Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இவர்களையும் விட்டுவைக்கவில்லை ஜிஎஸ்டி! தமிழகம் முழுவதும் 5 லட்சம் தொழிலாளர்கள் கண்ணீர்

ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகம் முழுவதும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் ஆலைகளை இன்று முதல் மூடி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தீப்பெட்டித் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 5 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழப்பால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய அளவில் மொத்தத் தீப்பெட்டி உற்பத்தியில் 85 சதவிகித அளவு தமிழகத்தில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விருதுநகர் மாவட்டம் சிவகாசி, நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆகிய பகுதிகளில் தீப்பெட்டித் தொழில் பரவலாக நடைபெற்று வருகிறது. இதில் 300க்கும் மேற்பட்ட பகுதி நேர இயந்திரத் தீப்பெட்டி ஆலைகளும், 20க்கும் மேற்பட்ட முழு நேர இயந்திரத் தீப்பெட்டி ஆலைகளும் இயங்கி வருகின்றன. ஏற்கெனவே தீப்பெட்டி தயாரிப்பதற்கான மூலப் பொருள்களின் விலைவாசி உயர்வால் சிறுதொழில் பட்டியலிலிருந்து தீப்பெட்டித் தொழில் நீக்கம் போன்ற காரணங்களால் தீப்பெட்டித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. மூலப்பொருளின் விலைவாசி உயர்வால் பல சிறிய அளவிலான ஆலைகள் தொடர்ந்து நடத்திட முடியாமல் மூடப்பட்டே விட்டன.

ஜிஎஸ்டி வரிவிதிப்பால் மீண்டும் தீப்பெட்டித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளன. கையினால் செய்யப்படும் தீப்பெட்டிக்கு 5%, பகுதி மற்றும் முழுநேர இயந்திர தீப்பெட்டிக்கு 18% ஜிஎஸ்டி வரிவிதித்துள்ளது மத்திய அரசு. இதில் பகுதிநேர மற்றும் முழுநேர இயந்திரத் தீப்பெட்டித் தொழிலுக்கான வரிவிதிப்பில் வித்தியாசம் இருக்க வேண்டுமென்பதை வலியுறுத்தியும், வரிவிதிப்பைக் குறைக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் இன்று முதல் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் தீப்பெட்டி ஆலைகளை மூடி காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கழுகுமலை, விளாத்திகுளம், எட்டயபுரம், கடம்பூர், வானரமுட்டி ஆகிய பகுதிகளில் உள்ள தீப்பெட்டி ஆலைகளை மூடி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.


இதன் காரணமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வந்த சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழப்பால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 'குடும்பத்தை நடத்தமுடியாத நிலைக்கு சென்றுவிட்டோம்' என்று தொழிலாளர்கள் கண்ணீர் வடிக்கின்றனர். தினமும் 10 கோடி மதிப்பிலான தீப்பெட்டி உற்பத்தி பாதிக்கப்படுவதோடு சுமார் 100 கோடி மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்களும் ஆலைகளில் தேக்கமடைந்துள்ளன. வரும் 3ம் தேதி தீப்பெட்டி தொழிலாளர்களைக் கொண்டு பேரணி நடத்திடவும், மத்திய அரசு தங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை தினமும் மத்திய கலால்துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவது எனவும், வரும் ஜூலை 10ம் தேதி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close