Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

''போலீஸ் ஓட ஓட விரட்டி அடிச்சாங்க... அசிங்கமா திட்டினாங்க'' - வெடிக்கும் கதிராமங்கலம் பெண்கள்

கதிராமங்கலம்

ஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள கதிராமங்கலத்தின் வயல்வெளிகளில், ஓஎன்ஜிசி நிறுவனம் அமைத்துள்ள எண்ணெய் குழாயில் ஏற்பட்ட கசிவு, அந்தப் பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தையும், பீதியையும் கிளப்பியுள்ளது. ஓஎன்ஜிசிக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களைக் காவல் துறையினர் தடியடி செய்து கலைத்து, கிராமத்தையே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.

கதிராமங்கலத்துக்குள் வெளி ஆட்கள் யாரும் செல்ல முடியாதவாறு ஆங்காங்கே காவல் துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். ஆண்கள், பெண்கள் என 13 பேரைக் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். கைதானவர்கள் சிறைக்குள் உண்ணாவிரதத்தில் இருக்கிறார்கள். பெரும் அச்சத்தில் கதிகலங்கி இருக்கிறார்கள் கதிராமங்கலம் மக்கள். 

கதிராமங்கலம்

போராட்டத்தில் நடந்த தடியடியால் காலில் முறிவு ஏற்பட்டு நடக்க முடியாமல் இருந்த குணசுந்தரி, ''எண்ணெய் குழாயில் கசிவு ஏற்பட்டிருக்குன்னு தெரிஞ்சதும் நாங்கள் எல்லாம் ஒண்ணுசேர்ந்து அங்கே போய் அமைதியான முறையில் போராடிட்டிருந்தோம். சாப்பிடக் கூட வீட்டுக்குப் போகலை. அதிகாரிகள் வந்து சமாதானம் பேசினாங்க. கலெக்டர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினால் போராட்டத்தைக் கைவிடுறோம் என்றுதான் சொன்னோம். ஆனால், அதுக்கு எந்தப் பதிலும் சொல்லலை. நேரம் போக போக எங்களை அந்த இடத்தைவிட்டு கிளப்புறதுக்கான எல்லா முயற்சிகளையும் செய்ய ஆரம்பிச்சாங்க. சப் கலெக்டர், தாசில்தார் எல்லாம் இந்த எண்ணெய் குழாயால் எந்தப் பாதிப்பும் இருக்காதுன்னு சொல்லியிருந்தாங்க. அவங்க சொல்லிட்டுபோய் பத்து நாள்கூட ஆகலை. இப்பவே குழாய் உடைஞ்சு எண்ணெய் எங்கள் நிலங்களில் வருது. எல்லாம் போச்சு... இனிமே எங்கள் நிலத்தில் விவசாயம் செய்ய முடியாது. எங்களின் வாழ்வாதாரமே இதுதான். இதை விட்டுட்டு நாங்கள் எங்கே போறது சொல்லுங்க. நாங்கள் போராடறது எங்களுக்காக மட்டுமில்லே, இங்கே இருக்கிற போலீஸ்காரர்களுக்கும் சேர்த்துதான். எங்களை அடிக்க இவங்களுக்கு என்ன உரிமை இருக்கு? நாங்கள் என்ன தப்பு செஞ்சோம்? 

குணசுந்தரி

ஊர்ல கேபிள் கட் பண்ணிட்டாங்க, குடிக்கத் தண்ணீர் கிடைக்கலை. போலீஸ்காரங்க மப்டியில் ஊர்முழுக்க சுத்திட்டே இருக்காங்க. இயற்கை உபாதைகள் கழிக்கவே போக முடியலை. எங்கே போனாலும் ஏன் இந்தப் பக்கம் போறீங்க, ஏன் அந்தப் பக்கம் போறீங்கனு கேட்டு விரட்டுறாங்க. ஆரம்பத்தில் எங்ககிட்டே நல்லாப் பேசிட்டிருந்தவங்கதான், போங்கடி வாங்கடின்னு பேச ஆரம்பிச்சுட்டாங்க. இங்கே என்னடி உங்களுக்கு வேலைன்னு சொல்லி அடிச்சாங்க. பச்சைக் குழந்தையோடு இருந்த பொம்பளைங்களைக் கூட பிடிச்சு கீழே தள்ளி அடிக்கறாங்க. கண்டபடி திட்டறாங்க. அவங்க பேசினதையெல்லாம் வாய் திறந்து சொல்லவே கூசுதுங்க. கலெக்டர் வந்து ஆய்வுசெஞ்சு நல்ல முடிவைச் சொன்னா கலைஞ்சுடறோம்னுதானே சொன்னோம். சிகப்பு கலர் விளக்கு வெச்ச கார் வந்துச்சு. கலெக்டர்தான் வந்துட்டாருன்னு நினைச்சோம். அது, எஸ்.பி. கார். அவர் வந்ததும் எங்களை ஓட ஓட விரட்டி அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. நான் பயந்து ஓடினப்போ இடறி விழுந்துட்டேன். போட்டு அடி அடின்னு அடிச்சதில் கால் முறிஞ்சுபோச்சுங்க'' எனக் கதறி அழுதார். 

பழனியம்மாள்

கதிராமங்கல போராட்டத்தில் கைது செய்யப்பட்ட பழனியம்மாளைச் சந்தித்தோம். ''சார், குழாய் வெடிச்சிருந்தா எங்க கிராமமே தீ பிடிச்சு எரிஞ்சிருக்கும். அஞ்சு, ஆறு இடங்களில் எண்ணெய் குழாய் வெடிச்சு வெளியேறி இருக்கு. எங்கள் நிலங்கள் எல்லாம் பாழாய்போச்சு. நாத்தம் தாங்க முடியலை. அந்தப் பக்கம் போக முடியவில்லை. இதுவரை நாற்பது நாளாக போராடிட்டோம். ஆம்புளங்கள மட்டுமே கைது செஞ்சுட்டிருந்த போலீஸ், இப்போ பொம்பளைங்களையும் கைது செய்ய ஆரம்பிச்சுட்டாங்க. என்னைக் கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டி, முடியைப் பிடிச்சு இழுத்து ஜீப்பில் ஏத்தினாங்க. போலீஸ் வேனிலேயே நாலு மணி நேரமா இருந்தேன். ராத்திரி நேரம்னுகூட பார்க்காமல் எங்கெங்கேயோ கொண்டுபோனாங்க. 'எதுக்குடி உங்களுக்கெல்லாம் போராட்டம்? பொத்திக்கிட்டு போகவேண்டியதுதானே'னு கேவலமா பேசினாங்க. கடைசியில் ராத்திரி 11 மணிக்கு ஒரு இடத்துல இறக்கிவிட்டு 'போங்கடீ'னு சொன்னாங்க. நான் ஜெயிலுக்குப் போனாலும் பரவாயில்லை, என் மண்ணும், என் வருங்கால சந்ததியும் நல்லா இருக்கணும். அதுக்காகத் தொடர்ந்து போராடுவேன்'' என்றார் ஆவேசமாக. 

வெறிச்சோடிக் கிடக்கும் கதிராமங்கலம்

போராட்டங்கள் வெற்றிபெறலாம், போராடுபவர்கள் ஒடுக்கப்பட்டால் அது ஒரு சர்வாதிகாரம்..!

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close