Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ராஜினாமா செய்யுங்கள்! - ராஜேந்திர பாலாஜிக்கு எதிராகக் கொந்தளிக்கும் பால் முகவர்கள்

'தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தனது அமைச்சர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்' எனத் தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தனியார் பால் நிறுவனங்கள், ரசாயனத்தைக் கலந்து பால் விற்பனைசெய்வதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டினார். அமைச்சரே இப்படி ஒரு குற்றச்சாட்டைத் தெரிவித்ததால், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள், தனியார் பாலை வாங்க அஞ்சியதுடன், குழந்தைகளுக்குப் பால் வாங்கிக் கொடுக்கக்கூட அஞ்சும் நிலைமை உருவானது. தனியார் பால் நிறுவனங்களின் மாதிரியைச் சோதனைக்கு அனுப்பியிருப்பதாகவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருந்தார். இந்த நிலையில், சோதனைக்கு அனுப்பப்பட்ட பால் மாதிரிகளின் முடிவின்படி, அவை அனைத்தும் பயன்படுத்தத் தகுதி உடையவை என்பது தெரிய வந்திருக்கிறது.

இந்த நிலையில், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்ட அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு பால் முகவர்கள் சங்கம் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, அந்த அமைப்பின் நிறுவனத் தலைவரான சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தனியார் பால் நிறுவனங்கள் ரசாயனக் கலப்படம் செய்கின்றன எனவும், தனியார் பாலைக் குடிப்பதால் குழந்தைகளுக்குப் புற்றுநோய் வருகிறது எனவும் தமிழக பால்வளத்துறை அமைச்சர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அத்துடன், ‘தனியார் பாலில் ரசாயனக் கலப்படம் இல்லை என்று நிரூபித்தால், அமைச்சர் பதவியிலிருந்து விலகவும், தூக்கில் தொங்கவும் தயார்’ என அதிரடியாகப் பேசினார்.

இந்த நிலையில், வழக்கறிஞர் சூர்ய பிரகாசம் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில், தனியார் பால் நிறுவனங்களின் தரம் குறித்தும், பாலில் கலப்படம் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்குறித்தும் ஜூன் 19ஆம் தேதி அறிக்கை தாக்கல்செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். அதன் அடிப்படையில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், நேற்று பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், ’கடந்த 5ஆம் தேதி, ஆகஸ்ட் 2011 முதல் 2017 மே 31ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் சுமார் 886 பால் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுசெய்யப்பட்டன. அதில், 187 பால் மாதிரிகள் தரம் குறைந்து காணப்பட்டதாகவும், எந்தப் பால் மாதிரியும் பாதுகாப்பற்றது என நிரூபணமாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக பால்வளத்துறை அமைச்சரின் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது என்பதைத் தமிழக சுகாதாரத்துறைச் செயலாளரின் பதில் மனு உறுதிசெய்துள்ளது. அப்படியானால், தனியார் பால் நிறுவனங்கள் உயிருக்குத் தீங்கு விளைவிக்கும் ரசாயனப் பொருள்களைக் கலப்படம் செய்யவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனவே, பால் முகவர்களாகிய நாங்கள் மனிதாபிமானமிக்கவர்கள் என்பதால், தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுகின்ற வகையில், தனது அமைச்சர் பதவியை மட்டும் உடனடியாக ராஜினாமா செய்தால் போதும். அத்துடன், இனியாவது ஆதாரமற்ற தகவல்களைப் பொத்தாம் பொதுவாகப் பேசாமல், தனது பொறுப்பை உணர்ந்து அவர் பேச வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close