Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கத்திப்பாரா போராட்டம் - இயக்குநர் கெளதமன் மீது என்.எஸ்.ஏ. சட்டம் பாய்கிறதா?

கவுதமன்

டெல்லி விவசாயிகள் போராட்டத்தை மத்திய அரசு கண்டுகொள்ளாததைக் கண்டித்து, சென்னை கத்திப்பாரா பாலத்தில் பூட்டுப்போட்டு போராடிக் கைதான இயக்குநர் கெளதமன் மீது தேசியப் பாதுகாப்பு சட்டம்- என்.எஸ். ஏ.வின் கீழ் வழக்கு பாயலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

வறட்சி நிவாரணம் உட்பட பல வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தலைநகர் டெல்லியில் தமிழக விவசாயிகள் 30 நாள்களாகப் போராட்டம் நடத்தினர். மத்திய அரசின் சார்பில் போராடிய விவசாயிகளிடம் பேச்சு நடத்தவோ போராட்டத்தை முடிக்கக்கூறவோ எதுவுமே செய்யவில்லை. உச்சகட்டமாக ஆடைகளைக் களைந்து நிர்வாணமாகப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள், தமிழக விவசாயிகள். அப்போதும் மத்திய அரசு அசைந்துகொடுக்கவில்லை. இது தமிழக மக்கள் குறிப்பாக விவசாயிகளிடம் கொந்தளிப்பை உண்டாக்கியது. எல்லா மாவட்டங்களிலும் விவசாயிகளுக்கு எதிராக பல்வேறு அமைப்புகளும் கட்சிகளும் கட்சிசார்பற்ற இளைஞர்களும் மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அதன் ஒரு பகுதியாக, சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில், ஏப்ரல் 13 ஆம் தேதியன்று இயக்குநர் கெளதமன் தலைமையில் மாணவர்களும் இளைஞர்களும் திடீர் மறியலில் ஈடுபட்டனர். சாலையின் இரு முனைகளையும் இரும்புச்சங்கிலியை வைத்து இணைத்துக் கட்டியதால், வாகனங்கள் நகரமுடியாமல் அன்று காலையில் நெரிசல் நேரத்தில் 2 மணி நேரம் கடுமையான போக்குவரத்து முடக்கம் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஏழு பேரைக் கைதுசெய்த போலீசார், வழக்குரைஞரான பெண் ஒருவரை மட்டும் சொந்த ஜாமீனில் விட்டனர். மற்ற ஆறு பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். 

கீழ்நீதிமன்றத்தில் பிணை மறுக்கப்பட்ட அவர்களுக்கு, செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய பிணை வழங்கியது. பிணையில் வெளியே வந்த ஆறு பேரும் பரங்கிமலை போலீஸ்நிலையத்தில் இரண்டு வாரங்கள் தினமும் கையெழுத்திட்டனர். 

இயக்குநர் கெளதமனுக்கு விவகாரம் அத்தோடு முடியவில்லை. மெரினாவில் மே 21ஆம் தேதியன்று நடக்கவிருந்த அஞ்சலியில் மாணவர்கள், இளைஞர்களுடன் அவர் பங்கேற்று, கைதும் செய்யப்பட்டார். மாலையில் மற்ற 200க்கும் மேற்பட்டவர்களுடன் கவுதமனும் விடுவிக்கப்பட்டார். 

கவுதமன்

அதே நிகழ்வில் பங்கேற்று சிறையில் அடைக்கப்பட்ட மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டது. அதற்கு தமிழ், தமிழர் உணர்வு அமைப்புகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன. 

இந்நிலையில் கத்திப்பாரா போராட்டத்தில் முன்னின்ற இயக்குநர் கெளதமன் மற்றும் இளைஞர்கள்மீது கடுமையான வழக்குகள் பதியப்படும் எனப் போலீஸ் துறையிலிருந்து தகவல் வெளிவந்தது. இதையொட்டி உயர் நீதிமன்றத்தைக் கெளதமன் அணுக, அவர்மீது அப்படி எதுவும் நடவடிக்கை எடுக்கப்படாது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

ஆனால், திடீரென ஜூன் 13 மாலை 4 மணிக்கு கெளதமன் விசாரணைக்கு வரவேண்டும் என்று சென்னை மத்திய குற்றப்புரிவு போலீசாரிடமிருந்து அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினா கடற்கரையில் அவர் பேசியது தொடர்பாகவே இந்த விசாரணை அழைப்பு என்று கூறப்படுகிறது. 

மெரினா போராட்டத்தில் ஒரு முறை கெளதமன் பேசுகையில், தமிழகத்தை மத்திய அரசு புறக்கணித்துவருவதும் தமிழர், தமிழ்நாட்டுக்கு எதிராக நடந்துகொள்வதும் தொடரும்நிலையில், ”உனக்கு எங்களைப் பிடிக்கவில்லையென்றால் சட்டரீதியாக பிரிந்துபோவதற்கான பொதுவாக்கெடுப்பை நடத்து” என கெளதமன் பேசினார்; அதற்காக அவர்மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் - என்.எஸ்.ஏ.வின் கீழ் வழக்கு பதியப்படும் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதையொட்டி, கெளதமன் முன்னர் பங்கேற்ற போராட்டப் பேச்சுகளின் ஆதாரங்களைப் போலீஸ் தரப்பில் திரட்டிவருகின்றனர் என்றும் கூறப்படுகிறது. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close