Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'வயிற்றுப்போக்கைத் தீர்க்குமா ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து?' - மருத்துவர்கள் வெளியிடும் 10 மர்மங்கள்

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா

'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின்கீழ், குழந்தைகளுக்கான ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து திட்டத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தொடங்கி வைத்துள்ளது. ' புதிதாக ஒரு மருந்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்னால், அதுகுறித்த முறையான அறிவியல்ரீதியான ஆய்வுகளின் முடிவின்படி அமல்படுத்த வேண்டும். ரோட்டா வைரஸ் பொறுத்தமட்டில் அப்படியான தரவுகள் எதுவும் இல்லை' என அதிர வைக்கின்றனர் சூழலியலுக்கான மருத்துவர்கள். 

தேசிய அளவிலான ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து திட்டத்தை, கடந்த மார்ச் மாதம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, ஒடிஷா மாநிலத் தலைநகர் புவனேஸ்வரில் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 2.7 கோடி குழந்தைகளுக்குத் தடுப்பு மருந்து கொடுப்பது என இலக்கு நிர்ணயித்துள்ளனர். தமிழ்நாட்டில் வரும் ஜூலை முதல் வாரத்தில் ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து போடப்பட உள்ளது. " இந்தியாவில் வயிற்றுப்போக்கினால் 1 முதல் 5 வயதுக்கு உட்பட்ட 80 ஆயிரம் குழந்தைகள் ஆண்டுதோறும் பலியாகின்றனர். இதனைக் கட்டுப்படுத்த ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து திட்டத்தைத் தொடங்கியிருப்பதாக மத்திய அமைச்சகம் தெரிவிக்கிறது. ' இந்தத் தடுப்பு மருந்து தேவைதானா?' என்ற விவாதத்துக்குள் செல்வதற்கு முன்பு, இதன் மூலத்தைத் தெரிந்து கொள்வது நல்லது" என விவரித்த சூழலியலுக்கான மருத்துவர் சங்கத்தின் டாக்டர்.புகழேந்தி, 

மருத்துவர் புகழேந்தி" 1973 ஆம் ஆண்டு ரூத் பிஷப் என்பவரால் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. ஏழு முதல் 12 மாதக் குழந்தைகளைத்தான் இது அதிகம் பாதிக்கின்றது. பனிக்காலத்தில்தான் இதன் பாதிப்பு அதிகம். இந்த வைரஸால் பாதிக்கப்படும் குழந்தைகளில் 80 சதவீதத்தினர் அடித்தட்டு மக்கள்தான். 'இந்நோயால் பாதிக்கப்படும் மூன்றில் ஒருவர் காய்ச்சலாலும் அதேபோல் மூன்றில் ஒருவர் மோசமான பாதிப்புக்கும் உள்ளாகின்றனர்' என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. சில நேரங்களில் வயிற்றுப்போக்கு ஏற்படுவதற்கு முன்னரே வாந்தி வரும். ' சுத்தம், சுகாதாரம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் மூலம் ரோட்டா வைரஸ் பிரச்சினையை தீர்க்க முடியாது' என்றே ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. எங்களுடைய கேள்வி எல்லாம், ஒரு தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக, முறையான புள்ளி விபரங்கள், அறிவியல்ரீதியான ஆய்வு முடிவுகள் ஆகியவை சேகரிக்கப்பட வேண்டும். அவை இல்லாமல் இருந்தால், 'ஏன் அறிமுகப்படுத்தப்படுகிறது?' என்ற கேள்வி எழுவது இயற்கை. சமூக அளவில் இந்தத் தடுப்பு மருந்துக்கு பரந்துபட்ட ஆய்வுகள் இல்லை என்பதுதான் உண்மை" என்றவர், ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து பின்னணியில் நடக்கும் விஷயங்களைப் பட்டியலிட்டார். 

1. ' நோய் தாக்கம் குறித்தான உரிய புள்ளி விபரங்கள் இருந்தால் மட்டுமே தடுப்பு மருந்தின் பலனை கணிக்க முடியும். அத்தகைய புள்ளி விவரங்கள் பெரும்பாலும் இந்தியாவில் இல்லை' என்கிறார் புகழ்பெற்ற வைரலாஜி நிபுணர் ஜேக்கப் ஜான். நமது நாட்டில் மாறி வரும் கிருமிகள் பற்றிய புள்ளிவிபரங்கள் இல்லாமலேயே ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மார்ச் 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் தடுப்பு மருந்து திட்டம் நான்கு மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட பின் அதன் பாதுகாப்புத்திறன்(Efficiency) குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். அப்படியானால், பாதுகாப்புத் திறன் உறுதி செய்யப்படவில்லை என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. 

