Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கரூர் மாணவர்களை கலங்கடிக்கும் 'சைக்கிள்' அரசியல்!

சைக்கிள் வழங்கும் விழா

ருத்துவக் கல்லூரி போய் சைக்கிள் அரசியல் கரூரைப் பாடாய்ப்படுத்திக் கொண்டிருக்கிறது. கரூர் மாவட்டத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை ஒன்றரை வருடங்கள் ஆகியும் அமைக்கப்படாமல் இழுத்தடிக்க, அந்தத் திட்டம் கேன்சலாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. காரணம், மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை. மாவட்டச் செயலாளரும்,  போக்குவரத்துத் துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கோஷ்டிக்கும், அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ-வான செந்தில்பாலாஜி தரப்புக்கும் நடக்கும் 'யார் சொல்லும் இடத்தில் அமைப்பது' என்ற போட்டியில்தான் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கும் திட்டம் கைநழுவும் நிலைக்கு வந்திருக்கிறது. செந்தில்பாலாஜி குப்புச்சிப்பாளையம் என்ற இடத்தைக் காட்டினார். தம்பிதுரையும், அமைச்சரும் சணப்பிரட்டி என்ற பகுதியில் இடம் பார்க்க, திட்டத்துக்கே முட்டுக்கட்டை விழுந்திருக்கிறது. இதை மையமாகவைத்து இரண்டு தரப்பும் முஷ்டியை முறுக்கிவந்தது. 

ஒருபக்கம், இந்தப் பிரச்னை இப்படி ஓடிக்கொண்டிருக்க... இன்னொரு பக்கம், ''பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டிகளை வழங்காமல், தனது ஈகோ அரசியலுக்காக இழுத்தடிக்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்'' என்று கடுகடுக்கிறார்கள் அரவக்குறிச்சி தொகுதிவாசிகள். 

''தாம் கொண்டுவந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை, தான் நினைக்கும் இடத்தில் அமைக்க தம்பிதுரையும், அமைச்சரும்விஜயபாஸ்கர் தடுக்கிறார்கள். அதோடு, தான் வாங்க நினைத்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் வசம் இருக்கும் அமைச்சர் பதவியை தனதாக்க முடியலையே என்கிற கோபத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்து டி.டி.வி.தினகரன் அணிக்குத் தாவினார் செந்தில்பாலாஜி. அதனால்தான், நான்காவது சுற்றாகக் கரூர் மாவட்டத்தில் உள்ள மற்ற மூன்று தொகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கியும், செந்தில்பாலாஜி தொகுதி என்பதால், அரவக்குறிச்சி தொகுதியில் ஒரு வருடமாகியும் ஒரு சைக்கிள்கூட வழங்காமல் இழுத்தடிக்கிறார் அமைச்சர்'' என்ற அதிரிபுதிரி குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்த இருக்கிறார்கள். 

இது சம்பந்தமாக செந்தில்பாலாஜி ஆதரவாளர்களிடம் பேசினோம். ''அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டம் முழுமைக்கும்தான் அமைச்சர். ஆனால், தி.மு.க எம்.எல்.ஏ ராமர் இருக்கும் குளித்தலை தொகுதிக்குக்கூட நலத்திட்டங்களை வழங்கும் அமைச்சர், செந்தில்பாலாஜி தொகுதியான அரவக்குறிச்சிக்கு எந்த அரசுத் திட்டத்தையும் வழங்காமல் மாவட்ட நிர்வாகத்தைக் கையில் போட்டுக்கொண்டு ஓரவஞ்சனையாகச் செயல்பட்டு வருகிறார். அ.தி.மு.க ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்துக்கு மேல் ஆகிறது. ஆனால், நான்கு சுற்றுகளாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மற்ற மூன்று தொகுதிகளிலும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கியும், அரவக்குறிச்சி தொகுதியில் மட்டும் இன்னும் ஒரு சைக்கிள்கூட வழங்கவில்லை. அரவக்குறிச்சி தொகுதியில் மொத்தம் 16 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில், இன்று நான்காவது சுற்றாக அமைச்சர் 13 அரசுப் பள்ளிகளுக்கு மற்ற மூன்று தொகுதிகளிலும் 937 மாணவர்களுக்கும், 1,085 மாணவிகளுக்கும் என மொத்தம் 2,022 பேருக்கு 63 லட்சத்து 69 ஆயிரத்து 300 ரூபாய் மதிப்புள்ள சைக்கிள்களை வழங்கினார். 2016 - 17-ஆம் கல்வியாண்டில் கரூர் மாவட்டத்தில் மற்ற மூன்று தொகுதிகளிலும் நான்கு சுற்றுகளாக மொத்தம் 6,295 பயனாளிகளுக்கு, 7 கோடியே 97 லட்சத்து 97 ஆயிரத்து 750 ரூபாய் மதிப்புள்ள விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அரவக்குறிச்சிக்கு மட்டும் தராமல் இழுத்தடிக்கிறார் அமைச்சர். மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜையும் தன் கைக்குள் வைத்துக்கொண்டு அமைச்சர் இப்படிச் செயல்படுகிறார். தம்பி்துரை, 'இப்போதைக்கு அரவக்குறிச்சி தொகுதிக்கு தர வேண்டாம்' என்று சொன்னதாகத் தகவல் சொல்லப்படுகிறது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அமைக்கவிடாமல் இழுத்தடிக்கும் அமைச்சரைக் கண்டித்து செந்தில்பாலாஜி உண்ணாவிரதம் போராட்டம் நடத்தியதைப்போல இந்த விஷயத்திலும் போராட்டம் நடத்த இருக்கிறார்" என்றனர்.

