Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

''உங்களுக்குத்தான் இது போலீஸ் ஸ்டேஷன், எங்களுக்கு ஸ்கூல்!'' - எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்தின் கதை

சென்னை எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட் பகுதி. அந்தச் சாயங்கால வேளையில் பரபரத்துக்கொண்டிருக்கிறது. காய்கறிக் கடைகளிலும் மீன் மார்க்கெட்டுகளிலும் பெருங்கூட்டம். அலுவலகம் முடிந்து வீட்டுக்குச் செல்பவர்கள் சாலையோரக் கடைகளில் கூறுபோட்டு விற்கும் பொருள்களை வாங்க ஒருவரையொருவர் முண்டியடித்துக்கொண்டு நிற்கிறார்கள். பக்கத்திலேயே ஆர்.10 போலீஸ் ஸ்டேஷன். பலரும் தங்கள் குறைகளோடு ஸ்டேஷனுக்குள் போகவும் வரவும் இருக்க... அங்குதான் நமக்கு அந்த ஆச்சரியம் காத்திருந்தது. 

போலீஸ் ஸ்டேஷன் வாசலில் இருக்கும் மைதானத்தைச் சுற்றிலும் உடைந்து நொறுங்கிய டூவீலர்களும் கார்களும் கிடக்க அதற்கு நடுவே, “டேய்...டேய்...டேய்...நீ அங்க போ... நீ இங்க வாடா... பந்த எத்துடா...” சத்தம்போட்டு உற்சாகமாக ஃபுட்பால், ஷெட்டில் கார்க் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்களைப் பார்த்ததும் ஆச்சரியம் கலந்த ஆர்வத்தோடு ஸ்டேஷனுக்குள் நுழைந்தோம். 

மாணவர்கள்

“அண்ணா, கொஞ்சம் தள்ளி நில்லுனா. வெளாடிட்டு இருக்குறது கண்ணுக்குத் தெரில” குரல் வந்த திசையில் பார்த்தால் ஒரு குட்டி பையன் நிற்கிறான். “அடேய், என்னடா அதட்டுற. அண்ணே பயந்துடுவேண்டா” என்று பேச்சுக்கொடுத்தபடியே அவனை அருகே அழைத்துப் பேசினேன். 

“அண்ணே, இது எந்த எடம் தெரியுதுங்களா, போலீஸ் ஸ்டேசன். உங்களுக்குதான் இது ஸ்டேசன். ஆனா, எங்களுக்கு ஸ்கூல். இது பேரு பாய்ஸ் கிளப். ஆனா, இங்க கேர்ள்சும் படிப்பாங்க”. எடுத்ததுமே குறும்பு கலந்து பேச ஆரம்பித்தவன் தொடர்ந்து, “என்னோட பேரு மணிகண்டன். எல்லாரும் மணி மணின்னு கூப்டுவாங்க. நான் இங்க ஆறாங்கிளாஸ் படிக்கும்போது வந்தேன். இப்போ எட்டாங்கிளாஸ் படிக்கிறேன். என்னப்பாத்தா எட்டாவது படிக்கிற பையன் மாதிரி தெரியலல்ல. ஹி ஹி ஹி ஆனா, நீங்க நம்பித்தான் ஆகணும் நான் எட்டாங்கிளாஸ்தான் படிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டான்.

மணிகன்டன் (போலீஸ் ஸ்டேஷன் முன்பு)

குறும்பும் குழந்தைத்தனமும் நிறைந்திருக்கும் மணிகண்டன் பேசும்போது, அவனை சுட்டிப் பையனாகவே நினைத்தேன். ஆனால், தந்தையை இழந்த அவன் வாழ்வு பெரும் சோகம் நிறைந்தது. டெய்லர் கடைக்கு வேலைக்குச் சென்று அவனையும் அவன் அக்காவையும் படிக்க வைக்கிறார் அவன் அம்மா. குடும்ப வறுமை காரணமாக பள்ளிப்படிப்பை நிறுத்த முயன்றபோது நம்பிக்கை கொடுத்தது எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்தில் செயல்பட்டு வரும் சிறார் சிறுமியர் மன்றம்தான். இந்த மன்றம் பற்றி அங்கு மாணவர்களைப் பராமரித்து வரும் ஆசிரியர் நாராயணனிடம் பேசினேன்.

போலீஸ் ஸ்டேஷனில் பயிற்சியாளர் நாராயணன்

“சென்னையிலுள்ள குடிசைப் பகுதிகளைச் சுற்றியுள்ள மக்கள் போதிய அளவு படிப்பறிவும் பொருளாதார வசதியும் இல்லாதவர்கள். தினம்தினம் கூலி வேலை பார்த்துதான் அவர்கள் பிள்ளைகளை வளர்க்கிறார்கள். காலையில் வேலைக்குச் செல்பவர்கள் ராத்திரியில்தான் வீடு திரும்புவார்கள். அவர்களில் பெரும்பாலான ஆண்கள் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிலும், அக்கம் பக்கத்தினரோடும் சண்டைபோடுறதுனால தன் வீட்டுப் பிள்ளைகளைப் பத்தின அக்கறையும், கண்டிப்பையும் காட்டுறது இல்ல. அதனால பகல்ல ஸ்கூல் போய்ட்டு மாலைல வீடு திரும்பற பசங்க அவங்க போக்குக்கு எங்கேயாவது சுத்திட்டு இருப்பாங்க.

