Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பரிகார பூஜையில் பலாத்கார முயற்சி! - சாமியார் அடித்துக்கொலை

சாமியார் நந்தகுமார்

கேரள மாநிலம் பாலக்காடு நெச்சோடு பகுதியைச் சேர்ந்தவர் மந்திரவாதி நந்தகுமார் (எ) சுரேஷ், வயது 43. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பேளூர் சி.என் பாளையத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன். 

மந்திரவாதி சுரேஷ், கோவிந்தனிடம் ''உனது வீட்டில் செய்வினை இருக்கிறது. அதனால்தான் உன் குழந்தைக்குக் குறைபாடு, குடும்பத்தில் அடிக்கடி பிரச்னைகள் என உனக்குத் தொடர்ந்து கஷ்டங்கள் வருகிறது'' என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து செய்வினையை எடுப்பதாகக் கூறி கோவிந்தனின் வீட்டிலேயே ஒருவாரம் தங்கி இருந்து பரிகார பூஜை செய்திருக்கிறார் சாமியார் சுரேஷ். 

சாமியாருக்கு நாட்டுக்கோழி குழம்போடு விருந்து வைத்து சந்தோஷப்படுத்தியிருக்கிறார் கோவிந்தன். ஒருநாள் இரவில், கோவிந்தனின் மனைவியைத் தனி அறையில் உட்கார வைத்துப் பரிகார பூஜை செய்வதாகக் கூறி சில்மிஷம் செய்திருக்கிறார் சாமியார். இதையறிந்த கோவிந்தன், கோபத்தில் மந்திரவாதியின் மண்டையைக் கடப்பாரையால் அடித்துக் கொன்றுவிட்டார். பின்னர் பிணத்தைச் சுடுகாட்டுக்கு எடுத்துச்சென்று அரைகுறையாக எரித்துப்போட்டுவிட்டு வீடுதிரும்பிவிட்டார். பாதி எரிந்த நிலையில் கிடந்தப் பிணத்தைக் கைப்பற்றிய போலீஸார் விசாரணை நடத்தி, கோவிந்தனைக் கைதுசெய்துள்ளனர்.

இந்நிலையில், கோவிந்தனின் மனைவி லட்சுமியிடம் சம்பவம் குறித்துப் பேசினோம். ''போட்டோ போடாதீங்க சாமீ'' என்ற வேண்டுதலோடு நம்மிடம் பேச ஆரம்பித்தவர், ''எங்க வீட்டுக்காரர் பெயர் கோவிந்தன். எனக்கும்  எங்க வீட்டுக்காரருக்கும் 20 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. எங்களுக்கு சிவராமன் (வயது 19), தேன்மொழி (வயது 17), சத்யா (வயது 14), லட்சுமணன் (வயது 11) என 4 பிள்ளைகள் இருக்கிறார்கள். நாங்கள் வாழப்பாடி அருகேயுள்ள பேளூர் சி.என் பாளையத்தில் குடியிருக்கிறோம்.

எங்க வீட்டுக்காரர் தலைவாசலில் உள்ள ஐயங்கார் பேக்கரியில் டீ மாஸ்டராகவும், கேஷியராகவும் வேலை பார்க்கிறார். நான் கிராமத்தில் விவசாயம் செய்துகொண்டிருக்கிறேன். எங்களது உழைப்பில் கிடைக்கும் குறைந்த வருமானத்தில் குடும்பம் நடத்திட்டு இருக்கிறோம். எங்க மூத்த மகன் சிவராமன் மனவளர்ச்சி குன்றியவன். சேலம் கன்னங்குறிச்சியில் உள்ள தாய் அன்புக்கரங்கள்  மனவளர்ச்சி குன்றியப் பள்ளியில் படித்து வருகிறான். எங்க பெரிய பொண்ணு தேன்மொழி பேளூர் அரசு மேல் நிலைப்பள்ளியில், ப்ளஸ் டூ படிக்கிறது. சி.என் பாளையத்திலேயே இளைய மகள் சத்யா 9-ம் வகுப்பும், இளைய மகன் லட்சுமணன் 6-ம் வகுப்பும் படித்துவருகிறார்கள்.

