Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“இனயம் துறைமுகம் குமரி மாவட்டத்துக்கு வேண்டாம்!" கலங்கும் மக்கள் #VikatanExclusive

இனயம் துறைமுகம் - குமரி மாவட்டம்

கிழக்குக் கடற்கரையையும்,மேற்குக் கடற்கரையையும் கொண்ட மாவட்டம் கன்னியாகுமரி. கிழக்குக் கடற்கரையில் ஆரோக்கியபுரம் முதல் மேற்குக் கடற்கரை நீரோடி வரை 42 மீனவக் கிராமங்கள் இருக்கின்றன. கடற்கரைச் சோதனைச் சாவடிகளான சின்னமுட்டம், மாதவபுரம், மகாதானபுரம், முட்டம், குளச்சல், தேங்காப்பட்டணம் என ஆறு சாவடிகள் இருக்கின்றன.

கன்னியாகுமரி மாவட்ட மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் கடற்சீற்றம் அதிகமாகக் காணப்படுகிறது. இதனால், மணல் அரிப்பு ஏற்பட்டு கடற்கரையில் அமைந்துள்ள வீடுகள் கடலினுள் இழுத்துச் செல்லப்படுகின்றன. கடல் மண் அரிப்பைத் தடுக்கவும் கடல் அலை வேகத்தைக் குறைக்கவும் மீனவர்கள் பாதுகாப்பான தடுப்புச்சுவர் மற்றும் தூண்டில் வளைவு அமைத்துத் தர அரசிடம் பலமுறை கோரிக்கைகள் வைத்தனர். ஆனால், அரசுத் தரப்பில் தரமற்றச் சிறிய ரக பாறைக் கற்களைக் கொண்டு கடலின் ஓரம் அடுக்கி... அலை தடுப்புச்சுவர் அமைத்து வந்தனர். நாளடைவில் அலையின் சீற்றம் சற்று அதிகரிக்கும்போது அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் பாறைகள் கடலினுள் இழுத்துச் செல்லப்படுகின்றன. மீண்டும் கடல் அரிப்பு ஏற்பட்டு வீடுகள் இழுத்துச் செல்லப்படுவது வழக்கம். இதனால் அரசுக்குப் பெருத்த இழப்பு ஏற்படுவதைத் தவிர, எந்தவித பயனும் இல்லை. கடந்த சில நாள்களுக்கு முன் வள்ளவிளை பகுதியில் திடீரென ஏற்பட்ட கடற்சீற்றத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து கடலினுள் இழுத்துச் செல்லப்பட்டன. இடிந்த வீடுகளைத் தொடர்ந்து, வரிசையில் இருந்த வீடுகளும் இடிந்துவிழும் நிலையில் உள்ளன. இந்த வீடுகளைப் பாதுகாக்க மீனவர்கள் சாக்குப்பைகளில் மணல் நிறைத்து அரிப்பைத் தடுத்துவருகின்றனர்.

''குமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் அருகே உள்ளது அரையன்தோப்பு கடற்கரைக்  கிராமம். இது, சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாகக் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் கடல்  சீற்றம்  ஏற்படுகிற நேரங்களில் இந்தக்  கிராமத்தில்  சாலை உடைப்புகள் ஏற்படுவதும், சாலையில் மணல்  குவியல் ஏற்பட்டுப் போக்குவரத்து  தடைபடுவதும், குடிநீர்,  மின் இணைப்புகள் துண்டிக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. தேங்காப்பட்டணம் மீன்பிடித்  துறைமுகத்துக்கு அருகில்  அமைந்துள்ள அரையன்தோப்பு  கிராமம் வழியாகத்தான் மீனவர்களும் மீன்பிடித்  துறைமுகத்துக்குச் சென்று வருகின்றனர். ஆனால், கடல் அரிப்பு ஏற்பட்டுச் சாலை துண்டிக்கப்படும்போது மீனவர்கள் பல கிலோ  மீட்டர்  தூரம் பயணம் செய்து  துறைமுகம் செல்லவேண்டியிருக்கிறது. வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கிவிட்டால் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் கடல்  சீற்றம்  அதிகரிக்கும். சில வேளைகளில், மே மாதத்தில்கூடக் கடல் சீற்றம் அதிகம் ஏற்படுவதுண்டு.

