Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தாமிரபரணி ஆற்றிலிருந்து சிப்காட் நிறுவனங்களுக்குத் தடை விதிக்க கோரிய வழக்கு ஒத்திவைப்பு

தாமிரபரணி ஆற்றிலிருந்து சிப்காட் நிறுவனங்களுக்குத் தண்ணீர் வழங்க தடை விதிக்கக் கோரிய வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

madurai hc

நெல்லை தச்சநல்லூரைச் சேர்ந்த ராகவன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். பெப்சி, கோக் குளிர்பான நிறுவனங்கள் உள்பட 25  நிறுவனங்களுக்குத் தாமிரபரணி ஆற்றிலிருந்து தினமும் 48. 66 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றை நம்பியுள்ள நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. விவசாயமும் பாதிக்கப்படுகிறது. எனவே, தாமிரபரணி ஆற்றிலிருந்து சிப்காட் நிறுவனங்களுக்குத் தண்ணீர் வழங்க தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, அரசுத்தரப்பில், சிப்காட்டில் இயங்கி வரும் குளிர்பான ஆலைகளுக்குத் தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் வழங்குவது கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும், பிற தொழிற்சாலைகளுக்குக் குடிநீர் தேவைக்காக மட்டுமே தாமிரபரணியிலிருந்து தண்ணீர் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், வேல்முருகன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, சிப்காட் நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 'சிப்காட் நிறுவனம் அமைக்கப்படுவதற்கு முன்பாக அங்கிருக்கும் வசதிகள் மற்றும் சுற்றுச்சூழல் குறித்து ஆய்வு செய்த பின்னரே அனுமதி வழங்குவர். மாவட்ட நிர்வாகம் தரப்பிலிருந்து ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட அளவில் 50% தண்ணீரே வழங்கினர். தற்போது, வறட்சியால் 10% நீரே வழங்கப்படுகிறது. நாங்கள் 1000 லிட்டர் தண்ணீரை 18 ரூபாய் விலை கொடுத்தே வாங்குகிறோம். மேலும், தண்ணீர் வழங்குவது குறித்து மாவட்ட நிர்வாகமே முடிவு செய்ய இயலும்” எனத் தெரிவித்தனர். அதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'கடந்த முறை நவம்பர் மாதம் முதல் குளிர்பான நிறுவனங்களுக்குத் தண்ணீர் வழங்கப்படவில்லை எனப் பதிலளிக்கப்பட்டது. ஆனால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெப்சி நிறுவனத்தைத் தவிர பிறவற்றிற்கு தண்ணீர் வழங்கி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஒப்பந்த அடிப்படையில் நிறுவனங்களுக்குத் தண்ணீர் வழங்கும்போது, எந்நேரத்திலும், அதை நிறுத்த அரசுக்கு அதிகாரம் உண்டு. ஆகவே குடிநீர் மற்றும் விவசாயத்திற்கே தண்ணீர் இல்லாத நிலையில் தாமிரபரணி ஆற்றிலிருந்து சிப்காட் நிறுவனங்களூக்குத் தண்ணீர் வழங்க தடை விதிக்க வேண்டும்', என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close