Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தினகரனுக்கு எதிர்ப்பு.. சசிகலா, எடப்பாடிக்கு ஆதரவு - உருவாகிறது புது அணி!

அதிமுகவினர்

மூன்று அணிகளாக முட்டிக்கொண்டிருக்கும் அ.தி.மு.க வில் நான்காவதாக ஒரு புதிய அணி  உருவாகியுள்ளது. அ.தி.மு.க வில் ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் பன்னிரண்டு எம்எல்ஏ-க்கள் தனி அணியாக செயல்பட ஆரம்பித்தனர். அதன்பிறகு, முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற பிறகு இரண்டு அணிகளாக அ.தி.மு.க செயல்பட்டது. ஆனால், இரட்டை இலைச் சின்னத்தை மீ்ட்க லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கபட்ட பிறகு தினகரனுக்கு எதிராக அ.தி.மு.கவில் சிலர் முணுமுணுக்கத் துவங்கினார்கள். 

அதே நேரம், பன்னீர்செல்வமும், சசிகலா மற்றும் தினகரனை கட்சியைவிட்டு நீக்கினால் இரண்டு அணிகளும் இணைந்து செயல்படுவதாக அறிவித்தார். அந்த கோரிக்கையை அமைச்சர்களும் ஏற்றுக்கொள்ளும் முடிவுக்கு வந்தார்கள். ஆனால், இதற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன்  ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இவர்கள் தனியாக  சசிகலா-தினகரன் ஆதரவு அணியாக செயல்பட ஆரம்பித்தனர். 

சசிகலா குடும்பத்தை கட்சியிலிருந்து ஒதுக்கிவைக்க வேண்டும் என்று பன்னீர் தரப்பிலிருந்து எழுந்த கோரிக்கைக்கு இந்த தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் இருவரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். தினகரனுக்கும் அ.தி.மு.க கட்சிக்கும் இனி எந்த தொடர்பும் கிடையாது என்று அமைச்சர்கள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தபோது “தினகரனை ஒதுங்கச் சொல்ல அமைச்சர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது” என்று பொங்கினார்கள் அவர்கள். கட்சியிலும் தினகரன் ஆதரவாளர்கள் என்று தனிஅணி உருவாகியது. இதனால் இரண்டு அணிகளாக இருந்த அ.தி.மு.க மூன்று அணிகளாக பரிணாமம் பெற்றது. 

இந்நிலையில், அ.தி.மு.க எம்.பி. அரி சில தினங்களுக்கு முன்  “அ.தி.மு.க வை விட்டு சசிகலா, டி.டி.வி தினகரன் குடும்பத்தினர் நிரந்தரமாக விலக வேண்டும்.” என்று கருத்து தெரிவித்தார்.  இதற்கு தினகரன் ஆதரவு எம்எல்ஏ. வெற்றிவேல் “சசிகலா பற்றி பேச அரி எம்.பி.க்கு அருகதை இல்லை”என்று பதிலடி கொடுத்தார். இதனால் புதிய பிரச்னை அ.தி.மு.கவில் உருவானது. இந்நிலையில், இன்று சட்டசபையிலிருந்து திடீர் என அ.தி.மு.க-வை சேர்ந்த காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் முருகுமாறன் தலைமையில் ஏழு சட்டமன்ற உறுப்பினர்கள் 'திடீர்' வெளிநடப்பு செய்தனர். சட்டமன்றத்திலிருந்து ஆளுங்கட்சி உறுப்பினர்களே வெளிநடப்பு செய்தது கூட்டஅரங்கிலிருந்தவர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

சசிகலா

எந்த கோரிக்கையும் இல்லாமல் முருகுமாறன் தரப்பில் வெளிநடப்பு செய்த ஏழு சட்டமன்ற உறுப்பினர்களும் செய்தியாளர்களைச் சந்தித்தார்கள். அப்போது “சசிகலாவை நாங்கள் பொதுச்செயலாளராக ஏற்றுக்கொண்டோம். அதேபோல முதல்வராக எடப்பாடி பழனிசாமியையும் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் வாரிசு அரசியலை ஒருபோதும் ஊக்குவிக்காத அ.தி.மு.கவில், வாரிசு அரசியலை செய்யும் நோக்கில் தினகரன் செயல்படுகிறார். சசிகலாவுக்குப் பிறகு கட்சியில் எல்லாமுமாகத்தானே இருக்க வேண்டும் என்று அவர் சொல்லிவருவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று அதிரடியாக அறிவித்தார்.

“அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக சசிகலா இருப்பதையோ, முதல்வராக பழனிசாமி தொடர்வதையோ நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், தினகரன் கட்சியை வழிநடத்தத் துடிப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ளமுடியாது” என்ற மனநிலையில்தான் இந்த ஏழுபேரும் உள்ளார்கள். இதனால் அ.தி.மு.கவில் சசிகலா-எடப்பாடிக்கு ஆதரவாக நான்காவதாக ஒரு அணி உருவாகியுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close