2. இந்தியாவில் ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்தின் திறன் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதற்கு 12 வருடங்கள் முன்னரே, 'ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோ டெக் நிறுவனம்தான் தயாரிக்க வேண்டும்' என்பதை பில்- மெலிண்டா, பாத்(PATH) நிறுவனங்கள் தீர்மானித்துவிட்டன. ' இந்த நிறுவனத்துக்கு தடுப்பு மருந்து தயாரிப்பில் எந்த முன் அனுபவமும் இல்லை' என்பதை மருத்துவர் ஜேக்கப் புலியேல், டில்லி உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் குறிப்பிட்டிருக்கிறார். இதைப் பற்றி அரசு என்ன சொல்லப் போகிறது? 

3. தமிழ்நாட்டில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த ஜர்னல் ஆஃப் பீடியாட்ரிக் சயின்ஸ்(Journal of Paediatric Sciences) பத்திரிகையில், ஆய்வாளர் பத்மநாபன் வித்யா (கோவை பாரதியார் பல்கலைக்கழகம்) அருண் பொன்னம்பலம் (கிங் இன்ஸ்ட்டியூட், கிண்டி) ஆகிய இருவரும், இத்தடுப்பு மருந்தின் திறனை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் மூலக்கூறு வகைப்படுத்துதல் (Molecular Typing) தேவை என்றும் அதன் பின்னரே தமிழகத்தில் ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் தெளிவாகக் கூறியுள்ளனர். இதனைப் பின்பற்றாதது ஏன்? 

4. தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி, கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி அன்று ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், 'தமிழகத்தில் ரோட்டா வைரஸ் வயிற்றுப்போக்கின் தாக்கம் சொற்பமே' எனக் கூறியிருக்கிறார். அப்படி இருக்கும்போது, இங்கு உடனடியாக ஏன் அமல்படுத்த வேண்டும்? தவிர, 'தடுப்பு மருந்தின் பாதுகாக்கும் திறன் முழுமையானது அல்ல. அது 53.6% சதவீதம் மட்டுமே' என ஆய்வுகள் கூறுகின்றன.

5. ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்தால், தமிழகத்துக்கே உரித்தான தனிப் பிரச்னை ஒன்றும் இருக்கிறது. 'இந்தத் தடுப்பூசியால் குடலுக்குள் குடல் உட்புகுதல் (Intessusception) எனும் முக்கிய பின்விளைவு தமிழகத்தில் அதிகம்' என ஜேக்கப் ஜானின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வேலூர் மாவட்டத்தில் இதன் எண்ணிக்கை 581 / 100000 Child years என மிக அதிகமாக இருக்கையில், டில்லியில் அது வெறும் 27.7 / 100000 Child years என இருக்கிறது. இதுகுறித்து வேலூரில் நடத்தப்பட்ட ஆய்வின் புள்ளி விபரத்தை ஜேக்கப் புலியேல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்ட போதும், புள்ளி விபரத்தை அரசு அளிக்கவில்லை. இதை உலக சுகாதார நிறுவனமே 14.04.2015 அன்று வலியுறுத்தியும் மருத்துவ ஆய்வுக் கட்டுரைகள் (PLOS) எடுத்துக் கூறியும் தர மறுக்கின்றன. இதற்காக மருத்துவர் ஜேக்கப் புலியேல் உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்கு (WP(c) 289/2016) தொடுத்து, அது நிலுவையில் இருக்கும்போது வேலூரில் ஆய்வு செய்யப்பட்ட 1000 பேருக்கான பாதிப்பை வெளியிடாமலேயே, அடுத்த கட்ட ஆய்வுக்கு ஒரு லட்சம் பேரை ஈடுபடுத்துவது எந்த வகையில் சரியானது? 

