Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

"இடிந்தகரையில் நடந்ததை, கதிராமங்கலத்திலும் நடத்தப் பார்க்கிறார்கள்" - சீறும் எதிர்க்கட்சிகள்!

சில வருடங்களுக்கு முன்பு இடிந்தகரை மக்களின் மீது, சில மாதங்கள் முன்பு சென்னை நடுக்குப்பம் மீனவர்கள் மீது, சில நாள்களுக்கு முன்பு மதுக்கடைகளுக்கு எதிராகப் போராடிய பெண்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அதே வன்முறையை தற்போது கதிராமங்கலத்திலும் நடத்தி நாட்டின் ஜனநாயகத்துக்கு 'சல்யூட்' வைத்திருக்கிறது தமிழக காவல்துறை. பொதுமக்கள், அரசுக்கும் ஓ.என்.ஜி.சி.,க்கும் எதிராக சிறுகுரல் கூட எழுப்பிவிடக்கூடாது எனக் கதிராமங்கலத்தைச் சிறைச்சாலை போல முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது காவல்துறை. இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் 'பூவுலகின் நண்பர்கள்' சார்பில் எதிர்க்கட்சிகள் கலந்துகொள்ளும் கண்டனக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்கள் எதிர்ப்புக்குரல்களைப் பதிவு செய்தனர். 

கதிராமங்கலம் கடையடைப்பு

வேல்முருகன் ( தமிழக வாழ்வுரிமை கட்சி):

"கதிராமங்கலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். மக்களுடைய நியாயமான, ஜனநாயக ரீதியிலான எதிர்ப்பை மத்திய, மாநில அரசுகள் மதித்து பதிலளிக்க வேண்டும். மக்களுடைய எதிர்ப்பை மீறியும் காவிரிப் படுகையில் மீத்தேன் மற்றும் ஹைட்ரோகார்பன் உள்ளிட்டவற்றை எடுக்கும் முயற்சியில் ஈடுபடும் அரசின் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம். டெல்டா மாவட்டம் முழுவதையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். தமிழக முதல்வர் இந்த அடக்குமுறைகளை ஆதரித்து வருகிறார். அரசியல் கட்சிகளின் சார்பில், யார் மக்களுக்கு ஆறுதல் சொல்ல சென்றாலும், அவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். இவற்றையெல்லாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். அரசு, உடனே மக்களின் கருத்துகளுக்கு செவிசாய்க்க வேண்டும். கதிராமங்கலத்தில் குவிக்கப்பட்டிருக்கும் காவல்துறையினர் அனைவரையும் வெளியேற்ற வேண்டும். இந்தக் கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றவில்லை எனில், தமிழக அரசு மிகப்பெரிய மக்கள் போராட்டங்களை சந்திக்க நேரிடும்"

ஜவாஹிருல்லா ( மனிதநேய மக்கள் கட்சி):

'காவிரிப் படுகை பகுதியில் அரசு மீத்தேன் எடுக்காது' என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். ஆனால், தற்போது மீத்தேன் மட்டுமின்றி, ஹைட்ரோகார்பன் எடுக்கும் பணியும் நடந்துவருகிறது. இதுமட்டுமின்றி கதிராமங்கலம் கிராமத்தில் எரிவாயு எடுக்கும் பணிகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன. மக்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக போராடுகிற சூழலில், அவர்களை பயங்கரவாதிகள் போலவும், தீவிரவாதிகள் போலவும் கருதி அங்கே காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசும், மாநில அரசும், மக்கள் நலனுக்காக இருக்கிறதா அல்லது ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக இருக்கிறதா எனப் பார்த்தால் இரு அரசுகளும் கார்ப்பரேட்களுக்காகத்தான் செயல்படுகின்றன என்றுதான் கதிராமங்கலத்து நிகழ்வுகள் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. எனவே, உடனே தமிழக அரசு அங்கே இருக்கும் காவல்துறையினரை விலக்கிக் கொண்டு, அராஜகம் நடத்திய காவல் துறையினரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட போராட்டக்காரர்களை விடுவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்"

கதிராமங்கலம்

தெகலான் பாகவி (எஸ்.டி.பி.ஐ):

"மக்களுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவிப்பதற்காக நாங்கள் கதிராமங்கலத்துக்குச் சென்றிருந்தோம். ஆனால், அதற்கே நாங்கள் கைது செய்யப்பட்டோம். தற்போது அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. அந்த ஊர் மக்கள் ஊரை விட்டு வெளியே வரவும், மற்றவர்கள் ஊருக்குள் செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளனர். ஏன் அவர்களுக்கு இந்தத் தடை என நாங்கள் கேள்வி எழுப்புகிறோம். போராட்டம் நடந்த அன்று மாலை வரையிலும் மாவட்ட ஆட்சியரின் வருகைக்காக மக்கள் காத்திருக்கின்றனர். ஆனால், அவர் வரவில்லை. பின்பு காவல்துறையினரின் சதியினால் அங்கே தீ வைக்கப்படுகிறது. பிறகு மக்களை ஓட ஓட விரட்டுகின்றனர். இதற்கு பின்புதான் மாவட்ட ஆட்சியர் அங்கே வருகிறார். மக்களின் அச்சத்தை போக்குவதுதானே மாவட்ட ஆட்சியரின் வேலை? அதற்கு ஏன் அதிகாரிகள் அச்சப்படுகின்றனர்?"