அரையன்தோப்பு பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாகப் பலமுறை கடல்  அரிப்புத் தடுப்புச்சுவர்  அமைக்கும் பணிகள் நடைபெற்றன. மாவட்ட ஆட்சியர், எம்பி., எம்எல்ஏ., மத்திய, மாநில  அரசுகள் ஆகியவற்றின் நிதிகள்மூலம் ஆண்டுதோறும் ஏதாவது ஒரு வேலை  நடைபெறுவது வழக்கம். அவை  அனைத்தும் சீரமைத்த சில மாதங்களில் கடலில் அடித்துச் செல்லப்படுவது  வாடிக்கை. எத்தனை  முறை  அடித்துச் செல்லப்பட்டாலும் இது தொடர்பாக மாவட்ட நிர்வாகமோ, அரசோ, துறைகளோ கண்டுகொள்வதில்லை. தரம்  குறைந்த  கற்கள்கொண்டு மீண்டும் மீண்டும் பணிகள்  செய்வது தொடரும். கடைசியாக  நிரந்தரத் தீர்வு காணும் வகையில் 15 கோடி ரூபாய் மதிப்பில் அரையன்தோப்பு, முள்ளூர்துறை, ராமன்துறை போன்ற  இடங்களில் சுமார் 120  மீட்டர் நீளத்தில் மூன்று  தூண்டில்  வளைவுகள்  அமைக்கப்பட்டன. தற்போது மீன்பிடித்  துறைமுகம் பணிகள்  செய்யும் ஒப்பந்ததாரர்கள் இந்தப்  பணியைச்  செய்தனர். ஆனால், பணிகள் முடித்த இரண்டு மாத காலத்துக்குள் அந்தத் தூண்டில் வளைவுகள் சுமார் 70  மீட்டர் தூரத்துக்கு மேல் கடலில் அடித்துச் செல்லப்பட்டது. இப்போது, அரையன்தோப்பில் சுமார் 60  மீட்டர் தூரம் மட்டுமே தூண்டில் வளைவு  காணப்படுகிறது. மற்ற  பகுதிகளில்  50  மீட்டர் தூரத்துக்கும் குறைவாகக் காணப்படுகிறது. அமைக்கப்பட்ட மூன்று தூண்டில் வளைவுகளும் சரியான  முறையில் இருந்திருந்தால், தற்போது அரையன்தோப்பு  பகுதியில்  கடல் அரிப்பு  ஏற்பட்டிருக்காது.

நிர்ணயித்த அளவில், எடையில் கற்கள்  அடுக்காத காரணத்தால்தான் இதுபோன்ற சம்பவங்கள்  நடக்கின்றன. தேங்காப்பட்டணம் பகுதியில் நடைபெறும் கடல் அரிப்பு தடுப்புச் சுவர், தூண்டில் வளைவு பணிகள், துறைமுகப் பணிகள், மணல் அள்ளும் பணிகள்   போன்றவற்றில் அதிகாரிகள், ஒப்பந்ததாரர் உடந்தையுடன் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இதுதொடர்பாக நேர்மையான அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்த வேண்டும்'' எனவும்  அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துவருகிறார்கள்.