ரோட்டா வைரஸ்

6. 116 E வகை கிருமி உள்ள இத்தடுப்பு மருந்து (மொத்தம் 6,719 பேர், தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டவர்கள் 4,532 பேர், கொடுக்கப்படாதவர்கள் 2,187 பேர்) கொடுக்கப்பட்டவர்களில் இதன் பாதிப்பு 17 பேருக்கும் கொடுக்கப்படாதவர்களில் 6 பேருக்கும் வந்துள்ளது. கூடுதலாக 11 பேர் தடுப்பு மருந்து கொடுத்ததால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் இதன் பாதிப்பு ஐந்து முதல் பத்து மடங்கு குறைவாக நிகழ்ந்திருந்தும், பின் விளைவின் காரணமாக நிறுத்தப்பட்டுவிட்டது. தவிர, இத்தடுப்பு மருந்தில் கலப்படம் (DNA Fragments of Porcine circo virus -1) இருப்பது உறுதியானதால், தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 'வேலூர் ஆய்வின் முடிவை மறைப்பது, தமிழ்நாட்டில் தடுப்பு மருந்தின் பாதிப்பு அதிகமாக இருக்கும்' என்ற எண்ணத் தோன்றுகிறது என மருத்துவர் ஜேக்கப் புலியேல் தெரிவிக்கிறார். 

7. ' நமது ஊரில் பயன்படுத்தப்படும் நார்த்தங்காயில் (Citrus aurantium) Neohesperidin, Hesperidin எனும் வேதிப் பொருள்கள் உள்ளன. அவை ரோட்டா வைரஸைக் கொல்லும் திறன் படைத்தவை' என கிம் என்பவர் மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சைனா அதிமதுரம் (Glycyrrhiza Uralensis)  வேர்களும், இந்த வைரஸைத் தடுக்கும் திறன் உள்ளது. இம்மூலிகைகளை மேலும் ஆய்வு செய்து, தடுப்பு மருந்து மற்றும் சிகிச்சை மருந்து தயாரிக்க ஏன் அரசோ, பிறரோ முன் வரவில்லை? 

8. தடுப்பு மருந்து கிருமியும் குறிப்பிட்ட ஓர் இடத்தில் (உதாரணமாக  தமிழகம்) இருக்கும் கிருமியும் ஒரே வகையாக இருந்தால் மட்டுமே தடுப்பூசி நல்ல பலனைக் கொடுக்கும். இந்தியாவில் அதிகம் காணப்படுவது G1 P{8} வகை கிருமிகள். 2007 ஆம் ஆண்டு  ரமணி மற்றும் 2016 ஆம் ஆண்டு குமார் ஆகியோர் செய்த ஆய்வில், இந்தியாவில் இடத்துக்கு இடம் கிருமியின் தன்மை மாறி, மாறி இருப்பதாக தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் 2015 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், ' தடுப்பு மருந்தில் G9 வகைக் கிருமிகள் இருக்க வேண்டும்' என்பதைப் பதிவு செய்துள்ளனர். ஆனால், அது பின்பற்றப்படவில்லை. இந்த வைரஸால் எந்த பாதுகாப்பும் கிடைக்கவில்லை' (ஆதாரம்: NEJM - 2011 - Gladstone, Ramani ) எனக் கூறும்போது, தடுப்பு மருந்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

9. இந்தியக் குழந்தைகள் நலக் கழகம்(IAP (2013-14) அறிக்கையில், 'இத்தடுப்பு மருந்தின் திறன் குறித்து முறையான, விரிவான ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், தடுப்பு மருந்தின் செலவுக்கு ஏற்ப உரிய பலன் கிடைக்குமா?(Cost effectiveness) எனவும், ஆய்வு செய்த பின்னர் தடுப்பு மருந்தாக பயன்படுத்துவது நல்லது' எனக் கருத்து தெரிவித்துள்ளது.

