Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாணவிகளிடம் அத்துமீறல் - பள்ளி ஆசிரியர் மீது பொதுமக்கள் சரமாரித் தாக்குதல்!

அத்துமீறிய பள்ளி ஆசிரியர்

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்துள்ள குரும்பபாளையம் என்னும் ஊரில், ஊராட்சி நடுநிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. 1 முதல் 8-ம் வகுப்புவரை 400 மாணவர்கள் இப்பள்ளியில் பயின்றுவருகின்றனர். பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட, ஆதி திராவிட இனத்தைச் சேர்ந்த பிள்ளைகளே அதிகம் படிக்கும் இந்த அரசுப் பள்ளியில், 4-ம் வகுப்புப் பயிலும் மாணவர்களுக்கு வகுப்பு ஆசிரியராக இருந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர், தன் வகுப்பில் பயிலும் ஆதி திராவிடர் காலனியைச் சேர்ந்த சில மாணவிகளிடம் கடந்த சில நாள்களாகத் தொடர்ச்சியாகப் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். ஆசிரியர் தங்களிடத்தில் பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவதுகூடத் தெரியாமல் அந்தச் சின்னஞ்சிறு சிறுமிகள் இருக்க, ஒரே ஒரு சிறுமி மட்டும் அவளது பெற்றோரிடம்... ''கிருஷ்ணமூர்த்தி சார், என்னிடமும் என் தோழிகளிடமும் வித்தியாசமாக நடந்துகொள்கிறார்'' என்று தெரிவித்திருக்கிறார். மற்ற மாணவிகளும் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள்தான் என்பதால், அவர்களது பெற்றோர்களிடமும் பேசி, பாதிக்கப்பட்ட மாணவிகளிடமும் நடந்த சம்பவத்தைப் பற்றி முழுமையாக விசாரித்திருக்கிறார்கள். ஆசிரியர் நடந்துகொண்ட விதம் பற்றி மாணவிகள் ஒவ்வொன்றாகக் கூற, ஆத்திரத்துடன் பள்ளியை இன்று முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர் பெற்றோர்கள்.

அத்துமீறிய பள்ளி ஆசிரியர்

அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் முற்றுகையில் கலந்துகொண்டதால் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி பள்ளி வகுப்பறைக்குள் ஓடி ஒளிந்துகொண்டார். கோபமடைந்த பொதுமக்கள் பள்ளி வளாகத்தின் உள்ளே ஒளிந்துகொண்டு இருந்த கிருஷ்ணமூர்த்தியைத் தேடிப் பிடித்து, சரமாரியாக அடித்து வெளியே அழைத்துவந்தனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் பொதுமக்களைச் சமாதானப்படுத்தி, கிருஷ்ணமூர்த்தியைக் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால் கொதிப்படைந்த மக்கள், ''கிருஷ்ணமூர்த்தியை உடனடியாகப் பணிநீக்கம் செய்வதாகப் பள்ளி நிர்வாகம் அறிவித்தபிறகு அழைத்துச் செல்லுங்கள்'' என்று கோரிக்கைவைத்தனர். ஆனால், ஆசிரியரை வாகனத்தில் ஏற்றி அழைத்துச் செல்ல காவல் துறையினர் தொடர்ந்து முயற்சிக்க, போலீஸாரின் வாகனத்தைச் சிறைப்பிடித்த பொதுமக்கள், சாலையில் அமர்ந்து கோஷமிடத் தொடங்கினர்.

''ஆசிரியர்மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று அதிகாரிகள் உத்தரவாதம் அளித்தபிறகே, கிருஷ்ணமூர்த்தியை அங்கிருந்து அழைத்துச் செல்ல பொதுமக்கள் அனுமதித்தனர். பின்னர், குழந்தைகளுக்கான பாலியல் குற்றப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவுசெய்து ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியைச் சிறையில் அடைத்திருக்கிறது காவல் துறை.

அத்துமீறிய பள்ளி ஆசிரியர்

மாணவிகளின் புகார் குறித்துப் பேசிய பெற்றோர்கள், ''சம்பந்தப்பட்ட ஆசிரியர் இந்தப் பள்ளியில் சேர்ந்து ஒரு வருடம்தான் ஆகிறது. ஆரம்பம் முதலே மாணவிகளுக்கு மிட்டாய் வாங்கித் தருவது, மடியில் அமரவைத்துக் கொஞ்சுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார். பருவமடைந்த மாணவிகளின் உள்ளாடைகளைக் கழட்டிவிட்டு வேடிக்கை பார்ப்பது போன்ற அருவருக்கத்தக்கச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கிறார். பாதிக்கப்பட்ட மாணவி வெளியே சொன்னதுக்குப் பிறகுதான், இத்தனை மாணவிகளும் அவரால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் எனத் தெரியவந்தது.

நாங்கள் அனைவரும் வேலைக்குப்போய் கஷ்டப்பட்டு உழைப்பதே, எங்கள் குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் நிம்மதியாகப் படிக்கும் என்ற நம்பிக்கையில்தான். இப்படிப்பட்டவர்களுக்கு எல்லாம் வாத்தியார் வேலை கொடுத்தால் எங்கள் குழந்தைகள் எப்படிப் படித்து முன்னேறும்'' என்றனர் வேதனையுடன்.

கல்வி பெறுவதற்கே கடும் போராட்டங்களைச் சந்திக்கும் தாழ்த்தப்பட்ட மாணவிகள், இத்தகைய கொடுமைகளையும் அனுபவித்துக்கொண்டு இருப்பதைத் தமிழகக் கல்வித் துறை கட்டாயம் கவனிக்க வேண்டும்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close