செந்தில் பாலாஜிஇந்த நிலையில், இந்த விவகாரத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கையில் எடுத்திருக்கிறது. அந்தக் கட்சியின் அரவக்குறிச்சி தொகுதிச் செயலாளர் ஆலிம் ஏ.ரிபாய்தீன் ஹாசனிடம் பேசினோம். ''ஏற்கெனவே இந்தத் தொகுதியே எந்த வளர்ச்சியும் இல்லாமல் சவளைப்பி்ள்ளையாக கிடக்கிறது. இந்த லட்சணத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது உள்ள ஈகோவில், அமைச்சர் சைக்கிள் வழங்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. இந்தத் தொகுதி முழுக்கவே பசுமையற்ற பொட்டல்காடு நிறைந்த பகுதி. அதனால், மாணவர்கள் பள்ளிகளுக்கு நடந்துபோகவே சிரமபடுகிறார்கள். இந்நிலையில், அவர்களுக்கு வழங்க வேண்டிய இலவச மிதிவண்டிகளை வழங்காமல் இழுத்தடிப்பது கண்டிக்கத்தக்கது. உடனே, இந்தத் தொகுதியில் ஒரே சுற்றாக எல்லாப் பள்ளிகளுக்கும் மிதிவண்டிகள் வழங்க வேண்டும். இல்லையென்றால், கையெழுத்து இயக்கம், கோட்டைவரை கவன ஈர்ப்பு செய்யும் உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்த இருக்கிறோம்" என்றார் அதிரடியாக.

இதுதொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் பேச முயன்றோம். அவர், நம் அழைப்பை ஏற்காததால் அவரது ஆதரவாளர்களிடம் பேசினோம். ''வரிசையாக ஒவ்வாரு தொகுதியாக அண்ணன் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிவருகிறார். அடுத்து, அரவக்குறிச்சி தொகுதிக்கு வழங்கலாம் என்று இருந்தார். அதற்குள் இந்த விவகாரத்தை செந்தில்பாலாஜி சில கட்சிகளைத் தூண்டிவிட்டுப் பெரிதாக்குகிறார். அதோடு, அண்ணன் அந்தத் தொகுதிக்கு சைக்கிள் வழங்க நினைத்தாலும், பழியை எங்கள் அண்ணன்மீது போட்டு, அவரது பெயரை ரிப்பேராக்கும் பொருட்டு, அரவக்குறிச்சி தொகுதிக்கு மிதிவண்டிகளைத் தரவிடாமல் செந்திலபாலாஜி முட்டுக்கட்டை போடப் பார்க்கிறார்" என்றனர், அமைச்சரை விட்டுக்கொடுக்காமல்.

செந்தில்பாலாஜி தரப்பில் கேட்டால், ''அதெல்லாம் பொய்க் குற்றச்சாட்டு. அரவக்குறிச்சி தொகுதி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்காமல், அண்ணன்மீது உள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சியில் தடுப்பதே அமைச்சர்தான்" என்றனர்.

உங்கள் பாழாய்ப்போன அரசியலை மாணவர்கள் விஷயத்திலுமா காண்பிக்க வேண்டும்?!.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close