Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கங்கை தீர்த்தம் வாங்கச் சொன்ன தபால் அலுவலக ஊழியை! அதிரடித்த நீதிமன்றம்


நெல்லை தலைமை தபால் அலுவலகத்தில் மீதி பணத்தை கொடுக்காமல் பெண் ஊழியர் தகராறு செய்துள்ளார். இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு 6,075 ரூபாய் கொடுக்க நுகர்வோர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. 
  
நெல்லை ஸ்ரீபுரத்தில் தலைமை தபால் அலுவலகம் உள்ளது. இங்கு கடந்த 27.08.2016ல் பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா சென்று பதிவு தபால் ஒன்றை அனுப்பி உள்ளார். அதற்கு கட்டணமாக  பெண் ஊழியர் ஒருவர், 25 ரூபாய் கேட்டுள்ளார். உடனே பிரம்மா, 100 ரூபாயை கொடுத்துள்ளார். அதற்கு அந்த பெண் ஊழியர் சில்லறை இல்லை என்று கூறியதோடு, 25 ரூபாய் கொடுத்து 100 ரூபாயை வாங்கி கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த சக ஊழியர்கள் இருவரையும் சமரசப்படுத்தியுள்ளனர். இதன்பிறகும் மீதி பணம் 75 ரூபாய் வழங்கப்படவில்லை.

இதனால், பிரம்மா, தபால் அலுவலகத்திலிருந்த புகார் புத்தகத்தில் மீதிப்பணம் கொடுக்காத தகவலைப் பதிவு செய்துள்ளார். இதையடுத்து தகவல் உரிமை சட்டத்தின் கீழ் மீதி பணம் குறித்த தகவலை கேட்டுள்ளார் பிரம்மா. அதற்குப் பதிலளித்த தபால்துறை, 75 ரூபாய் பணம் அன்றைய தேதியில் கூடுதலாக தபால் அலுவலக கணக்கில் வரவு வைக்கப்பட்டதாக தகவல் அனுப்பியது.இந்த ஆதாரத்துடன் நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் பிரம்மா, கடந்த 2016 நவம்பரில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணை நடந்து வந்தது.

நுகர்வோர் நீதிமன்றத் தலைவர் நாராயணசாமி, உறுப்பினர் ராணி ஆகியோர் இன்று பரபரப்பான தீர்ப்பை அளித்தனர். அதில், 'நெல்லை தலைமை தபால் அதிகாரிகள், நுகர்வோருக்கு சேவை குறைபாடு செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. நுகர்வோரை சில்லறை மாற்றி வரச் சொன்னதும், கங்கைத் தீர்த்தம் வாங்க கட்டாயப்படுத்தியதும் சேவை குறைபாடுதான். இதனால், மனுதாரரின் மன உளைச்சலுக்கு 4 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடும், வழக்கு செலவு 2,000 ரூபாயும், மனுதாரருக்கு மீதம் கொடுக்க வேண்டிய தொகை 75 ரூபாயும் சேர்த்து மொத்தம் 6,075 ரூபாயை ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில் 6 சதவிகித வட்டியோடு சேர்த்து பணம் வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டனர். 

இதுகுறித்து வழக்கறிஞர் பிரம்மா கூறுகையில், "சம்பவத்தன்று நான், ஆர்.டி.ஐயில் தகவல் கேட்டு சென்னை தலைமை செயலகத்துக்கு பதிவு தபால் அனுப்பினேன். அப்போது, என்னிடம் பதிவு கட்டணத் தொகையான 25 ரூபாய் சில்லறையாக இல்லை. 100 ரூபாய் கொடுத்ததற்கு அங்கிருந்த பெண் ஊழியர், என்னை மன உளைச்சல் ஏற்படுத்தும் வகையில் பேசினார். மீதித்தொகைக்காக கங்கை தீர்த்தத்தை வாங்கவும் கட்டாயப்படுத்தினார். இதுதொடர்பாக நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்குக்கு நல்லதொரு தீர்ப்பு கிடைத்துள்ளது. இது, நுகர்வோருக்கு கிடைத்த வெற்றி. இது, நுகர்வோரை மன உளைச்சல் ஏற்படுத்துபவர்களுக்கு நல்லதொரு பாடமாகும்"என்றார். 

 

   

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close