10. இந்தியாவில் இந்தத் தடுப்பு மருந்துகளால் இறப்புகளும் நிகழ்ந்துள்ளன. டில்லியில் 2014 ஆம் ஆண்டு திருமதி.அஃப்சனா என்ற பெண்மணியின் 2 மாதக் குழந்தை தடுப்பு மருந்து கொடுத்த ஆறு நாட்கள் கழித்து இறந்துள்ளது. தடுப்பு மருந்து கொடுத்த அன்றே பிரச்னை தொடங்கிவிட்டது. இது 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியாகியுள்ளது. ; பிரேதப் பரிசோதனை முடிவு வந்த பிறகுதான் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்' என டில்லி காவல்துறை கூறியுள்ளது. இந்த வழக்கு என்னவாயிற்று என்றும் தெரியவில்லை. தேசிய நோய்த் தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (NTAGI) உறுப்பினர் மருத்துவர் ஜேக்கப் புலியேல் டில்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் (WP(C) 13698/2009) காரணமாகவே, அரசு அறிவியல் ரீதியான தடுப்பூசிக் கொள்கையை (Immunization Policy) அறிவித்தது. இதற்கு முன்னர் அரசு இதுபோன்று செய்வதை தவிர்த்து வந்தது. ஜேக்கப் புலியேலின் வழக்குகளைப் படித்தாலே, அரசும் தடுப்பூசி நிறுவனங்களும் மக்கள் நலனின் எந்த அளவுக்கு அக்கறையோடு செயல்பட்டு வருகின்றன என்பது தெளிவாகும்" என்றவர், 

 

 

இறுதியாக, " வயிற்றுப்போக்கால் ஏற்படும் இறப்பு மற்றும் பாதிப்புகளைத் தடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அதற்கான புள்ளி விபரங்கள், ஆய்வக வசதிகள், பிற உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை முறையாக உருவாக்க வேண்டும். நமது நாட்டில் இதற்கான வசதிகள் உருவாக்கப்படவில்லை. ரோட்டா வைரஸ் கிருமியின் பங்கை முறையான ஆய்வுகள் மூலம் உறுதி செய்த பின்னரே, தடுப்பு மருந்தைத் தொடங்குவது நல்லது. ஆக, அவசரக் கோலத்தில், முறையாக அறிவியல் ரீதியான ஆய்வுகளை மேற்கொள்ளாமல் தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்துவதற்கு முன், இது தொடர்பான ஒரு திறந்த, ஜனநாயகரீதியான விவாதத்தை சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்த வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாக இருக்கிறது" என்றார் கவலையுடன். 

ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து குறித்து எழும் சந்தேகங்களுக்கு, தமிழக பொது சுகாதாரத்துறையின் இயக்குநர் குழந்தைசாமியிடம் விளக்கம் கேட்டோம். " மாநிலம் முழுவதும் ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து கொடுப்பது தொடர்பான பயிற்சியை அளித்து வருகிறோம். ஜூலை மாதம் தடுப்பு மருந்து கொடுக்கும் பணிகள் வேகம் பெறும். இந்த மருந்துக்கு எதிராக, என்ன காரணத்துக்காக வழக்குப் போட்டுள்ளனர் என்று தெரியவில்லை. ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து தொடர்பாக, மத்திய அரசின் உயிரி தொழில்நுட்ப துறையின் கூட்டு முயற்சியோடு வேலூர் மருத்துவக் கல்லூரி ஆய்வை நடத்தியது. எங்களுக்குத் தெரிந்தவரையில், வேலூரில் எந்தப் பிரச்னையும் வரவில்லை. முதல்கட்டமாக, இந்தியாவில் இமாச்சல பிரதேசம், ஹரியானா, ஒடிஷா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தடுப்பு மருந்து திட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இரண்டாம்கட்டமாக, தமிழ்நாடு, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் ஜூலை மாதம் இத்திட்டத்தைத் தொடங்க இருக்கிறார்கள்.  உலகம் முழுவதும் 92 நாடுகளில் இந்தத் தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டு வருகிறது. சுகாதாரத்துறையின் அனைத்து துறைகளோடும் ஒருங்கிணைந்து செயல்படுத்தி வருகிறோம். ரோட்டா வைரஸால் வரக் கூடிய பேதியை இந்தத் தடுப்பு மருந்து நிச்சயம் தடுக்கும். இதனால், தமிழ்நாட்டில் 32 முதல் 40 சதவீத பலன் கிடைக்கும். டயேரியாவால் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கையும் குறையும். இது வாய்வழியாக கொடுக்கப்படும் மருந்து. போலியா மருந்து இரண்டு சொட்டு வழங்குவார்கள். இந்த மருந்து ஐந்து சொட்டு வழங்க வேண்டும். கடந்த காலங்களில் தடுப்பு மருந்து திட்டங்களை வேகப்படுத்தியதால்தான், பல்வேறு நோய்களில் இருந்து மக்களைக் காக்க முடிந்தது. இதனை சில மருத்துவர்கள் உணர்ந்து கொள்வதில்லை" என்றார் நிதானமாக. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close