சில பசங்க வீடுகளுக்கு தண்ணி கேன் போடுறது, போஸ்டர் ஒட்டப் போறது, ரிக்ஷா ஓட்டுறதுன்னு வாழ்க்கையை வீணடிச்சிடுறாங்க. அவங்களோட எதிர்காலத்தை பாதுகாக்கதான் குடிசைப் பகுதிகளிலுள்ள காவல் நிலையத்திலேயே மாலை நேர பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும் என்று 2005- ல் அரசு சிறார் சிறுமியர் மன்றத்தை அறிமுகப்படுத்தியது. இப்போது வரையிலும் சென்னையில் பல மன்றங்கள் செயல்பட்டு வந்தாலும் காவல் நிலையத்தோடு சேர்ந்து நடத்தப்படுற சிறார் சிறுமியர் மன்றம் இங்கு மட்டும்தான் செயல்படுது. இங்க படிக்க வர்ற ஒவ்வொரு பசங்களுக்குப் பின்னாலும் ஒவ்வொரு விதமான சோகம் ஒளிஞ்சிக்கிட்டு இருக்கு. அது எல்லாத்தையும் மறைச்சிக்கிட்டு எவ்வளவு சந்தோஷமா விளையாடுறாங்க பாருங்க'' என்கிறார் நாராயணன். 

லதா

“எம்பேரு லதா. தள்ளுவண்டியில காய்கறி வித்துக்கினு இருக்கேன். இதோ இவந்தான் எம்மவன் வசந்த். இவன விடுறதுக்காகதான் வந்தேன். இங்க வர்றதுக்கு முன்னால ஏரியாவாண்ட இருக்குற பசங்ககூட சேந்து சுத்திட்டு கெடந்தான். இப்போ ஒழுங்கா இருக்கான். அவனுக்குப் புடிச்சத வெளையாடுறான். நல்லாவே படிக்கிறான். ஸ்கூல்லயும் நல்ல பேரு வாங்குறான். ஆரம்பத்துல போலீஸ் ஸ்டேசன்ல மன்றம் இருக்குதேன்னு பயந்தேன். ஆனா, இங்க இருக்குற அதிகாரிங்கள்லாம் பசங்க மேல ரொம்ப அன்பா நடந்துக்குறாங்க. அவனும் வீட்டுல ஒருநாள் கூட இருக்க மாட்டான். இங்க ஓடிவந்துடுவான். என்னோட ஆசை எல்லாம் எம்புள்ள நல்லா படிச்சு பெரிய ஆளா ஆகணுங்கிறதுதான் சாமி” என்றார் லதா.

“நான் பத்தாங்கிளாஸ் படிக்கிறேண்ணா. இங்க பக்கத்துல ஜாபர்கான்பேட்டைதான் வீடு. அம்மா கார்ப்பரேசன்ல துப்புரவு வேலை பாக்குறாங்க. அப்பா கொத்தனாரா இருக்காரு. நான் எட்டாங்கிளாஸ்ல இருந்தே இங்க வர்றேன். இங்க வந்ததுக்கு அப்பறம்தான் நல்லா படிக்க ஆரம்பிச்சிருக்கேன்.  இப்போ பத்தாவதுங்கிறதுனால கொஞ்சம் அதிகமா படிக்கணும். நாராயணன் சாரும் எனக்கு நிறைய ஹெல்ப் பண்றாங்க. போலீஸ் ஸ்டேசன்ல இருக்குற போலீஸ் அதிகாரிங்களைப் பாத்து எனக்கும் போலீஸ் ஆகணும்னு ஆசை வந்துடுச்சு. நிச்சயம் நானும் போலீஸ் ஆவேன்” காலரைத் தூக்கி விட்டு கெத்தாக சொல்கிறான் சந்தோஷ். 

பாய்ஸ் கிளப்

இப்படி... இந்த மன்றத்தில் படிக்கும் சந்தோஷ் மட்டுமல்ல புருஷோத்தமன், பூபதி, தமிழரசு, ராம்குமார் என ஒவ்வொருவருக்குள்ளும் பல கனவுகள் நிறைந்திருக்கின்றன. அந்தக் கனவுகளுக்குப் பின்னால் பல வலிகளும் வேதனைகளும் ஒளிந்திருக்கின்றன. குடிசை மற்றும் சேரிப்பகுதிகளில் வாழ்வதால் சமூகப் புறக்கணிப்பு ஒருபுறம், அரசின் நலத்திட்டங்கள் எளிதில் கிடைக்காதது மற்றொருபுறம் என மாறி மாறி வதைபட்டுக்கொண்டிருக்கிறார்கள் இம்மக்கள். ஆனாலும், இவர்களுக்கெல்லாம் நம்பிக்கையை கொடுத்து அறிவுச்சுடரை ஏந்தி கம்பீரமாக நிற்கிறது எம்.ஜி.ஆர் நகரிலுள்ள ஆர்.10 காவல் நிலையம்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close