Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஒழிக்க வேண்டியது கொசுக்களை அல்ல!'- கைதிகளுக்காகக் கூடும் நீதித்துறை வல்லுநர்கள்

தமிழக சிறைகளில் ஆயுள் கைதிகள் அனுபவிக்கும் துன்பங்கள் குறித்து, வரும் ஜூலை 1-ம் தேதி சென்னை, கவிக்கோ மன்றத்தில் நீதித்துறை வல்லுநர்கள் ஆராய உள்ளனர். இந்நிகழ்வில் முன்னால் நீதிபதி ஹரி பரந்தாமன், தியாகராஜன் ஐ.பி.எஸ், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும் மனித உரிமை போராளியுமான காலின் கன்சால்வஸ் உள்ளிட்டவர்களும் கலந்து கொள்கின்றனர்.

புழல் சிறை

இதுகுறித்து தமிழ்நாடு ஆயுள் சிறைவாசிகளுக்கான களம் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளரான தியாகு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'நெதர்லாந்து நாட்டை நினைத்துப் பெருமைப்பட பல காரணங்கள் இருக்கின்றன. அந்த நாட்டில், 2005-ம் ஆண்டில் 14 ஆயிரத்து 468 ஆக இருந்த சிறைக் கைதிகளின் எண்ணிக்கை அடுத்த பத்தாண்டுகளில், அதாவது 2016-ம் ஆண்டில் 8 ஆயிரத்து 245 ஆக குறைந்துவிட்டது. இந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை மேலும் குறைந்துவிட்டது. கடந்த ஆண்டு மட்டும் 19 சிறைச் சாலைகள் மூடப்பட்டுவிட்டன. போதிய அளவு கைதிகள் இல்லாததுதான் இதற்குக் காரணம். குற்றம் இல்லாத சமூகமாக மாறி வருவதற்கான அறிகுறிகள் இவை. இப்படி ஓர் அதிசயம் இந்தியாவில் நடக்காதா என்ற எண்ணம் மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ஆனால், நமது நாட்டில் புதிய புதிய சிறைச்சாலைகளைத் திறந்து வைப்பதில் பெருமிதம் கொள்கிறோம். எத்தனை பேருக்குத் தண்டனை கொடுத்தோம். எத்தனை பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார்கள் என்ற புள்ளிவிவரக் கணக்கைக் கொடுப்பதில்தான் அரசுகள் ஆர்வம் செலுத்துகின்றன. 

தியாகு

நாம் ஒழிக்க வேண்டியது கொசுக்கள் அல்ல. கொசு உற்பத்தியாகும் இடங்களைத்தான் என்ற புரிதல் இல்லாமல்தான் வாழ்கிறோம். நமது வரிப் பணத்தில்தான் சிறைகள் இயங்குகின்றன என்ற அக்கறைகூட நமக்கு இருப்பதில்லை. நேற்று வரை நம்முடன் சமூகத்தில் ஒன்றாக இணைந்து வாழ்ந்தவர்கள், இன்று சிறையில் வாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கதைகளில் இருந்து நாம் பாடம் படிக்க வேண்டியிருக்கிறது. உணர்ச்சிவசப்பட்டு, குற்றமிழைத்துவிட்ட அந்த மனிதர்கள் திருந்தி வாழும் நிலையைச் சிறைச் சூழல் இன்றைக்கு அளித்திருக்கிறதா என்பதை ஆராய வேண்டும். மரண தண்டனை என்ற தண்டனை வடிவம் இன்றைய நாகரிக உலகத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு மாற்றாக, இன்றைக்குச் சாகும் வரையில் சிறை என்ற தத்துவம் மரண தண்டனையைவிடக் கொடுமையானது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 26 ஆண்டுகளைக் கடந்த பின்னரும், விடுதலை குறித்த எந்த நம்பிக்கையும் இல்லாமல் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் வாடுகின்றனர். 'மூடப்படாத கல்லறையில் நடமாடும் பிணங்கள்' என்று எழுதிய கவிஞரைத்தான் நினைவுகூர வேண்டியுள்ளது. ஆயுள் சிறைவாசிகளின் நிலைமைகள் குறித்து ஆராய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எனவேதான், நீதித்துறையின் முன்னோடிகளை அழைத்து விவாதிக்க இருக்கிறோம். அரசின் கவனத்துக்கு ஆயுள் சிறைவாசிகளின் கவலைகள் சென்று சேரும் என நம்புகிறோம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close