இந்நிலையில், ஒரு மாதத்துக்கு முன்பு எங்க வீட்டுக்காரர் கோவிந்தன் தலைவாசல் பேக்கரியில் வேலை செய்துகொண்டிருக்கும்போது கடைக்கு வந்த ஒரு சாமியார் என் கணவரைப் பார்த்து, 'உனக்கு நிறைய கஷ்டங்கள் இருக்கு. குடும்பத்தில் பல பிரச்னைகள் இருக்கின்றன. உன் குழந்தைக்கு குறைபாடுகள் இருக்கு. அதற்குப் பரிகார பூஜை செய்தால் சரியாகிவிடும்' என்று கூறி அவருடைய விசிட்டிங் கார்டையும் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார்.

அதை எங்க வீட்டுக்காரர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதன் பிறகு தொடர்ந்து கடைக்கு வருவதும் போவதுமாக இருந்து என் கணவரிடம் பேச்சு கொடுத்திருக்கிறார். அவரும் சாமியாரை நம்பி குடும்பப் பிரச்னைகளைச் சொல்லி இருக்கிறார். 'நீங்கள் சொன்னது போலவே என் மூத்த மகன் மனவளர்ச்சி பாதிக்கப்பட்டிருக்கிறது' என்றிருக்கிறார். அதற்கு அந்த சாமியார்  'அது ஒன்றும் இல்லை. அவனைக் குணப்படுத்தி விடலாம். அதற்கு ஒரு சின்ன பரிகாரம் செய்தால் போதும். 5,000 ரூபாய் செலவாகும். அந்தப் பரிகார பூஜை செய்தால், பையன் நல்லா குணமாகி விடுவான்' என்று கூறி என் கணவரின் போன் நம்பரை வாங்கிக் கொண்டான்.

கடந்த 19-ம் தேதி என் கணவருக்குப் போன் பண்ணிய சாமியார், 'முதலில் அட்வான்ஸாக 1,000 ரூபாயைக் கொடு, பூஜைக்குத் தேவையான அனைத்து பொருள்களும் நானே வாங்கிட்டு வருகிறேன்.  ஒரு வாரம் உங்க வீட்டிலேயே தங்கியிருந்து இந்த பூஜையை அமாவாசைக்குள் முடிக்க வேண்டும்' என்று சொன்னதை அடுத்து எங்க வீட்டுக்காரர் 1,000 ரூபாய் கொடுத்துள்ளார். பூஜைக்குத் தேவையான பொருள்களை வாங்கிக் கொண்டு 19-ம் தேதி இரவு எங்க வீட்டுக்கு சாமியார் வந்தார்.

20-ம் தேதியும், 21-ம் தேதியும் இரவு முழுவதும் எங்க வீட்டைச் சுற்றி பூஜைகள் செய்தார். 22-ம் தேதியும், 23-ம் தேதியும் இரவு முழுவதும் தனி அறையில் என் மூத்த மகள் தேன்மொழியை வைத்துப் பூஜைகள் செய்தார். 24-ம் தேதி என்னை தனி அறையில் உக்கார வைத்துப் பூஜைகள் செய்தார். அப்போது எனக்குத் தீர்த்தம் மாதிரி ஏதோ மூலிகை கொடுத்தார். அதனால் தலை சுற்றி மயக்கம் வருவதுபோல்  இருந்தது. அப்போது சாமியார் என் மேலாடைகளைக் கழற்றித் தவறு செய்ய முயற்சித்தார். மயக்கத்தோடே வெளியே ஓடி வந்து என் கணவரிடம் நடந்ததைச் சொல்லி அழுதேன்.

