Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தீபா, மாதவனை சுற்றி என்னதான் நடக்கிறது?

தீபா

ஜெயலலிதாவின் இறப்புக்குப் பின், அவரது அண்ணன் மகள் ஜெ. தீபா தமிழக அரசியலில் காலடி வைத்தார். போதிய நிர்வாகத் திறமை, ஆளுமை இல்லாததால் தீபாவை நம்பிச்சென்ற தொண்டர்கள் தற்போது அவருடன் இல்லை. வேறு அணிக்குச் சென்று விட்டனர். கணவர் மாதவனோ புதிய கட்சி ஆரம்பித்து விட்டதாகச்சொல்லி தனியாக வசித்து வருகிறார். இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வருகிறார்கள். இவர்களுக்குள் கட்சி சம்பந்தமாகவோ அல்லது குடும்பம் சம்பந்தமாகவோ பேச்சுவார்த்தை இல்லை. ஆனால், அவர்கள் இருவரும் மீண்டும் ஒன்றாக சேர்ந்து இருக்கவேண்டும் என விரும்புகிறார்கள். அதுவே இருவரின் விருப்பமுமாக உள்ளது.

'எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை' என்ற பெயரில் தனியாக ஒரு அமைப்பைத் தொடங்கி, அதன் சார்பில் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடவும் செய்தார் தீபா. பேரவை தொடங்கிய நாள்முதலே ஏகப்பட்ட பிரச்னைகள். கட்சி நிர்வாகிகள் அறிவிப்பில் ஏராளமான குளறுபடிகள். அதனால், அந்தப்பேரவையை விட்டு பல தொண்டர்கள் வெளியேறிவிட்டனர். "எந்த நம்பிக்கையில் நாங்கள் தீபாவின் பக்கம் வந்தோமோ, அந்த நம்பிக்கையில் துளியளவுகூட தற்போது அவரிடம் இல்லை"  என்பது பலரின் குற்றச்சாட்டாக உள்ளது. 

தீபா

இந்தநிலையில், தீபாவின் அரசியல் தொடர்பான எந்த நடவடிக்கையும் அவரது கணவர் மாதவனுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. தீபாவும் கட்சி தொடர்பான எந்த ஆலோசனையும் மாதவனுடன் கேட்பதில்லை. தீபா பேரவை நிர்வாகப் பொறுப்புகளை மின்னல் ராஜாவிடம் ஒப்படைத்தார். இதில்தான் தீபாவுக்கும், கணவருக்கும் பிரச்னை ஆரம்பித்தது. அது, கட்சியிலும், வீட்டிலும் எதிரொலித்தது. மாதவன் எவ்வளவோ சொல்லியும், மின்னல் ராஜாவின் செயல்பாடுகளைத் தடுக்க தீபா தயாராக இல்லை. இதனால், மாதவனுக்கும், தீபாவுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. "என்னையும், தீபாவையும் பிரிப்பதற்கு எங்களைச் சுற்றி பல சதிவேலைகள் நடந்துகொண்டு இருக்கின்றன. அவர்களின் நோக்கம் என்னை எப்படியாவது தீபாவிடம் இருந்து பிரித்துவிட வேண்டும் என்பதுதான். பின்பு கட்சி பேரை வைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதே. அவ்வளவு ஏன், ஓ.பன்னீர்செல்வத்தை தீபா பார்க்கப்போனதுகூட எனக்குத் தெரியாது. இங்குள்ள நபர்கள் அந்தத் தகவலை எனக்குத் தெரியாதபடி மறைத்துவிட்டனர்" என மாதவன் பேட்டியளித்தார். இந்தப் பேட்டியால் மாதவனை அனைவருமே தனியாக ஒதுக்க ஆரம்பித்தனர். ஒருகட்டத்துக்குமேல் தீபா பேரவையில் யாருமே மாதவனை மதிக்கவில்லை. இதனால் தீபாவுக்கும், மாதவனுக்கும் கருத்துவேறுபாடு அதிகரித்தது. இதைச் சிலர் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்தனர். தீபா பேரவையில் பொறுப்பு கிடைக்காதவர்கள் மாதவனை தூண்டிவிட்டனர். தீபாவால் காரியம் சாதித்துக்கொள்ள துடிக்கும் சிலர், மாதவனைப் பற்றி தீபாவிடம் தவறாகச் சொல்லிக்கொண்டே வந்தனர். இதையடுத்தே, தனியாக கட்சி ஆரம்பிக்கபோகிறேன் என்று தீபா பேரவையை விட்டு மாதவன் வெளியேறினார்.

தீபா மற்றும் மாதவன்

அதன்பிறகு, தீபாவுக்கும், மாதவனுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என இருதரப்பு தொண்டர்களும் சொல்லிவந்தனர். ஆனால் மாதவனிடம் எப்போது கேட்டாலும், 'தீபாவை முதலமைச்சராக ஆக்கியே தீருவேன்' என்றுதான் சொல்லிவந்தார். ஆனால் மாதவன் மீது தொடர்ந்து கோபத்திலேயே இருந்துவந்தார் தீபா. கடந்த ஞாயிற்றுக்கிழமை போயஸ் கார்டனுக்கு தீபா சென்ற பிரச்னையில், அவரது சகோதரர் தீபக், "யாருக்கும் தெரியாமல் நீ மட்டும் தனியாக போயஸ் கார்டனுக்கு வா" என்று கூறினாராம். ஆனால், தீபாவோ தனது கணவருக்குத் தெரிவித்ததுடன், அவரை போயஸ்கார்டனுக்கு வரச்சொல்லி இருக்கிறார். அப்போது நடந்த 'தள்ளுமுள்ளு'-க்கு இடையே தீபாவின் வாகன ஓட்டுநர் ராஜா, மாதவனை கடுமையாக விமர்சித்துள்ளார். ஆனால், தீபா அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், அங்கிருந்த காவல்துறையினர் மீதும் கடுமையாகப் பேசினார். இதில் இருந்து தீபா - மாதவன் இடையே கருத்துவேறுபாடு ஏதுமில்லை என்பது வெட்டவெளிச்சமானது.

எம்.ஜி.ஆர், அம்மா தீபா பேரவையைக் காரணம்காட்டி, தீபாவும், மாதவனும் பிரிந்து இருக்கிறார்கள் என்பதைவிட, பிரித்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே உண்மை!


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close