Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கதிராமங்கலம் கிராம மக்களைச் சந்திக்கச் சென்ற எஸ்.டி.பி.ஐ. மாநிலத் தலைவர் உள்பட 100 பேர் கைது..!

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை அடுத்துள்ள கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தினால் விளைநிலங்களில் புதைத்து வைக்கப்பட்டுள்ள குழாயிலிருந்து எண்ணெய்க் கசிவு ஏற்பட்டதால்,  அங்கு  கலவரம் வெடித்தது. அந்தப் பகுதியைப் பார்வையிடவும் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கவும் சென்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் உள்ளிட்ட 100 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 

இன்று, திருச்சி வந்திருந்த எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் தெக்லான் பாகவி, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், 'சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ள ஜிஎஸ்டி வரியினால், உணவுப் பொருள்களின் விலை 20 சதவிகிதம் உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டி-யினால், தமிழக மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்பதாலேயே, இதை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடுமையாக எதிர்த்தார்.

கடந்த காங்கிரஸ் காலத்தில் அமல்படுத்த இருந்த ஜிஎஸ்டி-யை எதிர்த்த பா.ஜ.க, தற்போது அமல்படுத்தி இருப்பதைச் சாதனையாகத் தெரிவிக்கிறது. இது, பா.ஜ.க மற்றும் நரேந்திர மோடியின் இரட்டை வேடத்தை நாட்டு மக்களிடம் அம்பலப்படுத்தியுள்ளது. தகுந்த முன்னேற்பாடுகளை வியாபாரிகள் மேற்கொள்ளும் முன்னரே, ஜிஎஸ்டி-யை அமல்படுத்தியுள்ளதால், வியாபாரிகள் மிகுந்த பிரச்னைகளைச் சந்திப்பார்கள். இதற்கான தீர்வை மத்திய, மாநில அரசுகள் வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் வழங்கிட வேண்டும்.

மாட்டிறைச்சி விவகாரத்துக்குப் பிறகு, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் முஸ்லிம்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுவருகின்றனர். பா.ஜ.க ஆளும் மாநிலங்களில்,  இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு இல்லாததால், இஸ்லாமியர்கள் ஆயுதம் வைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இத்தகைய தாக்குதல்கள் நடைபெறவில்லை. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி சட்டசபையில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், இதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

 எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடும் இந்தச் சமயத்தில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில்வாடும் ஆயுள் தண்டனைக் கைதிகளைக் கருணை அடிப்படையில் விடுதலைசெய்ய வேண்டும்.

அ.தி.மு.க.வுக்கு நெருக்கடி கொடுத்து, அ.தி.மு.க-வை 3 ஆகப் பிரித்துத் துண்டாக்கிவிட்டு, அ.தி.மு.க-விடம் ஆதரவு கேட்கும் பா.ஜ.க வேட்பாளருக்கு, குடியரசுத் தலைவர் தேர்தலில் அ.தி.மு.க. எம்பி., எம்எல்ஏ-க்கள் ஆதரவு தெரிவிக்ககூடாது. இதைத் தமிழக மக்களும் அ.தி.மு.க. தொண்டர்களும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

கடந்த ஆட்சியில், ஜிஎஸ்டி-யைக் கொண்டுவருவதற்கு முனைந்த காங்கிரஸ், தற்போது பா.ஜ.க கொண்டுவந்த ஜிஎஸ்டி-க்கு ஆதரவு அளிப்பது என்பது ஆச்சர்யமில்லை.  பா.ஜ.க-வின் சுயரூபத்தை அரசியல் கட்சிகள் தெரிந்துகொள்ள வேண்டும். அ.தி.மு.க., தி.மு.க-வை அழிக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளது. பா.ஜ.க-வின் சதிக்கு அ.தி.மு.க. பழியாகிவிடக்கூடாது என்றும் தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்புக்குப் பிறகு, தெக்லான் பாகவி கதிராமங்கலத்தில் காவல்துறையினரின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளைச் சந்திக்கச் சென்றார். அப்போது, கதிராமங்கலம் கிராமத்துக்குள் செல்ல காவல்துறை அனுமதி மறுத்தது. காவல்துறையின் நடவடிக்கையை மீறிச் செல்ல முயன்றபோது, கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி, அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளர் அப்துல் சத்தார், எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்கத்தின் மாநிலத் தலைவர் தஞ்சை முகமது ஃபாரூக், தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் அப்துல் காதர், பொதுச் செயலாளர் அன்சாரி, திருச்சி மாவட்ட தலைவர் அமீர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close