள், குறுக்கு சாலைகள் வழியாக சுமார் ஒரு கிலோமீட்டரிலேயே சென்று வந்தனர். இதனால், நேரவிரயமும் தவிர்க்கப்பட்டது.

இதற்காகவே கல்லூரி வளாகத்தின் குறுக்கே சென்னை மாநகராட்சி சார்பில், மக்களுக்கு பயன்படும் விதத்தில் இரண்டு சாலைகளும் போடப்பட்டு, அவை புதுப்பிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது அரசு பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகம், மக்கள் பயன்படுத்தி வந்த அந்த இரண்டு சாலைகளையும் மூடி வருகிறது. இதனைக் கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கல்லூரி வளாகம் மற்றும் மூடப்படும் சாலைகள்

சாலைகள் மூடப்படுவதால் ஏற்படும் பிரச்னைகள் பற்றி அப்பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவர் கூறும்போது, "இந்த இரண்டு சாலைகளையும் நாங்கள் காலங்காலமாகப் பயன்படுத்திக்கிட்டு இருக்கோம். இந்த சாலைகளில் சென்றுவருவதால், சுமார் 50,000-க்கும் அதிகமான மக்கள் பயனடைந்து வருகிறார்கள். ஓ.எம்.ஆர். சாலையில் இருக்கும் அரசு மருத்துவமனைக்குச் செல்வதானாலும், பள்ளிகளுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வதானாலும் இந்த சாலையை நம்பியே மக்கள் இருந்தனர். மக்களின் பயன்பாட்டைக் கருத்தில்கொண்டே, இந்தச் சாலையை சென்னை மாநகராட்சி தார்ச் சாலையாக மாற்றிக் கொடுத்துள்ளது. ஆனால் தற்போது கல்லூரி நிர்வாகம் இந்த சாலையை மூடி வருகிறது. ஒருவேளை இந்த சாலைகள் நிரந்தரமாக மூடப்படுமானால், ஐ.ஐ.டி. வளாகத்துக்கும், பாலிடெக்னிக் வளாகத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாவார்கள். இப்போது நாங்கள் ஓ.எம்.ஆர் சாலையை அடைய ஒரு கிலோமீட்டர் பயணித்தால் போதும். ஆனால், நாங்கள் பயன்படுத்தும் சாலைகள் மூடப்பட்டால், ஐ.ஐ.டி. சாலை வழியாகச்சென்று அண்ணா பல்கலைக்கழகத்தைச் சுற்றிக்கொண்டு மீண்டும் மத்திய கைலாஷ் பகுதியைக் கடந்தே இந்திரா நகர் ரயில் நிலையம் செல்ல முடியும். அல்லது டாக்டர் தர்மாம்பாள் பாலிடெக்னிக் கல்லூரி சாலை வழியாகத்தான் இந்திரா நகர் ரயில் நிலையத்தை அடையக்கூடிய நிலை உள்ளது. எப்படிப்பார்த்தாலும் ஐந்து கிலோ மீட்டர் தொலைவைக் கடந்தாக வேண்டும்" என்றார். 

சந்திரன் தொடர்ந்து பேசிய சந்திரன், "சாலையை மூடுவதற்கு கல்லூரி நிர்வாகம் தெரிவிக்கும் காரணம் விசித்திரமானது. அப்பகுதியில் உள்ள ஐ.டி. கம்பனிகளில் பணியாற்றும் காதலர்கள் இரவு நேரத்தில் அந்த சாலைகளுக்கு வருகிறார்களாம். போதை பொருட்கள் விற்பனையும் உள்ளதாம். அப்படி தவறுகள் நடக்கிறது என்றால், அந்த சாலைகளில் இரவுப்பணியில் காவலர்களை நிறுத்தி சட்டவிரோதச் செயல்களைத் தடுக்கலாம். அதை விடுத்து மக்கள் பயன்பாட்டில் உள்ள சாலையை ஏன் மூட வேண்டும்? கல்லூரி வளாகத்திற்குள் செல்லும் செகண்ட் கிராஸ் ஸ்ட்ரீட் சாலையை வேண்டுமானாலும் மூடிவிட்டு போகட்டும். டாக்டர் பவானி படேல் சாலையை ஏன் மூட வேண்டும்? உண்மையைச் சொல்லப்போனால் கல்லூரி வளாகத்தின் சுற்றுச்சுவர் அந்த சாலைக்கு முன்பே முடிந்து விடுகிறது. தவிர, அந்த சாலைக்கு அருகேயுள்ள விளையாட்டு மைதானத்தில் காலையில் வந்து விளையாடும் பணக்காரர்களை திருப்திப்படுத்தும் நோக்கில், பொதுமக்களின் பயன்பாட்டைத் தடுக்க முயற்சி நடக்கிறது. அதன்காரணமாக இதுபோன்ற இடையூறுகளை ஏற்படுத்துகிறார்கள். சாலை மூடப்படுவதைக் கண்டித்து, போராட்டம் நடத்திய எங்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எந்தப்பயனும் இல்லை" என்றார்.

இதுதொடர்பாக அரசு தொழில்நுட்பக் கல்லூரி இயக்குநர் ராஜேந்திர ரத்னூவை சந்தித்துப் பேசினோம். "இந்த சாலை பல ஆண்டுகளாக பயன்பாட்டில்தான் இருந்தது. இங்குள்ள கல்லூரிகளின் விடுதி மாணவ, மாணவிகளின் நலன்கருதிதான், இப்போது இந்த சாலை மூடப்படுகிறது. இந்தக் கல்லூரி வளாகம் மரங்கள் நிறைந்த பகுதி. அதனால் பலர், இரவு நேரங்களில் சமூக விரோதச் செயலில் ஈடுப்படுகிறார்கள். அதனைத் தடுக்கவும் மாணவர்களை கல்லூரியின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குறிப்பிட்ட இரண்டு சாலைகள் மட்டுமே மூடப்படுகின்றன. மற்ற சாலைகளை மூடவில்லை. ஒரு நல்ல நோக்கத்துக்காக இதுபோன்ற சலைகள் மூடப்படும்போது, மக்கள் சற்று தொலைவு பயணிக்க வேண்டி வருகிறது.மாணவர்களின் பாதுகாப்புக்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனை இப்போது எதிர்க்கும் மக்கள் பின்னர் புரிந்து கொள்வார்கள்." என்றார்.

மூடப்பட்ட சாலை

இரவு நேரங்களில் சமூகவிரோதச் செயல் நடைபெறுகிறது என்பதற்காக, பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தும் சாலைகளை மூடுவது எந்தவகையில் நியாயம்? மக்களின் நலன் கருதி அந்த சாலைகளை மூடாமல் இருப்பதுடன், சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக, இரவுநேர ரோந்துப் போலீசாரை நிரந்தமாக அங்கு அனுப்பி, உரிய நடவடிக்கை எடுத்தால், மக்கள் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close