Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'இது பா.ஜ.கவுக்குள் ஏற்பட்ட புதிய கெமிஸ்ட்ரி!'  - ராம்நாத் தேர்வுக்கு இப்படியும் ஒரு விளக்கம் #VikatanExclusive

ராம்நாத் கோவிந்த்-மோடி

குடியரசுத் தலைவர் தேர்தலையொட்டி, பா.ஜ.க.வுக்கு எதிராகக் கருத்துமோதலைத் தொடங்கியுள்ளன எதிர்க்கட்சிகள். ' பா.ஜ.க வேட்பாளரான ராம்நாத் கோவிந்த், ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர். அவரை முன்னிறுத்துவதை தலித் மேம்பாட்டுக்கானதாகப் பார்க்க முடியவில்லை' என விடுதலைச் சிறுத்தைகள் கொதிக்க, ' பா.ஜ.கவுக்குள் சமூக மாற்றம் உருவாகியிருப்பதையே இந்தத் தேர்வு காட்டுகிறது' என்கிறார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி. 

இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்வதற்கான வேலைகள் தொடங்கிவிட்டன. பா.ஜ.க சார்பில் பீகார் ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்த் போட்டியிடுகிறார். இதற்கான அறிவிப்பை பா.ஜ.க தேசியச் செயலர் அமித் ஷா நேற்று வெளியிட்டார். ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் முதற்கொண்டு பல்வேறு பெயர்கள் பரிசீலனையில் இருந்த நிலையில், யாருமே எதிர்பார்க்காத ராம்நாத் முன்னிறுத்தப்பட்டதை அரசியல் பார்வையாளர்கள் உன்னிப்பாக கவனிக்கின்றனர். இதுகுறித்துக் கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் பேசும்போது, 'வேட்பாளர் தேர்வில் ஒருதலைப்பட்சமாகச் செயல்பட்டுள்ளனர். எதிர்க்கட்சிகளிடம் பேசிக் கருத்தொற்றுமையை உருவாக்கியிருக்க வேண்டும்' எனத் தெரிவித்தார். சி.பி.எம், சி.பி.ஐ உட்பட பெரும்பாலான கட்சிகள், பா.ஜ.கவின் முடிவை எதிர்த்துள்ளன. அட்டவணைச் சமூகத்தைச் சேர்ந்தவரை, குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன்னிறுத்தியது பற்றிக் கருத்து தெரிவித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், 

திருமாவளவன்'பா.ஜ.கவின் தலித் ஆதரவு நிலைப்பாடு என்பதை தலித் மேம்பாட்டுக்கானதாக உணர முடியவில்லை. பெரும்பான்மையான தலித்துகள் நாடு தழுவிய அளவில் தொடர்ந்து மதமாற்றத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் பா.ஜ.க-வுக்கு எதிராக வாக்களிக்கிறார்கள் என்பதும் பா.ஜ.கவுக்கு சவாலாக இருக்கிறது. அவர் தலித் என்பதால் மகிழ்ச்சியடைய ஒன்றுமில்லை. ஏற்கெனவே, காங்கிரஸ் கட்சி கே.ஆர். நாராயணனைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுத்து 5 ஆண்டுக்காலம் பதவி வகித்தார். அவரையும் பா.ஜ.க அறிவித்துள்ள ராம்நாத் கோவிந்த்தையும் சமமாகப் பார்க்க முடியாது. இருவரும் தலித்துகளாக இருக்கலாம். ஆனால், கே.ஆர். நாராயணன் அம்பேத்கர் சிந்தனைகளை உள்வாங்கியவர். ராம்நாத் கோவிந்த் அப்படிபட்டவர் அல்ல. அவர் ஆர்.எஸ்.எஸ் இயக்கச் சிந்தனையாளர். ஆகவே, இருவரின் சிந்தனைக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமாகத்தான் பார்க்கிறேன்" எனக் கொதித்தார். 

திருமாவளவனின் கருத்து குறித்து நம்மிடம் பேசிய புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர். கிருஷ்ணசாமி, " அம்பேத்கர் சிந்தனையிலிருந்து இவர் (ராம்நாத் கோவிந்த்) எப்படி மாறுபட்டவர் என்று எனக்குத் தெரியவில்லை. அம்பேத்கர் புத்த மதத்தைத் தழுவியவர். அவர் மனதிலும் மதச் சிந்தனைதான் இருந்தது. எந்த இடத்திலும் அம்பேத்கர் கம்யூனிஸ்ட்டாக மாறவில்லை. சமூக விடுதலைக்காக மதத்தைத்தான் தழுவச் சொன்னார் அம்பேத்கர். ரஷ்யா, சீனா, கியூபாவைப் போல புரட்சி செய்யச் சொல்லவில்லை. ஆர்.எஸ்.எஸ் என்பதை இவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. ராம்நாத்தை நான் இந்தியனாகத்தான் பார்க்கிறேன்.

