Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நிறம் மாறிய தண்ணீர்... பெட்ரோல் குழாயில் உடைப்பா? என்ன நடக்கிறது கதிராமங்கலத்தில்?

தண்ணீர்

"முன்னாடியெல்லாம் எங்க ஊர்த் தண்ணீர் இளநீர் மாதிரி நல்லா சுவையா இருக்கும். வெள்ளை வெள்ளேர்னு பளிச்னு இருக்கும். நினைச்ச நேரத்துல அடிபம்புல தண்ணீர் அடிச்சுக் குடிப்போம். ஆனா இப்ப எங்க ஊர் தண்ணீரைப் பார்க்கவே விநோதமா இருக்கு. இதை குடிக்கவோ சமையலுக்கோ பயன்படுத்தப் பயமா இருக்கு. இதனால் நாங்க பட்ற அவஸ்தை கொஞ்சம் நஞ்சமில்லை" எனக் கண்ணீர் வடிக்கிறார்கள் கதிராமங்கலம் மக்கள். 

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகேயுள்ள கதிராமங்கலத்தில் கடந்த 17 ஆண்டுகளாக பெட்ரோல்-கேஸ் எடுத்து வருகிறது ஒ.என்.ஜி.சி  நிறுவனம். கடந்த சில நாள்களுக்கு முன் இதற்கான கிணற்றில் சீரமைப்பு மற்றும் புதிய குழாய் அமைக்கும் பணியில் ஒ.என்.ஜி.சி நிறுவனம் ஈடுபட்டது. இதற்கு இங்குள்ள மக்கள் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டார்கள். பெட்ரோல்-கேஸ் எடுப்பதால் ஏற்கெனவே நிலத்தடிநீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் இதை புதுப்பித்து விரிவுப்படுத்தினால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என அச்சம் தெரிவித்துப் போராட்டங்களைத் தீவிரப்படுத்தினார்கள். ஆயிரத்திற்கும் அதிகமான காவல்துறையினர் ஊருக்குள் குவிக்கப்பட்டார்கள். போராட்டங்களில் ஈடுபட்டவர்கள்மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டார்கள். 

அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. காவல்துறை மற்றும் ஒ.என்.ஜி.சி நிறுவனத்தின் அடக்குமுறைகளைக் கண்டித்து வீடுகளில் ஏற்றப்பட்ட கருப்புக் கொடியைக் காவல்துறையினர் கிழித்தெறிந்தனர். இங்குள்ள மக்கள் ஊரைவிட்டு வெளியேறக்கூடாது. வெளியூர் மக்கள் ஊருக்குள் நுழையக்கூடாது எனக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. காவல்துறையினரின் அடக்குமுறையோடும் பாதுகாப்போடும் பெட்ரோல்- கேஸ் கிணற்றில் சீரமைப்பு மற்றும் புதிய குழாய் அமைக்கும் பணி நடந்தேறியது. இதனால் செய்வதறியாது அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள் கதிராமங்கலம் மக்கள். 

கதிராமங்கலம்

”எங்க ஊர்ல பெட்ரோல்-கேஸ் கிணறு நாலு இருக்கு. இதோட பாதிப்புகளை படிப்படியாதான் நாங்க உணர ஆரம்பிச்சோம். நல்லா மழை பேஞ்சு, ஆத்துல தண்ணீர் வந்த வரைக்கும் அந்தத் தண்ணீர் பூமிக்குள் சேகரமாகி, ஓரளவுக்கு நல்ல தண்ணீராத் தாக்குப்புடிச்சுது. கடந்த சில ஆண்டா மழை ஒழுங்காப் பெய்யாம, ஆத்துலயும் தண்ணீர் வராம கடுமையான வறட்சி ஏற்பட்ட பிறகுதான் எங்க ஊர் நிலத்தடிநீர் பெட்ரோல்-கேஸ் கிணறுகளால் கடுமையா பாதிக்கப்பட்டு இருக்குறதைப் பார்த்து அதிர்ச்சியடைஞ்சுட்டோம். பெரும்பாலான இடங்கள்ல தண்ணீர் மஞ்சள் நிறத்துலதான் கிடைக்குது. இதுல ஏதோ விநோதமான வாடை அடிக்குது. சுவையும் இயல்பானதா இல்லை. குடிநீருக்கு, சமையலுக்கு இதை நாங்க பயன்படுத்துறதில்லை.  முன்னாடியெல்லாம் எங்க ஊர்த் தண்ணீர் இளநீர் மாதிரி ரொம்பவே சுவையா இருக்கும். நல்லா வெள்ளை வெளேர்னு இருக்கும். பெட்ரோல்-கேஸ் கிணறுகளால்தான் எங்க ஊர் நிலத்தடிநீர் பாதிக்கப்பட்டுருக்கு. பல ஆயிரம் அடி ஆழத்துல இருந்து பெட்ரோல்-கேஸ் எடுக்குறாங்க. மென் பாறைகள்ல உடைப்பு ஏற்பட்டு, அங்கவுள்ள கச்சா எண்ணெய் நீரூற்று மாதிரி பொங்கி படிப்படியா மேல்மட்ட நீர்ல ஊடுருவியிருக்கலாம். இல்லைனா பெட்ரோல் கேஸ் குழாய்கள்ல உடைப்பு ஏற்பட்டு நிலத்தடிநீர்ல கலந்திருக்க வாய்ப்பு இருக்குனு எங்க ஊர்மக்கள் எல்லாருமே உறுதியா நம்புறோம். இதுதான் காரணமா, இல்லை வேற எதுவும் காரணமானு மத்திய மாநில அரசுகளும் ஒ.என்.ஜி.சி நிறுவனமும் முறையான ஆய்வுகள் நடத்தி இதுக்கான காரணத்தைக் கண்டுபுடிக்கணும். குடிக்குறதுக்குச் சுகாதாரமான தண்ணீர் கிடைக்காம நாங்க அவஸ்தை படுறோம். ஊராட்சி நிர்வாகம் வெளியூர்கள்ல இருந்து டேங்கர் லாரியில தண்ணீர் கொண்டு வந்து மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் சேகரிச்சுதான் தண்ணீர் கொடுக்குறாங்க. அதுவும் ஒருமணிநேரத்துக்குள்ள தண்ணீர் புடிச்சாகணும். கடுமையான போட்டி. ஒவ்வொரு நாளும் அந்தத் தண்ணீரை எதிர்பார்த்து நாங்க காத்துக் கிடக்க வேண்டியிருக்கு. இதனால் நாங்க பட்ற அவஸ்தை கொஞ்சம் நஞ்சமல்ல. நினைச்ச நேரத்துல அடிபம்புல தண்ணீர் எடுத்துக்கிட்டு இருந்த எங்களுக்கு இப்ப இப்படி ஒரு கஷ்டகாலம். 

இதனால்தான் நாங்க பெட்ரோல்-கேஸ் கிணறு சீரமைப்புப் பணிகளை எதிர்க்குறோம். உண்மையாவே இதுல சீரமைப்பு பணி நடந்துச்சா, இல்லை, வேற எதுவும் செஞ்சாங்களானு எங்களுக்குத் தெரியலை. அந்தக் கடவுளுக்குதான் வெளிச்சம். இன்னும் என்னென்ன பாதிப்புகளையெல்லாம் அனுபவிக்கப் போறோமோ தெரியலை. நினைச்சால நெஞ்சு பதறுது ” என மனமுடைந்து பேசுகிறார்கள் இப்பகுதி மக்கள். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close