Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“உங்களின் இரண்டு நிமிடம் ஒருவரின் வாழ்க்கையை மாற்றலாம்!” - ஏற்றம் தரும் ‘மாற்றம்’ #VikatanExclusive

சென்னை ரெட்டேரியைச் சேர்ந்தவர் ஜெயந்தி. ப்ளஸ் டூ-வில் 1,140 மார்க். அப்பாவுக்குக் கூலிவேலை. குடும்பத்தைக் கவ்வியிருந்தது வறுமை. ``சாப்பாட்டுக்கே கஷ்டம். படிப்புக்கு எங்கே போறது?" என அப்பா கைவிட, கிடைத்த ஒரு சிறிய வேலைக்குச் செல்லத் தொடங்கினார் ஜெயந்தி. 'மாற்றம்' அவருக்குக் கைகொடுத்தது. இன்று, ஆண்டுக்கு 4.25 லட்சம் ரூபாய் சம்பளத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினீயர்.

மதுரையைச் சேர்ந்தவர் உமா. அம்மா இல்லை. அப்பாவின் வருமானம் அவரின் குடிக்கே போதவில்லை. இரு தங்கைகள். இருவரையும் படிக்கவைக்க, தன் கனவுகளை முடக்கிக்கொண்டவரை மீட்டு, படிக்கவைத்தது 'மாற்றம்'. இப்போது பெங்களூரில் ரோபோடிக்ஸ் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக இருக்கிறார் உமா. வருடச் சம்பளம் 4.50 லட்சம்.

சென்னையைச் சேர்ந்த முகுந்தனும் ராஜ்குமாரும் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பொறியாளர்களாகப் பணியாற்றுகிறார்கள். முகுந்தனின் தந்தை ஆட்டோ டிரைவர். ராஜ்குமாரின் தந்தை சலவைத் தொழிலாளி. ப்ளஸ் டூ-வில் அதிக மதிப்பெண் பெற்றும் தொடர்ந்து படிக்க முடியாமல் தவித்த இருவரையும் தத்தெடுத்து உயர்கல்வியை வழங்கியதோடு, அவர்களின் வாழ்க்கையையும் மாற்றியிருக்கிறது 'மாற்றம்'.

தாம்பரம் ரயில்நிலையத்தில் கடலைமிட்டாய் விற்றுக்கொண்டிருந்தார் சுகுணா. ஐந்து வயதில் வந்த அம்மைநோய் விழிகளின் வெளிச்சத்தைப் பறித்துக்கொண்டது. கணவருக்கும் பார்வை இல்லை. இரண்டு குழந்தைகள். வாழ்க்கை நெடுகிலும் பல்வேறு துயரங்களை எதிர்கொண்டபடி தவித்து நின்ற சுகுணா, இப்போது சர்வதேசப் பள்ளி ஒன்றில் தமிழ் ஆசிரியை, ஐந்திலக்கச் சம்பளத்தில்.
இப்படி, விளிம்பில் தவித்து நின்ற பல நூறு பேரின் வாழ்க்கையை மாற்றி பிரகாசப்படுத்தியிருக்கிறது 'மாற்றம்' அமைப்பு (www.maatramfoundation.com). இந்தியாவின் பிரபல நிறுவனங்களில் பணிபுரியும் மனிதவள அதிகாரிகள் ஒன்றிணைந்து இந்த அமைப்பை நடத்துகிறார்கள். கல்வி, வேலைவாய்ப்பு, சுயதொழில் எனப் பல தளங்களில் செயலாற்றுகிறது இந்த அமைப்பு.

மாற்றம்

பெற்றோர் இல்லாத, படிக்க வசதியற்ற மாணவர்களைத் தேர்வுசெய்து தமிழகத்தில் உள்ள டாப் ரேங்க் கல்லூரிகளில் முற்றிலும் இலவசமாகப் படிக்கவைக்கிறார்கள். ஒவ்வொரு மாணவருக்கும் ஒருவரை 'மென்டராக' நியமித்து, ஆலோசனைகள் சொல்லி வழிநடத்துவதோடு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளையும் கொடுத்து தகுதியோடு வளர்த்தெடுக்கிறார்கள். படிப்பு முடிந்ததும், அவர்களது முனைப்பிலேயே பெரும் நிறுவனங்களில் பணியையும் பெற்றுத்தருகிறார்கள். மாற்றத்தின் அரவணைப்புடன் இதுவரை 337 மாணவர்கள் உயர்கல்வி படித்துவருகிறார்கள். இந்த ஆண்டு மட்டும் 200-க்கும் மேற்பட்ட மாணவர்களைத் தத்தெடுத்திருக்கிறது இந்த அமைப்பு.

இந்த அமைப்பின் நிறுவனர்,  இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை மனிதவளத் துறை அதிகாரி சுஜித்குமார். நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களைக் கடந்து போகாமல், நம்மால் முடிந்த எதையாவது செய்வதில் பலருக்கு மாற்றம் நிகழ வாய்ப்பிருக்கிறது. இதை நம்புகிறார் சுஜித். அவர்,  மதுரையில் ஒரு கல்லூரியில் ‘கரியர் கைடன்ஸ் கவுன்சலிங்’ வழங்கச் சென்ற தருணத்தில்தான் ‘மாற்ற’த்துக்கான விதை விழுந்திருக்கிறது. 