குமரி மாவட்டத்தில் கடற்கரையோரக் கிராமங்களில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்களும் பீதி அடைந்துள்ளனர். கடலில் சுமார் 14 அடி உயரத்துக்கு அலைகள் எழும்புகின்றன. கடல் சீற்றத்தால் சொத்தவிளை பகுதியில் கடல் அரிப்பும் ஏற்பட்டுள்ளது. மணக்குடி செல்லும் கடற்கரைச் சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரம் அரித்து கடலுக்குள் சென்றுவிட்டது. இதனால் கடற்கரைச் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வாகனத்தில் செல்பவர்கள் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடலரிப்பினால் பாதிக்கப்படும் குமரி மாவட்ட மீனவ மக்களின் சிரமத்தைப் போக்கும்வகையில் கடும் முயற்சி மேற்கொண்டு மார்த்தாண்டம் துறை, வள்ளவிளை, இரவிபுத்தன் துறை, சின்னத்துறை, தூத்தூர், பூத்துறை, கிழக்கு இனையம் புத்தன்துறை, மேற்கு இனையம் புத்தன்துறை, முள்ளூர்துறை, ராமன் துறை, புத்தன்துறை, இனையம் மேல்மிடாலம், கீழ்மிடாலம், மண்டைக்காடு புதூர், பெரியவிளை, சின்னவிளைதுறை, கடியப்பட்டணம், பள்ளம்துறை, கிழக்கு கீழமணக்குடி, சின்னமுட்டம், வட்டக்கோட்டை ஆகிய 22 கிராமக் கடலோரப் பகுதிகளில் மத்திய அரசின் ஹட்கோ உதவியுடன் கடலரிப்புத் தடுப்புச்சுவர் கட்ட  31 கோடியே 81 லட்சம் ரூபாயில் திட்ட அனுமதி பெற்று வேலை தொடங்கி நடைபெற்றுவருகிறது.

கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார்இதுதொடர்பாகக் கிள்ளியூர் தொகுதி  எம்எல்ஏ., ராஜேஷ்குமார், ''நான் எம்எல்ஏ ஆன பிறகு மூன்று முறைக்கு மேல் சட்டமன்றத்தில் கடலரிப்பு பிரச்னை குறித்துப் பேசியுள்ளேன். நீரோடிமுதல் இரயுமன்துறைவரை உள்ள எட்டு மீனவக் கிராமங்களிலும் மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் அலைசீற்றம் அதிகம் காணப்படும். இந்த நேரங்களில் கடற்கரைக் கிராமங்களில் உயிர்ச்சேதம் ஏற்படுகிறது. குடியிருப்புகள் இடிந்துவிழுகின்றன. மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, மீனவக் கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்குப் போர்க்கால அடிப்படையில் அரசு மாற்று இடங்கள் தேர்வுசெய்து வீடு கட்டித்தர வேண்டும். ஒவ்வொரு மீனவக் கிராமத்திலும் 50 மீட்டர் தூரத்துக்கு ஒரு தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் எனச் சட்டமன்றத்தில் பேசியுள்ளேன். ஆனால், அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

தற்போது மத்திய அரசு தமிழகத்தில் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டிக்கொடுக்கும் திட்டத்துக்கு நிதி ஒதுக்கியுள்ளது. 'அதில், இடம் குறைவாக இருந்தால் அடுக்குமாடிக் குடியிருப்பு அமைக்கலாம்' எனக் கூறப்பட்டுள்ளது. அதுபோல் அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டி மீனவர்களுக்கு வழங்கலாம். பாதிக்கப்பட்ட இடங்களை வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வுசெய்து, கடல் அலைகள் தாக்குதலுக்கு உள்ளாகும் பகுதியில் வசிக்கும் மக்களுக்குப் பாதுகாப்பான இடத்தில் புதிய வீடு கட்டித்தர வேண்டும். இதற்கான பணிகளை உடனே தொடங்க வேண்டும். நான் சட்டமன்றத்தில் இதுதொடர்பாகப் பேசியுள்ளேன். ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே, இனிமேலும் இதுபோன்று நடக்காமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்றார்.

கடலரிப்பு அதிகம் உள்ள கடற்கரைப் பகுதிகளில்தான் இனையம் துறைமுகம் வர இருக்கிறது. அதற்காக மீண்டும் கற்களையும், மணலையும் போட்டு நிரப்பினால் இன்னொருபுறம் கடல் நீர் முன்னேறிவந்து அழிக்கும் என குமரி மக்கள் பயப்படுகிறார்கள்.ஒவ்வொரு மணிநேரத்துக்கு ஒருமுறை கடல், நிலப்பரப்புக்குள் வந்துகொண்டிருக்கிறது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close