Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

"ஸ்டாலினுக்கு உள்ள தகுதி எனக்கும் உள்ளது!" - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

மிழகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதியின் மகன் ஶ்ரீராம். இவர் சென்னைத் தலைமைச் செயலகத்தில் உதவி மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியாற்றிவருகிறார். 

இன்று காலை ஶ்ரீராம் - பூஜாலெட்சுமி ஆகியோருக்குத் திருமணம் நடைபெற்றது. முன்னதாக நேற்று மாலை திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொள்ள, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை திருச்சி வந்தார்.
முதல்வரின் வருகைக்காக திருச்சி விமான நிலையம் முதல், திருமணம் நடைபெற்ற (லால்குடி) தெற்கு சத்திரம் மேல வாளாடி வரை, முதல்வரை வரவேற்று விளம்பரப் பதாகைகள், கட்சிக்கொடிகள் அணிவகுத்து நின்றன. அதேபோல், முதல்வர் வருகையையொட்டி திருச்சி–புதுக்கோட்டை மெயின்ரோடு, சுற்றுலா மாளிகை, திருச்சி–சென்னை பைபாஸ் சாலை ஆகிய இடங்களில், திருச்சிப் போலீசார் மட்டுமல்லாமல், வெளி மாவட்டங்களிலிருந்தும் போலீஸார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

சரியாக மாலை 5.30 மணியளவில், திருச்சி வந்தடைந்த முதல்வர், டி.வி.எஸ் டோல்கேட் சுற்றுலா மாளிகையில் தங்கினார். அவருக்கு அமைச்சர்கள் வளர்மதி, வெல்லமண்டி நடராஜன், மாவட்ட ஆட்சியர் ராசாமணி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

தொடர்ந்து ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பழனிசாமி, அமைச்சர் வளர்மதியின் மகன் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள புறப்பட்டுச் சென்றார்.  அப்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்தவர், “அ.தி.மு.க தற்போது சில பிரச்னைகளைச் சந்தித்து வந்தபோதிலும், மக்களின் பிரச்னைகள் தீர்க்கப்பட்டே வருகின்றன. எதிர்க்கட்சிகள் திட்டமிட்டே சில குற்றச்சாட்டுகளைக் கூறுகின்றன. இந்த அரசு வேகமாகச் செயல்பட்டு அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி கண்டு வருகின்றது. ஆனால், சிலர் 'அரசுக் கோப்புகள் தேங்கிக் கிடக்கின்றன' என்று கூறுகின்றனர்.

அப்படி எந்தக் கோப்பும் தேங்கவில்லை. அனைத்துக் கோப்புகளிலும் கையெழுத்திட்டு, அரசாணை வெளியிடப்பட்டு திட்டப்பணிகள் நடந்துவருகின்றன. எங்கள் அம்மா ஜெயலலிதாவின் ஆசியோடு ஆட்சிப்பொறுப்பேற்று 4 மாத காலத்தில், அனைத்துத் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, மிகப்பெரிய திட்டமான குடிமராமத்துத் திட்டத்தின் கீழ், தற்போது விவசாயிகளுக்கு வண்டல் மண் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. 1,519 ஏரிகளில் 100 கோடி ரூபாய் செலவில் குடிமராமத்துப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்தப் பணிகள் முடியும் நிலையில் உள்ளன. அடுத்தகட்டமாக விவசாயிகளின் பங்களிப்போடு, 300 கோடி ரூபாய் செலவில் 2,065 ஏரிகள் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட உள்ளன. அதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. ஆனால், முதல்வர் துணிச்சலோடு செயல்படவில்லை எனச் சிலர் குற்றச்சாட்டு முன்வைக்கிறார்கள். திட்டத்தை நிறைவேற்றுவதுதானே துணிச்சல். மக்களுக்குத் தேவையான திட்டங்களை நிறைவேற்றுவதுதான் துணிச்சல். அந்தத் துணிச்சலோடுதான் தற்போது ஆட்சி நடக்கிறது'' என்றார்.

''முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளதே?'' என்ற பத்திரிகையாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ''நீங்கள்தான் அப்படிக் கூறுகிறீர்கள். எங்களுக்கு அப்படி எந்தத் தகவலும் வரவில்லை. தேர்தல் ஆணையம் என்மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது குறித்து எனக்கு எந்தத் தகவலும் இல்லை. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு உள்ளது. அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை சில பிரச்னைகள் இருக்கிறது. அது தீர்க்கப்பட்டு இருக்கிறது. 

கடந்த 140 ஆண்டுகள் இல்லாத அளவில், தமிழகத்தில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையிலும் மக்களுக்குத் தேவையான குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் முழுமையாக ஆதரவு அளித்துவருகிறார்கள். இந்நிலையில், எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு அவதூறு பரப்பிவருகிறார்கள். தமிழக அரசு வேகமாக, துரிதமாகச் செயல்பட்டு வருவதால், அனைத்துத் துறைகளும் வளர்ச்சி நிலையில் உள்ளன. அனைத்துத் திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுவருகின்றன.

தமிழகத்தில், ஸ்டாலினுக்கு இணையான தலைவர் இல்லை என்று சிலர் கூறுகின்றனர். ஸ்டாலின் என்றைக்குச் சட்டமன்றத்துக்கு வந்தாரோ அப்போதே நானும் சட்டமன்றத்துக்குள் வந்துவிட்டேன். ஆம், 1989-ம் ஆண்டு எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில், சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்றத்துக்கு வந்தேன். ஆக, அவருக்கு என்ன தகுதி இருக்கிறதோ, அதே தகுதி எனக்கும் இருக்கிறது”என்றார் தடாலடியாக.

இதையடுத்து, அமைச்சர் வளர்மதியின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்ட முதல்வர், இரவு 10 மணியளவில் விமானம் மூலம் சென்னை கிளம்பிச் சென்றார். 'தி.மு.க செயல்தலைவர் மு.க ஸ்டாலினுக்கு உள்ள தகுதி, தனக்கும் உள்ளது' என முதல்வர் கூறியது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close