சுஜித்குமார்

" 'நம்மளோட ரெண்டு நிமிஷத்தை ஒருத்தருக்காகச் செலவு செஞ்சா, அவரோட வாழ்க்கையை மாற்ற முடியும்'ங்கிறது என் அனுபவம். அந்த அனுபவத்துல முளைச்சதுதான் 'மாற்றம்'. உமாவை நான் அஞ்சு வருஷங்களுக்கு முன்னாடி மதுரையில் சந்திச்சேன். 'ப்ளஸ் டூ-வில் 1,154 மார்க் வாங்கியிருக்கேன். செலவு கம்மியா, படிப்பை முடிச்ச உடனே வேலை கிடைக்கிற மாதிரி ஒரு படிப்பைச் சொல்லுங்க சார்'ன்னு கேட்டாங்க. குடும்பச்சூழலை விசாரிச்சேன். 'அம்மா இல்லை. அப்பா குடிகாரர். ரெண்டு தங்கைகள் இருக்காங்க. அவங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக் கொடுக்கணும்'ன்னு நிறைய கனவுகளோடு பேசினாங்க. அந்தப் பெண்ணோட கதை, ரொம்பவே மனதைத் தைச்சுச்சு. 

அலுவலகம் வந்து என்கூட வேலை செய்யற நண்பர்கள்கூட பேசிக்கிட்டிருந்தேன். 'நாமளும் இப்படியான ஒரு குடும்பச்சூழல்லதான் பிறந்தோம். வாய்ப்புகள் அமைஞ்சது. நல்ல நிலையில் இருக்கோம். இந்தச் சமூகத்துல நாம யாருக்காவது நம்பிக்கை கொடுக்கணுமில்லையா... என்ன செய்யலாம்?'ன்னு பேசினோம். மனிதவளத் துறையில் இருக்கிறதால், நிறைய கல்லூரிகளுடன் தொடர்பு இருக்கு. ஏதேனும் ஒரு கல்லூரி சேர்மன்கிட்ட பேசி உமாவுக்கு இலவசமா ஒரு சீட் வாங்கிக் கொடுக்கலாம்னு முடிவுசெஞ்சோம். சென்னையில இருக்கிற ஒரு டாப் ரேங்கிக் கல்லூரியோட சேர்மன்கிட்ட கேட்டேன். அவர், `ஒரு சீட் என்ன... அந்த மாதிரி மாணவர்களை அழைச்சுட்டு வாங்க... 20 சீட் இலவசமா தர்றேன்'னு சொன்னார். அவர் கொடுத்த நம்பிக்கைதான் பொறி... ஃபேஸ்புக்ல எழுதினோம். தெரிஞ்சவங்கக்கிட்ட பேசினோம். மெயில் ஐடி கொடுத்து அப்ளை பண்ணச் சொன்னோம். 17 மாணவர்களைக் கண்டுபிடிச்சோம். அத்தனை பேருமே, பொருளாதாரச் சிக்கல் காரணமா மேல படிக்க முடியாம, கிடைச்ச வேலைக்குப் போற நிலையில் இருந்தவங்க.

கல்லூரியில் சேர்த்துவிட்டதோடு இல்லாம, அவங்ககூட தொடர்ச்சியா தொடர்புல இருந்தோம். அவர்களின் கம்யூனிகேஷன் ஸ்கில்லை வளர்த்தோம். பெரிய பெரிய ஆளுமைகளை எல்லாம் அழைச்சுட்டுப்போய் அவங்ககூடப் பேசவெச்சோம். அந்த 17 பேரும் இந்த வருஷம் பெரிய பெரிய கம்பெனிகள்ல நல்ல சம்பளத்துல பிளேஸ் ஆகிட்டாங்க. 

அந்தப் பிள்ளைகள் கொடுத்த உற்சாகம்தான்... அடுத்தடுத்த ஆண்டுகள்ல இன்னும் தீவிரமா வேலைசெஞ்சோம். ஒருகட்டத்துல நிறைய மாணவர்கள் வரத் தொடங்கினாங்க. தேர்வுமுறைகளை முறைப்படுத்தவேண்டியிருந்தது. அப்பதான் `மாற்றம்’ன்னு ஓர் அமைப்பா ஒருங்கிணைஞ்சோம்"  - விரிவாகப் பேசுகிறார் சுஜித்குமார்.

