Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பொதுமக்கள் மணல் வாங்குவது எப்படி? மொபைல் ஆப் மூலம் விளக்கிய மாவட்ட ஆட்சியர்

 

மணல்

இணையச் சேவைமூலம் பொதுமக்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் எளிதாக மணலை முன்பதிவு செய்யலாம் என்கிறார் திருச்சி மாவட்ட ஆட்சியர் ராசாமணி. திருச்சி மாவட்டம், துவாக்குடி பாசன மேலாண்மைப் பயிற்சி நிலையத்தில் தமிழ்நாடு மணல் இணையச் சேவை, இணையதளம் மற்றும் மொபைல் ஆப் பயன்படுத்துவதுகுறித்து சிறப்புப் பயிற்சி முகாம் நடைபெற்றது.

முதன்மை தலைமைப் பொறியாளர் ம.பக்தவத்சலம், தலைமைப் பொறியாளர் மோ.பழனிகுமார், கண்காணிப்புப் பொறியாளர்கள் ரவிச்சந்திரன், செல்வராஜ், பாசன மேலாண்மைப் பயிற்சி நிலைய இயக்குநர் மற்றும் தலைமைப் பொறியாளர் கு.சி.அப்துல்ரஷீத், கனிமம் மற்றும் கண்காணிப்புக் கோட்ட செயற்பொறியாளர் ரா.ராமச்சந்திரன் மற்றும் திருச்சி, கரூர், சேலம், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் பங்கேற்றனர்.  

மொபைல் ஆப்-பைத் தொடங்கிவைத்து பேசிய மாவட்ட ஆட்சியர் ராசாமணி, தமிழகத்தில் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான மணல் உபயோகிப்பாளர்களுக்கு எளிதில் கிடைத்திட ஏதுவாக, தமிழ்நாடு மணல் இணையச் சேவை இணையதளத்தையும், மொபைல் ஆப்-பையும் முதல்வர் தொடங்கிவைத்தார். இந்தச் சேவையின்மூலம் பொதுமக்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் தங்களுக்குத் தேவையான மணலை முன்பதிவுசெய்து பெற்றுக்கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மணல் லாரிகள் நீண்ட வரிசையில் காத்திருப்பது தவிர்க்கப்பட்டு, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் குவாரிகளுக்கும் மணல் விற்பனை நிலையங்களுக்கும் வந்து நேரடியாக மணலைப் பெற்றுக்கொள்ளலாம். பொதுமக்கள், தமிழ்நாடு மணல் இணைய சேவை மொபைல் ஆப்-பில் தங்கள் விவரங்களைப் பூர்த்திசெய்து, நடப்பிலுள்ள குவாரி வரிசையில் தங்களுக்கு விருப்பமான வரிசையைத் தேர்வுசெய்து, மணலைப் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், லாரி உரிமையாளர் தன்னைப்பதிவு செய்துகொண்டு, எளிய முறையில் தன்னிடமுள்ள லாரிகளைத் தனது கணக்கின் கீழ் சேர்த்துக்கொள்ளலாம். பதிவுசெய்யப்பட்ட லாரியின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டவுடன், திருச்சி மண்டலத்தில் உள்ள மணல் குவாரிகளில் முன்பதிவுசெய்து மணலைப் பெற்றுக்கொள்ளலாம். லாரிகளைச் சேர்க்க அளவு வரம்புகள் கிடையாது. ஒரு முறை லாரி உரிமையாளராக நீங்கள் பதிவு செய்தபின், உங்களுக்குச் சொந்தமான எத்தனை லாரிகளை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம். பொதுமக்கள், லாரி உரிமையாளர்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்தி, எளிய முறையில் மணலைப் பெற்று பயனடையலாம். பொதுமக்கள், மணலை எளிதாகப் பெறுவது மற்றும் லாரி உரிமையாளர்கள் மணல் எடுத்துச் செல்லக்கூடிய வழிமுறைகளில் உள்ள குறைபாடுகளைப் போக்கிக்கொள்வதற்கும் இந்தப் பயிற்சி முகாம் பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close