Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காட்சிப்பொருளாகும் கடல்வாழ் உயிரினங்கள்... என்ன செய்யப் போகிறோம் நாம்?

கடல்.! உச்சரிக்கும் போதே சில்லிடும் உணர்வு வெளிப்படுவதைத் தவிர்க்க முடியாது. கரை மணலின் மீதமர்ந்து கடலை ரசிக்கும் நமக்கு கடலும், கடல் உயிரினங்களும் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தகவல் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.! கடந்த ஜூன் ஐந்தாம் தேதி ஃபிஜி தீவில் கூடிய ஐ.நா`வின் கடல் கலந்தாய்வுக் கூட்டத்தில் கடலைப் பாதுகாக்கும் விதமாக 645  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஐந்து நாள்கள் நடந்த கூட்டத்தில் கடல் மீதான மனிதனின் தாக்குதல்கள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. அதில் கடலில் கொட்டப்படும் பிளாஸ்டிக் குப்பைகளைப் பற்றியும், கடலில் கலக்கும் கழிவுநீரைப் பற்றியுமே அதிகமாக விவாதிக்கப்பட்டது.

பிளாஸ்டிக் குப்பைகள் :

கடலில் கொட்டப்படும் குப்பைகளில் 80% பிளாஸ்டிக் குப்பைகள்தான். 2050 ஆம் ஆண்டு, கடல் உயிரினங்களை விட கடலில் இருக்கும் பிளாஸ்டிக்குகளின் அளவு அதிகமாக இருக்கும் என்கிறது ஒரு ஆய்வு முடிவு. வருடத்திற்கு 8 மில்லியன் டன் பிளாஸ்டிக் குப்பைகள் கடலில் கொட்டப்படுகிறதாம். சாதாரண பிளாஸ்டிக் பாட்டில் மக்குவதற்கு சுமார் 450 வருடங்கள் ஆகும் என்ற நிலையில், தினமும் டன் கணக்குகளில் பிளாஸ்டிக் குப்பைகளைக் கடலில் கொட்டி அதனை மாசுபடுத்திக்கொண்டிருக்கிறோம். இதற்கு இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல, தினமும் 15ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகளைக் கடலில் கொட்டுகிறது இந்தியா. மும்பையில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் கடல் வழியாக மடகாஸ்கர் வரை பயணம் செய்து அங்கிருக்கும் கடற்கரைகளை மாசுபடுத்துவதாக அந்நாடு குற்றம் சாட்டுகிறது. 

கடல்

கடலில் மிதக்கும் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களைத் தனது உணவாக கருதும் சிறு மீன்கள் அதை சாப்பிடும். உள்ளே செல்லும் பிளாஸ்டிக் துகள்கள் செரிக்காமல் அதன் வயிற்றில் தங்கி விடுவதால் சில நாள்களில் அவை இறப்பை சந்திக்கின்றன. ஆமைகள் முதல் திமிங்கலங்கள் வரை இறந்து கரை ஒதுங்குவது பெரும்பாலும் இந்த பிளாஸ்டிக் குப்பைகளால்தான். வீட்டில் மீன்களைச் சமைப்பதற்காக வெட்டி சுத்தப்படுத்தும்போது அதன் வயிற்றுப் பகுதியில் பிளாஸ்டிக் துகள்கள் சேர்ந்திருப்பதை (கவனமாக பார்த்தால்…) நம்மால் காண முடியும். சில நேரங்களில் அதன் உடலில் சிறு கட்டி போன்று இருக்கும். அது, பிளாஸ்டிக் கழிவுகளால் மீன்களுக்கு ஏற்படும் கேன்சர் கட்டிகள்.! இப்படி பிளாஸ்டிக் கழிவுகள் மூலமாக கடல் உயிரினங்களை நாம் வதைத்துக்கொண்டிருக்கிறோம்.!

கழிவு நீர் கடலில் கலத்தல் :

