Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜெயலலிதாவின் வாக்குறுதியைக் காப்பாற்றுங்க முதல்வர் பழனிசாமி அவர்களே! - புதுவாழ்வுத் திட்டப் பணியாளர்களின் கோரிக்கை

புதுவாழ்வுத் திட்டம்

கிராமப்புற ஏழ்மையை நீக்க உதவும் வகையில் செயல்படுத்தப்படும் புதுவாழ்வுத் திட்டம், ஒருசில மாதங்களில் நிறைவடையப் போகிறது. அதனால், இரண்டாவது புதுவாழ்வுத் திட்டத்தைச் செயல்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. "மீண்டும் செயல்படுத்தப்படும் திட்டத்திலும் தற்போது பணிபுரியும் பணியாளர்களே தொடர்ந்து பணிபுரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என முதல்வர் ஜெயலலிதா, கடந்த சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின்போது, அரக்கோணத்தில் பேசுகையில் உறுதியளித்தார். "அந்த வாக்குறுதியைத் தற்போதைய ஆட்சியாளர்கள், மறந்துவிட்டார்கள்" எனப் புதுவாழ்வுத்திட்டப் பணியாளர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே அன்னை தெரசா மகளிர் திட்ட வளாகத்தில் உள்ள புதுவாழ்வுத் திட்ட தலைமை அலுவலகத்தில், ஜூன் 28-ஆம் தேதி முதல், தமிழகம் முழுவதிலும் இருந்து வந்துள்ள 1,500-க்கும் மேற்பட்ட புதுவாழ்வுத் திட்டப் பணியாளர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் பேசினோம்.

“கடந்த 15.11.2005 அன்று முதன்முதலில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால், புதுவாழ்வுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர்வந்த தி.மு.க ஆட்சியில், “வாழ்ந்து காட்டுவோம்” என்ற பெயரில் அத்திட்டம் மாற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டது. இந்நிலையில், 2011-ஆம் ஆண்டு அ.தி.மு.க மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றதும் "புதுவாழ்வு திட்டம்" மீண்டும் புதுப்பொலிவுடன் ஆரமிக்கப்பட்டது. ஒப்பந்த அடிப்படையில் உலக வங்கி நிதியுதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள ஏழைகள் மற்றும் மிகவும் ஏழைகளைக் கணக்கெடுத்து, வறுமை ஒழிப்புச் சங்கங்கள் உருவாக்கப்படுகின்றன. இந்தச் சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ளவர்கள், சுயதொழில் தொடங்க வங்கிகளில் இருந்து கடன்பெற்றுத்தருதல், சுழல்நிதி வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். 

இப்படியான புதுவாழ்வுத் திட்டத்தில், கடந்த 10 வருடங்களுக்குமேலாகப் பணியாற்றி வருகிறோம். இப்போது ஜூன் 30-ஆம் தேதியுடன் ஒப்பந்தம் முடிவடைகிறது. இதனால் அத்திட்டத்தின் கீழ் பணியாற்றும் எங்களுக்கு 'வேலைஇல்லை. நீங்கள் வீட்டுக்குப் போகலாம்' என்று அரசுத்தரப்பில் கூறுகிறார்கள். ஆனால், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அரக்கோணத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசுகையில், 'உலக வங்கி உதவியுடன் செயல்படும் புதுவாழ்வுத் திட்டம், சில மாதங்களில் நிறைவடைய உள்ளது. அடுத்து 'இரண்டாவது புதுவாழ்வுத் திட்டம்' செயல்படுத்தப்பட உள்ளதால், தற்போது பணிபுரியும் பணியாளர்களே இரண்டாவது திட்டத்திலும் தொடர்ந்து பணிபுரிவார்கள்' என்றார். அதை நம்பி நாங்கள் இதுநாள்வரை பணியாற்றினோம். ஆனால் தற்போது, ஆட்சியில் இருப்பவர்கள், ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதியைக் காற்றில் பறக்க விடுகிறார்கள்” எனப் புலம்பினார்கள்.

புதுவாழ்வுத்திட்டப் பணியாளர்கள்

புதுவாழ்வுத்திட்டப் பணியாளர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் குமரகுருபரன், “முதுகலை மற்றும் சமூகப்பணித்துறை படிப்புகள் படித்துவிட்டு, முறையாகத் தேர்வெழுதி இந்தப்பணிக்குத் தேர்வு செய்யப்பட்டோம். சிலர் சீனியாரிட்டி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டார்கள். 10 வருடங்களுக்கும் மேலாகப் பணியாற்றும் எங்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, மீண்டும் தேர்வுமூலம் இந்தப் பணிக்கு ஆட்களைத் தேர்வுசெய்ய உள்ளதாகக் கூறுகிறார்கள். இது முழுக்கமுழுக்க, எங்கள் வயிற்றில் அடிக்கும் செயல். பல வருடங்கள் அனுபவம் உள்ள நாங்கள், மீண்டும் பரீட்சை எழுத வேண்டுமாம். எங்களில் பலருக்கு 45 வயது கடந்துவிட்டதால், பரீட்சையே எழுத முடியாது. அதுமட்டுமல்லாமல், எங்களுக்கு வரவேண்டிய பணப்பலன், விடுமுறைக்கால தொகை உள்ளிட்ட எதுவுமே வழங்கப்படவில்லை. எங்களை வீட்டுக்கு அனுப்பினால், கிட்டத்தட்ட 1,500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிற்கதியாக நிற்கும் நிலை உருவாகும். இதுகுறித்து தமிழகம் முழுக்க ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்தோம். அடுத்து மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தினோம். ஆனாலும் அரசு மனமிறங்கவில்லை. அடுத்து ஊரக வளர்ச்சித்துறை முதன்மைச் செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா, புதுவாழ்வுத் திட்ட கூடுதல் இயக்குநர் சம்பத் ஆகியோருடன் எங்கள் சங்கத்தின் நிர்வாகிகள் சந்தித்துத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். எதுவும் பலன் அளிக்காததால், வேறுவழியில்லாமல் இப்போது போராடுகிறோம். ராத்திரி, பகலாகப் போராடும் எங்கள் கோரிக்கையை ஏற்று, ஜெயலலிதா எங்களுக்குக் கொடுத்த வாக்குறுதியைத் தமிழக முதல்வர் நிறைவேற்ற வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தார்.

ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்துவதாகக் கூறும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அவர் அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றுவாரா?

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close