நான் அறிந்தவரையில், இந்து என்ற மதம் என்றைக்குமே இருந்ததில்லை. கிறிஸ்துவத்தைத் தழுவக் கூடியவர்கள் கிறிஸ்துவர்களாவும் அல்லாவைப் பின்பற்றுகின்றவர்கள் இஸ்லாமியர்களாகவும் இருக்கிறார்கள். புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் புத்திஸ்ட்டுகளாகவும் ஜைன மதத்தினர் ஜைனர்களாகவும் இருக்கின்றனர். இந்து மதத்துக்கு எந்தக் கடவுளைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியும்? அப்புறம் எப்படி அவரை ஓர் இந்துத்துவவாதி எனச் சொல்ல முடியும்? ஒற்றைக் கடவுளைத் கிருஷ்ணசாமிதொழக் கூடியதாக இந்து மதம் இல்லை. இந்த மண் சார்ந்த கலை, கலாசார பண்பாட்டைத்தான் அவர்கள் வேறு வழியில் சொல்கிறார்கள். நாம் ஏன் வெளிநாட்டுக் கடவுளை வணங்க வேண்டும்? உள்நாட்டில் உள்ள கருப்பனையோ சுப்பனையோ சுடலைமாட சாமியையோ ஏன் வழிபடக் கூடாது? இது சுதேசி என்ற சிந்தனையில் இருந்து எழக் கூடிய ஒன்றாகத்தான் பார்க்கிறேன். இந்து என்பதை கட்டமைக்கப்பட்ட மதமாக நான் பார்க்கவில்லை. 

ராம்நாத் ஒரு சுதேச சிந்தனையாளர். கே.ஆர்.நாராயணனுக்கும் ராம்நாத் கோவிந்துக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை மலைக்கும் மடுவுக்கும் நடுவில் உள்ள வித்தியாசம் என்று சொல்வதை நான் ஏற்கவில்லை. ஒருவர் அந்தப் பதவியில் வந்து அமர்ந்த பிறகுதான், இந்த வித்தியாசத்தைப் பார்க்க வேண்டும். கடந்த மூன்று மாத காலமாக, குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் கசிய ஆரம்பித்தபோது, 'ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை நிறுத்தப் போகிறார்கள்' என்றுதான் தகவல் பரவியது. இப்போது அந்தத் தகவல் அடிபட்டுப் போய்விட்டது. இந்தியாவில் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இரண்டு முறைக்கும் மேல் குடியரசுத் தலைவர் ஆகிவிட்டார்கள். தலித் சமூகத்தில் நாராயணனுக்கு அந்த வாய்ப்பு வந்தது. தற்போது பா.ஜ.க அரசில் அவர்களாக முன்வந்து, பிரபலம் இல்லாத, ஒரு சாதாரண தொண்டனை வேட்பாளராக முன்னிறுத்தியுள்ளதை நாம் வெளிப்படையாக பாராட்ட வேண்டும். அதில் குற்றம் கண்டுபிடிக்க என்ன இருக்கிறது? அவர் இரண்டு முறை மேலவை உறுப்பினராக இருந்திருக்கிறார். ஐ.நா வரை சென்றிருக்கிறார். மிகுந்த அடக்கமான, விசுவாசமான தொண்டராக இருந்திருக்கிறார். 

ஜனநாயகத்தில் ஒன்றுக்கு அடுத்து இரண்டு என்ற நிலையை மாற்றி, இவரைப் போல் ஒருவரை மிக உயர்ந்த பதவிக்கு முன்னிறுத்தியதைவிட வேறு என்ன வேண்டும்? 'எல்லோரும் இந்நாட்டு மன்னர்' என்ற வார்த்தை இப்போதுதான் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இந்த நடவடிக்கையை நாம் அங்கீகரிக்க வேண்டும். 'பா.ஜ.க ஆட்சியில் மேலாதிக்க சிந்தனைதான் இருக்கும். சாதாரண மக்களை அங்கீகரிக்க மாட்டார்கள்' என்ற சிந்தனை தகர்க்கப்பட்டிருக்கிறது. 'இன்னும் சாதாரணமானவர்களைக்கூட நாங்கள் முன்னேற்றுவோம்' என மோடி சொல்வதை நாம் பாராட்டியே தீர வேண்டும். இதில் அரசியல் இருப்பதாக நான் பார்க்கவில்லை. பா.ஜ.க.வுக்குள் ஒரு சமூக மாற்றம் உருவாகியிருப்பதைப் பார்க்க முடிகிறது. அதாவது, புதிய கெமிஸ்ட்ரி ஏற்பட்டிருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம். இதை ஒரு புதிய பரிணாமமாகப் பார்க்கிறேன். மோடியின் சிந்தனையில் ஏற்பட்டுள்ள முற்போக்குப் பொறியாகத்தான் பார்க்கிறேன். ராம்நாத் முன்னிறுத்துப்படுவதை அனைத்து பிற்படுத்தப்பட்ட சமூகங்களும் வரவேற்க வேண்டும். தலித்துகளுக்கு எதிராக பா.ஜ.க அரசு செயல்படுகிறது எனச் சிலர் பேசுகிறார்கள். ஒரு கட்சி திட்டமிட்டு தலித்துகளுக்கு எதிராக செயல்பட வாய்ப்பில்லை. பா.ஜ.க.வின் ஆட்சியைப் பயன்படுத்தி, சில அமைப்புகள் 'பசு பாதுகாப்பு' என்ற பெயரில் சில சம்பவங்களில் ஈடுபட்டிருக்கலாம். பா.ஜ.க என்ற கட்சி இதுபோல் செயல்படுவதற்கான வாய்ப்புகளே இல்லை" என்றார் உறுதியாக. 
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close