Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சேலத்தில் டாஸ்மாக் கடையை மூடக் கோரி கிணற்றுக்குள் இறங்கி பெண் போராட்டம்!

சேலத்தில் அரசு மதுக்கடையை மூடக் கோரி ஒரு பெண் கிணற்றுக்குள் இறங்கி போராடியதால்  அந்த பகுதியே கலேபரமாக காட்சி அளித்தது. இதையடுத்து விரைவில் அந்த டாஸ்மாக் கடையை அதிகாரிகள் மூடி விடுவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்கள்.

கிணற்றில் இறக்கி போராடும் சகுந்தலா.

ரயில்வே டிரேக்கில் அமர்ந்து போராடும் பெண்கள்.


சேலம் மாவட்டம் கருப்பூரை அடுத்த வெள்ளாளப்பட்டில் ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. இந்த டாஸ்மாக் மதுக்கடை  உச்சநீதிமன்ற உத்தரவை மீறி  செயல்பட்டு வந்ததால் கடந்த வாரம்  மூடப்பட்டது.  கடையை வேறு இடத்தில் வைப்பதற்கு டாஸ்மாக் அதிகாரிகள் இடம் பார்த்து வந்தார்கள். இந்நிலையில் அந்த கடையில் வேலைப்பார்த்து வந்த ஊழியர் செந்தில் குமார், தன்னுடைய சொந்த ஊரான கொல்லப்பட்டி பொரசமரத்துக்காட்டில் தன்னுடைய விளைநிலத்தில் இடம் கொடுத்தார். அதையடுத்து அங்கு தற்காலிக கட்டடம் கட்டி இரண்டு நாள்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளாளப்பட்டி மற்றும் அதைச்  சுற்றியுள்ள பொதுமக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள்  மதுக்கடையை முற்றுகையிட்டார்கள். இதில் பெரும்பாலும் பெண்களே இருந்தார்கள்.

''இந்த மதுக்கடையால் பெண்களுக்கு பேராபத்து ஏற்படும் உடனே மதுக்கடையை மூடு'' என கோஷங்கள் போட்டவாறு சில பெண்கள்  கற்களை எடுத்து மதுக்கடைகள் மீது வீசினார்கள். உடனே மதுக்கடை மூடப்பட்டு  அப்பகுதியில் காவல்துறை குவிக்கப்பட்டது. பிறகு முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களோடு டாஸ்மாக் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார்கள்.
அப்போது போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்த சண்முகவேல் என்ற கூலி தொழிலாளியின் மனைவி சகுந்தலா அருகில் இருந்த கிணற்றுக்குள் இறங்கி, 'டாஸ்மாக் கடையை உடனே மூட வேண்டும். இல்லை என்றால் கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்து இறந்து விடுவேன்'  என்று கூறி கிணற்றுக்குள் நின்றிருந்தார். இதனால் அப்பகுதியே  பெரும் கலேபரமாக காட்சியளித்தது. கிணற்றைச் சுற்றி பொதுமக்கள் கூட்டம் கூடினர். போலீஸார் சகுந்தலாவை வெகுநேரமாக சமாதானம் செய்தும் மேலே வரவில்லை.

இதற்கிடையில் போராடியவர்களை உடனே கலைந்து  செல்லும்படி போலீஸார் விரட்டியதை அடுத்து சில பெண்கள் ரயில்வே டிரேக்கில் அமர்ந்து கொண்டு ரயில் வந்தால் மறியல் போராட்டம் செய்யவும் முடிவெடுத்தார்கள்.  அவர்களிடம் ஓமலூர் தாசில்தார் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள், போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி 10 நாள்களுக்குள் கடையை காலி செய்வதாக உறுதி மொழி கொடுத்ததை அடுத்து கிணற்றில் இருந்து சகுந்தலாவும், ரயில் டிரேக்கில் அமர்ந்திருந்த பொதுமக்கள் கலைந்து சென்றார்கள்.

கிணற்றை விட்டு மேலே வந்த சகுந்தலாவிடம் பேசிய போது, ''மதுவால் என் குடும்பம் பெரும் அளவுக்கு பாதிக்கப்பட்டது. மது எங்கள்  ஊரில் மட்டும் அல்ல, இந்த நாட்டியேலே இருக்கக் கூடாது என்ற கருத்தை சொல்லுவதற்காகத்தான் கிணற்றில் இறங்கி போராடினேன். எனக்கு நீச்சல் தெரியாது. இருந்தாலும் என் உயிரை கொடுத்தாவது மதுவை தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இறங்கினேன்'' என்றார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close