மல்லை சத்யா (ம.தி.மு.க):

"சட்டங்களும் திட்டங்களும் மக்களுக்காகத்தான் கொண்டுவரவேண்டும். மகாத்மா காந்தி அவர்கள் தமிழகம் வருவதற்கு முன்பு வரை கோட்சூட்தான் அணிந்திருந்தார். ஆனால், தமிழகத்துக்கு வந்து, விவசாயிகளின் நிலையைப் பார்த்த பின்புதான் அவர் கோட் சூட்டை துறந்து அரை ஆடைக்கு மாறினார். இதுதான் நம் தேசத்தில் வரலாறாக இருக்கிறது. ஆனால், இன்றோ அகிம்சா வழிப் போராட்டங்களுக்கும், அறப்போராட்டங்களுக்கும் அவமரியாதை செய்யப்பட்டிருக்கிறது. எங்கள் கட்சியின் தோழர்கள் கதிராமங்கலத்துக்குச் சென்றபோது கைது செய்யப்பட்டனர். மற்ற கட்சியினருக்கும் இதுதான் நிலையாக இருக்கிறது. எனவே, தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளைப் பாதுகாக்கும் முயற்சிகளில் இருந்து தமிழக அரசு விலகி விட்டதைத்தான் இது காட்டுகிறது. எனவே, அரசு உடனே கதிராமங்கலத்தின் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என தமிழ்நாட்டில் மொத்தம் நான்கு திணைகள்தான் இருக்கின்றன. பாலை என்ற ஒன்று இங்கே இல்லை. வடநாட்டில்தான் பாலை இருக்கிறது. எனவே, இதுபோன்ற திட்டங்களைக் கொந்துவந்து தமிழ்நாட்டை பாலை ஆக்கும் முயற்சியில்தான் அரசாங்கம் இருக்கிறது. எனவே மீத்தேன், ஷேல் கேஸ் எடுக்கும் திட்டங்களை விரைந்து ரத்துசெய்ய வேண்டும்"

Kadhiramangalam police

சுப.உதயகுமார் (பச்சைத் தமிழகம்):

தமிழக வாழ்வாதாரங்களையும், வாழ்வுரிமைகளையும், எதிர்காலத்தையும் காப்பதற்காக சாதாரண ஏழை விவசாய மக்கள் போராடும் போது, அவர்களை முற்றுகையிட்டு, அவர்களை அடித்து நொறுக்கிய காவல் துறையினரின் அராஜகத்தை அனைவரும் வன்மையாகக் கண்டிக்கிறோம். இது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. ஐந்து வருடத்துக்கு முன்னர் இடிந்தகரையில் இதே போன்ற அராஜகத்தை நடத்தினார்கள். இது கதிராமங்கலம், நெடுவாசல், திட்டக்குடி என தொடரும் என்ற அச்சம் மக்களிடையே பரவியுள்ளது. இந்த அராஜகத்தை கைவிட்டு, மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பதுதான் அரசுகளின் அணுகுமுறையாக இருக்க வேண்டும். இந்த போராட்டத்தை முன்னின்று நடத்திய தோழர்களை உடனே விடுதலை செய்யவேண்டும். மேலும், அந்தப் பகுதியில் இருந்து ஓ.என்.ஜி.சி.யை உடனே அப்புறப்படுத்தப்பட வேண்டும். மக்களின் அனுமதியின்றி ஓ.என்.ஜி.சி மட்டுமல்ல; அந்த ஆண்டவனே வந்தாலும் கூட எந்த திட்டத்தையும் செயல்படுத்தக்கூடாது. உடனே அந்தப் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். 

வன்னி அரசு (வி.சி.க):

"தமிழ் மண்ணை பாழாக்கும் நடவடிக்கைகளில் ஓ.என்.ஜி.சி தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. கதிராமங்கலம் மக்கள் மீது வன்முறை நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனே அவர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என விடுதலைச் சிறுத்தை கட்சி கேட்டுக்கொள்கிறது. மேலும், கைது செய்தவர்களையும் உடனே விடுதலை செய்ய வேண்டும். மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக ஓ.என்.ஜி.சி.,யையும் அங்கிருந்து வெளியேற்ற வேண்டும்"

இதைத் தொடர்ந்து கதிராமங்கலத்தில் களத்தில் நின்று போராடும் பெண்களின் கருத்துகள் வீடியோவாக திரையிடப்பட்டது. அந்த வீடியோ பதிவில் பேசிய சாந்தி, “நாங்கள் தீயிட்டோம் என்பது அபாண்டமான பொய். எங்கள் வீட்டின் அருகே ஓ.என்.ஜி.சி குழாய்கள் இருக்கின்றன. நாங்கள் அந்த குழாய்களுக்கு தீ வைத்தால்... அந்த தீ எங்கள் வீட்டுக்கு பரவாதா... நாங்களே எங்கள் தலைகளில் தீ வைத்துக் கொள்வோமா...?  உண்மையில் நாங்கள் அமைதியாகப் போராடுவதை இந்த அரசாங்கம் விரும்பவில்லை... அதனால்தான், அபாண்டமான குற்றச்சாட்டுகளை கூறி எங்கள் மீது வன்முறையை ஏவி இருக்கிறது” என்றார்  கண்களைத் துடைத்தப்படி. போலீஸ் தாக்குதலுக்கு கடுமையாக உள்ளான குணசுந்தரி, “ ஆட்சியர் வந்து எங்களிடம் உரையாட வேண்டும். எங்களுக்கு அளித்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று  எளிமையான கோரிக்கைகளை வைத்துதானே அமைதியான முறையில் உண்ணாவிரதம் இருந்தோம்? அதற்கு ஏன் ஆயிரக்கணக்கில் போலீஸை அனுப்பி எங்கள் மீது வன்முறையை ஏவ வேண்டும்...? இன்று கதிராமங்கலத்துக்கு ஏற்பட்ட கதி... நாளை யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படும்” என்றார்.

 

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close