என் கணவர் சாமியாரிடம் போய், 'என்ன சாமி இப்படி செய்துவிட்டீர்களே' என்று அழுதார். அதற்கு அந்தச் சாமியார்,  'டேய் இதுபற்றி கண்டு கொள்ளக்கூடாது. வெளியே சொன்னால் உங்க குடும்பத்துக்கே செய்வினை செய்து எல்லோருக்கும் கை, கால்கள் வராமல் செய்து விடுவேன்' என்று மிரட்டினார். மேலும், 'நீர்வளம் உள்ள சுடுகாட்டுக்குச் சென்று ஒரு பரிகார பூஜை செய்துவிட்டால் எல்லாம் சரியாப் போயிடும்' என்றார் சாமியார். எனவே, சாமியாரோடு என் கணவரும், கணவரின் அண்ணன் நாராயணனும் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள அக்ரஹாரம் ஏ.என் மங்கலம் சுடுகாட்டுக்குப் போனாங்க. அப்போது, 'இந்தச் சாமியார், நம் குடும்பத்துக்கே செய்வினை வைத்து அழித்துவிடுவான்' என்று பயந்த என் கணவர், சாமியார் கண்களை மூடி பூஜை செய்து கொண்டிருக்கும்போது, பூஜைக்கு வைத்திருந்த கடப்பாரையை எடுத்து அவரது நடு மண்டையில் அடித்துக்கொன்றுவிட்டார். பின்னர், டூ வீலரில் இருந்த பெட்ரோலை சாமியாரின் உடல் மீது ஊற்றி எரித்துவிட்டார்.

எங்க பெரிய பையன் மன வளர்ச்சியால் பாதிக்கப்பட்டிருக்கிறான் என்ற ஒரே காரணத்துக்காக இந்த சாமியாரை நம்பி, வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தார் என் கணவர். என் குழந்தைகளுக்கும் எனக்கும்கூட இதுவரை நாட்டுக்கோழி ஆக்கிப்போட்டதில்லை. 'இந்தச் சாமியாருக்குக் காலையில் சுடச்சுட கடை இட்லியும் மதியம் நாட்டுக்கோழி கறிச் சாப்பாடும், இரவு பரோட்டாவும் வாங்கிக் கொடுத்தோம். இப்படி செய்துவிட்டானே' என்ற கோபத்தால் என் கணவர் மந்திரவாதியைக் கொன்றுவிட்டார். என் கணவரைக் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டார்கள். நான் கூலி வேலை செய்து எப்படி என் குழந்தைகளைக் காப்பாற்றப் போகிறேன் என்று தெரியவில்லை'' என்றுகூறி அழுதார்.

காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, ''இந்த மந்திரவாதிக்கு ஏற்கெனவே கேரளாவில், திருமணம் முடிந்து ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள். இவன் ஆரம்பத்தில் சொந்த ஊரிலேயே ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்தான். அதன் பிறகுதான் செய்வினை எடுப்பதாகச் சொல்லி மஞ்சள் வேட்டி கட்டிக்கொண்டு சாமியார் வேடம் தரித்து தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறான்.

விழிப்பு உணர்வு இல்லாத படிக்காத ஏழைகளைக் குறி வைத்து அவர்களிடம் பேச்சுக் கொடுத்து செய்வினை எடுப்பதாகச் சொல்லி அந்த வீடுகளிலேயே தங்கிவிடுவான். பின்னர், இரவு நேரத்தில், அந்த வீட்டில் உள்ள பெண்களைத் தனி அறையில் உட்கார வைத்துப் பரிகார பூஜைகள் செய்வதாகச் சொல்லி பாலியல் பலாத்காரம் செய்துவிடுவான். இதற்கு முன்பு சின்னசேலத்தில் இதேபோல செய்துவிட்டு தப்பித்து ஓடி வந்திருக்கிறான். இங்கு வந்தும் அதே கைவரிசையைக் காட்டியதால், அடித்துக் கொன்றிருக்கிறார்கள்'' என்றனர்.

விஞ்ஞானம் உச்சம் தொடும் இந்த நாள்களிலும், சாமி, பூசை, மந்திரம் என்று நம்பிச் சீரழியும் அப்பாவி மக்களிடையே சிந்தனையை வளர்த்தெடுப்பதே மூட நம்பிக்கையை ஒழிக்கும் ஒரே வழி!

சிந்தியுங்கள் மக்களே....

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close