Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருச்சி மக்களை அச்சுறுத்தும் அரியமங்கலம் குப்பைக்கிடங்கு தீவிபத்து.

கடந்த 2 நாள்களுக்கும் மேலாக தீப்பிடித்து எரியும் திருச்சி அரியமங்கலம் குப்பைக்கிடங்கின் தீயை அணைக்க முடியாமல், அரசு நிர்வாகம் தவித்துவருகிறது.

trichy waste fire

திருச்சி அரியமங்கலத்தில், சுமார் 57 ஏக்கர் பரப்பளவில் குப்பைக் கிடங்கு உள்ளது. திருச்சி மாநகரின் குப்பைகள் அனைத்தும் இந்தக் கிடங்கில்தான் கொண்டுவந்து கொட்டப்படுகிறது. தினமும் சுமார் 400 டன் வரை குப்பைகள் சேர்கின்றன. இந்நிலையில், குப்பைக் கிடங்கின் பின்பகுதி மற்றும் நடுப்பகுதியில் நேற்று முன்தினம் காலை முதல் லேசான புகை வந்தது. அடுத்த சில மணிநேரங்களில் தீ கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. இதனால், அந்தப் பகுதி முழுவதும் ஒரே புகைமூட்டமாகவும், திருச்சி - தஞ்சை சாலை மற்றும் அம்பிகாபுரம் பகுதி இருண்டும் காணப்பட்டது. கடந்த இரண்டு நாள்களாக, குப்பைக் கிடங்கில் கொழுந்து விட்டு எரியும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடிவருகின்றனர். இந்தத் தீவிபத்து, திருச்சி வாசிகளிடையே பெரும் அச்சத்தை உண்டாக்கியுள்ளது.

இந்தத் தீயால் ஏற்பட்ட புகை மண்டலத்தால், அந்தப் பகுதி மக்கள் மற்றும் குழந்தைகள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர். பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் சாலையில் பயணிக்க முடியாத நிலை உண்டானது. புகைவெளியேறி வருவதால், பள்ளி முடிந்து வீடு திரும்பிய 11 மாணவர்கள் பாதிப்படைந்தனர். அவர்கள், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானதால் பதற்றம் நிலவியது. நச்சுப் புகையின் நெடி தாங்காமல் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் வீடுகளைப் பூட்டிவிட்டு தொலைவில் உள்ள உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்துவருகின்றனர்.

மேலும், இந்தக் குப்பைக்கிடங்கால் பல்வேறு நோய்கள் உருவாகலாம் என்பதால், திருச்சி மாநகருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள வேறு இடத்துக்கு, இந்தக் குப்பைக் கிடங்கை மாற்ற வேண்டும் என மக்கள் போராடிவருகின்றனர். ஆனாலும், மக்களின் கோரிக்கையை அரசு கண்டுகொள்ளவில்லை.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி

இந்நிலையில், இன்று தீப்பற்றி எரியும் அரியமங்கலம் குப்பைக்கிடங்கைப் பார்வையிட்ட திருச்சி திருவெறும்பூர் எம்எல்ஏ., அன்பில் மகேஷ் பொய்யாமொழி,

“இந்தக் குப்பைக்கிடங்கில் ஏற்படும் தீவிபத்தால், இந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் பல பகுதிகளுக்குக் குடிபெயர்ந்துவருகின்றனர். இந்தப் பகுதி மக்களின் நலன் பாதிக்கப்படுகிறது.மேலும், அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர்களைக் காவு வாங்கும் பகுதியாக விளங்கும் திருச்சி துவாக்குடி பகுதியில் சுரங்கப்பாதை அமைப்பது தொடர்பாகவும் சட்டமன்றத்தில் பேச உள்ளேன்.

நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்க வழி செய்வேன். 'தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் கடந்த சில வருடங்களுக்கு முன் இரண்டாம் இடத்தில் இருந்த திருச்சி, இந்த அரியமங்கலம் திட்டத்தால்தான் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், திருச்சி ஸ்மார்ட் சிட்டி திட்டம் வர உள்ளது. திருச்சி மக்களின் நீண்டகால கோரிக்கையாக விளங்கும் இந்த அரியமங்கலம் குப்பைக்கிடங்கு பிரச்னைக்கு அரசு நிரந்தரத் தீர்வு காண வழிசெய்ய வேண்டும்”என்றார்.

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close