Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“பசு பாதுகாப்பு என்ற பெயரில் மக்களைப் பிளவுபடுத்த முயற்சி” - ஜனநாயக வாலிபர் சங்கம்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் முகமது ரியாஸ்

திருப்பூரில் மதநல்லிணக்க மக்கள் ஒற்றுமைக் கருத்தரங்கு நேற்று (ஜூலை 2) நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் முகமது ரியாஸ் பின்னர்செய்தியாளர்களைச் சந்தித்தார்.

"மத்தியில் ஆட்சிக்கு வந்தால் வருடத்துக்கு இரண்டு கோடி மக்களுக்கு வேலை வழங்கப்படும் என்று நாடாளுமன்றத் தேர்தல்நேரத்தில் வாக்குறுதிகளை அள்ளித்தெளித்த மோடி, பிரதமராகப் பதவியேற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் நிலையில், மத்திய அரசு சுமார் 2 லட்சத்து 18 ஆயிரம் பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்தியாவில், இளைஞர்களின் மிகப்பெரும் பிரச்னையாக வேலையில்லா திண்டாட்டம் உருவெடுத்துள்ளது.

விவசாயத்துறையில் நெருக்கடி நிலைமை அதிகரித்திருக்கிறது. மோடி அரசின் மூன்றாண்டுகால ஆட்சியில் விவசாயிகளின் தற்கொலைச் சம்பவங்கள் பலமடங்கு அதிகரித்துள்ளன. 'கறுப்புப் பணத்தை ஒழிக்கிறோம்' என்ற பெயரில் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்துவிட்டு, பி.ஜே.பி. தலைவர்கள் சிலரே பணத்தைப் பதுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனர். கறுப்புப் பணத்தையும் ஒழிக்காமல், ஊழலையும் ஒழிக்காமல், ஏன்.... மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளுக்கு சிறிதளவு கூடத் தீர்வுகாண முடியாமல் தோல்வியடைந்துள்ள மத்திய பி.ஜே.பி அரசு, மக்கள் எதிர்த்துக் கேள்வி கேட்டுவிடக்கூடாது என்பதற்காக, இந்த நாட்டில் 'பசு பாதுகாப்பு' என்ற பெயரில் வன்முறை வெறியாட்டங்களைத் தொடர்ந்து அரங்கேற்றி வருகிறது. நாட்டில் நிலவும் முக்கியப் பிரச்னைகளைப்பற்றி நாம் பேசாமல் இருக்கவும், மக்களின் கவனத்தை திசை திருப்பவும், பல மொழி, இனம், கலாசாரம் என வேற்றுமையில் ஒற்றுமை காணும் நம் மக்களுக்கிடையே பிளவை உண்டாக்குவதற்காகவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, பசு பாதுகாப்பு என்ற பெயரில் போலியான பசு பயங்கரவாதிகளை உருவாக்கியிருக்கிறது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்

வட இந்தியாவில் அதிகமாக நடைபெறும் இந்தப் பயங்கரவாத வன்முறை வெறியாட்டங்களைத் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென் இந்தியப் பகுதிகளிலும் நிகழ்த்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தொடர்ந்து முயன்று வருகிறது. சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டம் பழனியிலும், திருச்சியிலும் 'பசு பாதுகாவலர்கள்' என்ற பெயரில் சிலர் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட முயற்சித்தார்கள். மோடி ஆட்சிக்கு வந்தபிறகு மதரீதியான பிரச்னைகளில் 183 பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இதுபோன்ற மதரீதியான தாக்குதல்களில் கடந்த ஆண்டில் மட்டும் 4,585 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மக்களைப் பிளவுபடுத்த வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ்ஸின் தெளிவான திட்டமே தலித் மற்றும் முஸ்லிம்கள் மீது தொடர்ச்சியாக நடைபெறும் தாக்குதல்களுக்குக் காரணமாக இருக்கிறது. பல மாநிலங்களில் ஆட்சியில் உள்ள பி.ஜே.பி அரசு, இதுபோன்ற  பசு பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்து ஊக்கம் அளிப்பதோடு நிதியுதவியும் செய்துவருகிறது. இதைப் பயன்படுத்தி பன்னாட்டு மாட்டிறைச்சி நிறுவனங்கள், இந்தியச் சந்தைக்குள் புகுந்து கபளீகரம் செய்து பலமடங்கு லாபம் ஈட்டவும் தயாராக இருக்கின்றன.

'பசு பாதுகாப்பு' என்றபெயரில் வன்முறை மற்றும் கொலைச்சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தனிச்சட்டம் இயற்ற வேண்டும். இந்நாட்டில் உள்ள வெறும் 10 சதவிகித மதவாதிகளை எதிர்த்து, நம் உரிமையை நிலைநாட்ட 90 சதவிகித மதச்சார்பற்ற மக்கள் போராட வேண்டும்" என்றார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close