நேரடியாக கடலில் கலக்கும் கழிவுநீர் அதனுடன் கொண்டு வரும் நச்சுப் பொருள்களை நீரில் கலந்துவிடும். கழிவு நீரில் இருக்கும் நச்சுப் பொருள்களை கண்டாலே ஒரு செல் உயிரிகளான ‘பிளாங்க்டன்’ போன்ற உயிரிகளுக்குக் கொண்டாட்டம்தான். ‘டைனோ பிளாஜிலேட்’ என்ற பிளாங்க்டன், இந்த நச்சுக் கழிவுகளை அதிகமாக சாப்பிட்டு, அதன் உடல் முழுதும் விஷம் சேர்ந்திருக்கும். இந்த ஒரு செல் உயிரியை உண்டு  உயிர்வாழும் சிறு மீன்கள் விஷம் இருப்பது தெரியாமல் அதனை சாப்பிட்டுவிடும். விஷமேறிய அந்தச் சிறிய மீன்களைச் சாப்பிடும் பெரிய மீன்கள், சில நேரங்களில் விஷத்தின் வீரியத்தால் இறந்தாலும் பல சமயங்களில் நாம் சாப்பிடும் மீன்களாக சந்தைக்கு வந்துவிடும். வழக்கமாக சாப்பிடும் மீன், திடீரென நமக்கு புட் பாய்சனை ஏற்படுத்துவதற்கு இதுதான் காரணம்.

இந்தியாவில் கழிவு நீர் கலக்கும் இடங்கள்:

மும்பை, கொச்சின் போன்ற பெருநகரங்களில் கடலில் நேரடி கழிவு நீர் கலப்பதால், கரையில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் வரை கடல் கறுப்பாக காட்சியளிக்கும். அங்கு எந்த உயிரினமும் வாழ முடியாது. ஆல்காக்களில் வளர்ச்சி அங்கு அதிகமாக இருக்கும். அதாவது பாசிகள். உள்ளூர் குளங்களில் கழிவுநீர் கலந்தால் குளமே பச்சையாக மாறும் போது கடல் மட்டும் விதிவிலக்கா என்ன. இந்த ஆல்காக்கள் பவளப்பாறைகளின் மீது வளர்ந்து அதன் வளர்ச்சியைத் தடைசெய்யும். இதனால் பவளப்பாறைகளில் தங்கி இனப்பெருக்கம் செய்யும் சிறு சிறு மீன்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, அதன் தொடர்சியாக பெரிய மீன்கள் உணவின்றி இறக்கும் நிலைக்குச் செல்கிறது. இதனால் கடல் உணவுச்சங்கிலியே உடைந்துபோகிறது.! கடல் மீன்களின் வரத்து குறைவால் மீன்பிடித் தடைக்காலம் 45 லிருந்து 60 நாள்களாக அதிகரித்தபோதும் மீன்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்பதே கள நிலவரம். இதற்கு, கடலில் கலக்கும் கழிவு நீரின் நச்சுப் பொருள்கள், மீன்களின் இனப்பெருக்க திறனை அழித்து விடுவதே காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.!

கடல் வாழ்வாதரத்தைத் தாண்டி என்று வணிகமயமானதோ அன்றே தன் இயல்பை இழக்க ஆரம்பித்துவிட்டது. உலகில் 57 மில்லியன் மக்கள் கடலை மட்டுமே நம்பியிருக்கிறார்கள். கடந்த 2010ம் ஆண்டு 1.5 ட்ரில்லியன் டாலராக இருந்த கடல் பொருளாதாரம், 2030ஆம் ஆண்டு 3.2 ட்ரில்லியன் டாலராக இரட்டிப்படையும் என்கிறனர் பொருளாதார நிபுணர்கள். இப்படிக் கடலில் கிடைப்பதையெல்லாம் அள்ளி காசு பார்க்கும் பெரும் வணிக நிறுவனங்களால் கடல் வளம் குறைந்துவிட்டதாக அச்சம் தெரிவிக்கிறது ஐ.நா சபை. கடந்த 45 வருடங்களில் கடல் உயிரினங்களின் 49% காணாமல் போய்விட்டதாகவும் ஐநா வின் ஆய்வு ஒன்று நம்மை அச்சுறுத்துகிறது.

கடல்

உலக நகரமயமாக்கலால் சேரும் கழிவுநீரையும் குப்பைகளையும் கொட்டும் குப்பை தொட்டியாக கடலை பயன்படுத்துவதை உலக நாடுகள் தவிர்க்க வேண்டும். வாரம் ஒரு முறை சுற்றுச்சூழல் பற்றி விவாதிக்கும் உலக நாடுகளுக்கு, காலம் கடந்துவிட்ட செய்தி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. `இது பேசுவதற்கான நேரம் இல்லை.!` எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் ஆய்வாளர்களும் எழுப்பும் சத்தம் மாநாட்டுக் கூச்சலில் கரைந்து கொண்டிருக்கிறது. இதற்கான தீர்வை காலத்தின் கையில் கொடுக்காமல் தனி மனிதன் ஒவ்வொருவரும் கடலைக் கண்கொண்டு பார்க்காவிடில் கடல் உயிரினங்கள் அனைத்தும் காட்சிப் பொருளாவதை யாராலும் தடுக்க முடியாது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close