தமிழகத்தில் உள்ள 23 பொறியியல், கலை-அறிவியல், கேட்டரிங் கல்லூரிகளோடு ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள். எல்லாம் டாப் ரேங்கிங் கல்லூரிகள். ப்ளஸ் டூ தேர்வு முடிந்து முடிவுகள் வெளிவந்ததும் மாணவர்களைத் தேர்வுசெய்கிறார்கள். பல கட்டத் தேர்வு... பிறகு அவர்களின் மதிப்பெண், ஆர்வத்தின் அடிப்படையில் கல்லூரிகளை ஒதுக்கீடு செய்கிறார்கள். மெஸ், டியூஷன், புத்தகங்கள், ஹாஸ்டல் என எதற்கும் கட்டணம் இல்லை

புனிதா

"மாணவர்களுக்குப் படிப்பு கொடுத்து, வேலை கொடுப்பது மட்டும் எங்க வேலை இல்லை. படிப்புங்கிறது வேலைக்கானது மட்டுமில்லைன்னு அவங்களுக்குப் புரியவைக்கிறோம். மாற்றம் மூலமா படிக்கிற மாணவர்கள் தேசத்தோட மாற்றத்துக்கு துணை நிற்கணுங்கிறதுதான் எங்க இலக்கு. முதல்ல அவங்களுக்குள்ள லட்சியத்தை வளர்க்கிறோம். முன்மாதிரிகளை அவங்க முன்னாடி நிறுத்தி, `இதுல நீங்க யார் பாதையில் போக விரும்புறீங்க?'ன்னு கேட்கிறோம். வெற்றியாளர்கள், சாதனையாளர்களை எல்லாம் அழைச்சுட்டு வந்து அனுபவங்களைப் பகிர்ந்துக்கவைக்கிறோம். படிப்பை முடிச்சுட்டு, ஏதாவது ஒரு கம்பெனியில் போய் வேலைக்கு நிற்காம, தொழில்முனைவோரா மாத்துறது, கண்டுபிடிப்பாளர்களா உருவாக்குறதுன்னு சுயதேடலை உருவாக்குறோம். 

இதோ இந்தப் பையன் சரத், 192.5 கட்-ஆப் எடுத்தவன். அப்பா கொத்தனார். பத்தாம் வகுப்புல ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்தவன். `கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் படிக்கிறியா?'ன்னு கேட்டோம். `இல்லைக்கா... எங்க அப்பா கொத்தனார். நான் அந்தத் துறையில் பெரிய ஆளாகணும். சிவில் இன்ஜினீயரிங் படிக்கிறேன்'னான். ஐ.ஐ.டி-யில் எம்.டெக் படிக்கணும்கிறது அவனோட லட்சியம். எவ்வளவு பெரிய சிந்தனை. தன் எதிர்காலத்தை அப்பாவின் நிகழ்காலத்தோடு இணைச்சு இங்கே எத்தனை பேர் சிந்திக்கிறாங்க?

செஞ்சி காட்டுச்சித்தாம்பூர்ல இருந்து வந்திருக்கிற ஜெயலட்சுமிக்கு, சின்ன வயசுல பார்வை பறிபோயிடுச்சு. ஆனா, மனசை வெளிச்சமா வெச்சிருக்கா. ப்ளஸ் டூ-வில் சராசரிப் பிள்ளைகளோடு படிச்சு, 832 மார்க் எடுத்தாள். வியக்கத்தக்க சாதனை! எம்.சி.சி-யில் பி.ஏ சேர்த்திருக்கோம். டீச்சர் ஆகணுங்கிறது அவளோட கனவு. சின்ன வயசுல மனசுல கூடு கட்டின அந்தக் கனவை துரத்திக்கிட்டே வர்றா... இப்படி இங்கே வர்ற எல்லோருக்கும் மனசுக்குள்ள ஒரு பொறி இருக்கு. அவங்களை வழிநடத்துறோம். 

மதுரையிலிருந்து போன வருஷம் வந்தான் ஒரு தம்பி. அம்மா அங்கன்வாடியில் வேலைசெய்றாங்க. ஒரு பெரிய கல்லூரியில் சேர்த்துவிட்டோம். அங்கேயே டிரான்ஸ்போர்ட் கோஆர்டினேட்டரா பகுதி நேரமா வேலைசெய்றான். இன்னும் படிப்பைக்கூட முடிக்கலை. அந்தச் சம்பளத்தைச் சேர்த்துவெச்சு, `10 ஆயிரம் ரூபா இருக்குக்கா. யாராவது ஒரு பையனுக்கு ஃபீஸ் கட்டுங்க'ன்னு கொண்டுவந்து கொடுத்தான். எவ்வளவு பெரிய வெளிச்சம் உருவாயிருக்கு. ஒவ்வொருத்தரும் யாராவது ஒருத்தரைப் பற்றி ரெண்டு நிமிஷம் கவலைப்பட ஆரம்பிச்சா, எவ்வளவு பெரிய மாற்றம் உருவாகும்கிறதை கண் முன்னால பார்க்குறோம்'' என்று நெகிழ்கிறார் புனிதா. தலைமுறையை மாற்றும் சக்தி, கல்விக்கு மட்டுமே உண்டு. மாற்றம், அப்படியான ஒரு மாற்றத்தை நிகழ்த்திவருகிறது. ஆலாகத் தழைத்து, அறுகாக வேரூன்றட்டும் இந்தப் பணி!

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close