Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'பேரறிவாளனைப் பற்றி டெல்லிக்கு என்ன தெரியும்?!' - தகிக்கும் முன்னாள் டி.ஜி.பி தியாகராஜன்

தமிழக சிறைகளில் ஆயுள் கைதிகள் அனுபவிக்கும் துன்பங்கள் குறித்து, கடந்த ஜூலை 1-ம் தேதி சென்னை, கவிக்கோ மன்றத்தில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. 'எந்த ஒரு தண்டனைக்கும் கால நிர்ணயம் இருத்தல் வேண்டும். காலவரையற்ற தண்டனைக்கு மரண தண்டனை எவ்வளவோ மேல். சிறைக்குள் அடைக்கப்பட்ட ஒருவர், இறந்த பின்னர்தான் வெளியே வர வேண்டும் என்ற நடைமுறை மனித மாண்புக்கு எதிரானது' எனக் கவலைப்படுகிறார்கள் நிகழ்ச்சியில் பங்கேற்ற நீதியரசர்கள். 

கவிக்கோ அரங்கில் ஆயுள் சிறையாளர்களுக்கான கருத்தரங்கில்

தமிழ்நாடு வாழ்நாள் சிறையாளர் கூட்டமைப்பு என்ற அமைப்பின் சார்பில், சிறைக் கொடுமைகள் குறித்து விவாதிக்க சட்ட நிபுணர்கள் கூடியிருந்தனர். கூட்டத்தில் பேசிய தியாகு, "ஓர் ஆயுள் தண்டனைக் கைதி விடுதலைக்கு எந்தவித முகாந்திரத்தையும் அரசு காட்டவில்லை என்றால், அவர் சார்பில் தாக்கல் செய்யப்படும் கருணை மனு உயிர்ப் பிச்சையாகப் பார்க்கப்படுகிறது. இதை ஒரு சட்ட நடைமுறையாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. இந்தப் பார்வை மாற வேண்டும். மரண தண்டனையை ஏன் எதிர்க்கிறோம்? ஏன் என்றால் அது ஒரு தண்டனையே இல்லை என்பதால் எதிர்க்கிறோம். ஒரு வகையில் சிறைச்சாலை என்பது நாகரிகத்தின் அடையாளம். மன்னர் காலத்தில் தவறிழைத்தால் கத்தி முனையில் தண்டனைகள் எதேச்சதிகார போக்கில் வழங்கப்பட்டன. ஆனால், சட்டங்கள் வந்த பின்னர்தான், தவறிழைத்தவர்களுக்கும் நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. எல்லா நாட்டிலும் சிறைகள் இருக்கின்றன. சோசலிச நாடுகளும் அதற்கு விதிவிலக்கல்ல. சிறைகள் என்பது சட்டங்களால் கட்டப்பட்டவை. கற்களால் அல்ல. சிறையில் அதிக நாள்கள் ஒருவர் வைக்கப்படுவதால் தண்டனையின் நோக்கம் சீர்குலையும். 1948-ம் ஆண்டு காந்தியின் கொலைக் குற்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்ட பின்னர், கோபால் கோட்சே சிறையில் அடைக்கப்பட்டார். 16 ஆண்டுகள் கழித்து விடுதலையான பின் அவரிடம் எடுக்கப்பட்ட முதல் பேட்டியில், `காந்தியைக் கொன்றதில் எனக்கு எந்தவித வருத்தமும் இல்லை’ என்று கூறினார். காலவரையற்ற தண்டனை என்பது அதன் நோக்கத்தை சிதைத்துவிடுகிறது என்பதற்கு சிறந்த உதாரணம் இது. விடுதலைக்கான தேதி இல்லாமல் போகும் ஆயுள் தண்டனை மரண தண்டனையைவிடக் கொடுமையானது. அதற்காகத் தண்டனைகள் கூடாதென்று சொல்ல வரவில்லை. மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும். ஆயுள் தண்டனையின் கால வரம்பு குறைக்கப்பட வேண்டும் என்றுதான் வலியுறுத்துகிறோம். ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஏழு பேரும், 25 ஆண்டுகள் கழித்தும் விடுதலை செய்யப்படாதது தலையை வெட்டுவது போன்ற நாகரிகமற்ற தண்டனைதான்" என்றார் வேதனையுடன். 

டிஜிபி தியாகராஜன்

இதையடுத்துப் பேசிய சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் அரி பரந்தாமன், "1860-ம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டத்தை இயற்றினார் மெக்காலே. காலனி ஆதிக்கத்தில் இந்தியா இருந்தபோது, இங்கிலாந்து இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது. மெக்காலே இங்கிலாந்தின் குடிமகன். அப்படிப் பார்த்தால் இங்கிலாந்துதான் நமக்கு சட்டங்களைத் தந்தது. ஆனால், இங்கிலாந்தில் இன்று மரண தண்டனையே கிடையாது. சிறைக் கைதிகளுக்கு வழங்கப்படும் தண்டனையின் கால அவகாசத்தைக் குறைப்பதே நம் நோக்கமாக இருக்க வேண்டும். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏழு பேரை விடுதலை செய்ய அரசுக்கு அதிகாரம் உண்டு. ஆனால், அதற்குப் போதுமான அழுத்தத்தை இதுவரை நாம் அரசுக்குக் கொடுக்கவில்லை. அரசுக்கு அழுத்தம் கொடுத்து ஏழு பேர் விடுதலையைக் கோருவதே நம் எண்ண ஓட்டமாக இருக்க வேண்டும்" என்றார் உறுதியாக.

இறுதியாகப் பேசிய, முன்னாள் சிறைத்துறை டி.ஜி.பி தியாகராஜன், " பேரறிவாளன் தண்டனை பெற்றதிலிருந்து இப்போதுதான் முதல்முறையாக பரோல் கேட்டிருக்கிறார். ஆனால், அவருக்கு இதுவரை எந்த ஒரு பதிலையும் இந்த அரசு சொல்லவில்லை. பேரறிவாளனுக்கு இழைக்கப்படுவது ஒரு மாபெரும் அநீதி. தன் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு கைதிக்கு பரோல் கொடுக்க முடியவில்லை என்றால், எதற்காக சிறைத்துறை அதிகாரியாகப் பதவி வகிக்க வேண்டும்? கண்டிப்பாக ஒரு தண்டனைக்கு கால நிர்ணயம் இருத்தல் வேண்டும். காலவரையற்ற தண்டனைக்கு மரண தண்டனை எவ்வளவோ மேல். ஒருவரை சிறைக்குள் அடைத்துவிட்டு அவர் இறந்த பின்னர்தான் வெளியே வர வேண்டும் என்ற நடைமுறை மனித மாண்புக்கு எதிரானது. பேரறிவாளன் உள்பட ஏழு பேர், 25 ஆண்டுகளாக தமிழக சிறையில் அடைபட்டிருக்கிறார்கள். அவர்களைப் பற்றி தமிழக சிறைத்துறை அதிகாரிகளுக்கும் தமிழக அரசுக்கும்தான் தெரியும். டெல்லிக்கு எப்படி அவர்களின் நடத்தையைப் பற்றி தெரியும். 25 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்களுக்கு பரோல் கொடுக்காமல் வைத்திருப்பது அநீதியின் உச்சம். இப்படி நான்கு சுவருக்குள்ளேயே ஒருவரை வைத்திருப்பது என்ன மாதிரியான சட்டம்?" என்றார் கொதிப்புடன். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close