Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“கனவைத் தகர்க்கும் மருத்துவக் கலந்தாய்வு” வலுக்கும் எதிர்ப்பு... கரம் கோர்க்கும் இயக்கங்கள்! #NEET

நீட் தேர்வு

'மருத்துவர் ஆக வேண்டும்' என்ற கனவுகாணும் தமிழக மாணவர்களின் வாழ்க்கையை அதலபாதாளத்தில் தள்ளிவிட்டிருக்கிறது தேசிய அளவில் நடத்தப்பட்ட 'நீட்' தேர்வு முடிவுகள். நீட் தேர்வானது, முழுக்க முழுக்க தமிழக மாணவர்களை வஞ்சிப்பதற்காக கொண்டுவரப்பட்டதாகக் கூறி, மாநிலம் முழுவதும் கல்வியாளர்களும், பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் மத்திய அரசின் ஒருதலைப்பட்சமான போக்கு காரணமாக, பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி, திட்டமிட்டபடி நீட் தேர்வு நடத்தப்பட்டு, அதன் முடிவுகளும் வெளியாகியுள்ளன. தற்போது அடுத்தக்கட்டமாக, மருத்துவப்படிப்புகளுக்கான கலந்தாய்வு நடத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு மும்முரமாக ஈடுபட்டுள்ளது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என்று கோரி, தமிழக சட்டசபையில் சட்டம் இயற்றப்பட்டு, குடியரசுத் தலைவருக்கு ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்ள நிலையில், குடியரசுத்தலைவரிடம் இருந்து பதில் பெறப்படும்வரை, மருத்துவக் கலந்தாய்வை நடத்தக்கூடாது என 'பொதுப்பள்ளிக்கான மாநில மேடை' பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்தார். 

இதுதொடர்பாக, சென்னையில் இன்று (03-07-2017) நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், "நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலக் கனவை கேள்விக்குறியாக்கி விட்டது. தமிழக மாணவர்களின் நலனைப்பற்றி கொஞ்சம்கூட கவலைப்படமல் மத்திய அரசு எடுத்துள்ள இந்தமுடிவை வன்மையாகக் கண்டிப்பதோடு, நீட் தேர்வு முறையை ரத்துசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் வைக்கிறோம். தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வு கூடாது என்று வலியுறுத்தி, அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் இரண்டு சட்ட மசோதாக்கள் இயற்றப்பட்டன. அந்த மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால், இன்றுவரை குடியரசுத் தலைவர் மாளிகைக்கு தமிழக அரசின் சட்டமசோதாக்கள் சென்றுசேரவில்லை. தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கைதி குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினால், மனுவுக்கான பதில் வரும்வரை அந்தக் கைதிக்குத் தண்டனையை நிறைவேற்றக்கூடாது என்று இந்திய அரசியல் சட்டத்தில் உள்ளது. அதுபோல, தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி, குடியரசுத்தலைவருக்கு சட்டமசோதா அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், குடியரசுத் தலைவரிடம் இருந்து தமிழக அரசின் சட்டத்துக்கு எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வருவதற்கு முன்பே மருத்துவக் கல்விக்கான கலந்தாய்வு நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால், இந்திய அரசியல் சட்டம் எந்த அளவுக்கு சீர்கெட்டு இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

பிரின்ஸ் கஜேந்திரபாபு

மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, "நீட் தேர்வை ஒருபோதும் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம்" என்று சொன்னார். அதன்படி, சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. ஆனால், 'குடியரசுத் தலைவரின் முடிவு வராமல், மருத்துவக் கலந்தாய்வை நடத்தக்கூடாது' என்று தமிழக அரசு, மத்திய அரசுக்கு இதுவரை கோரிக்கை வைக்கவில்லை என்பது வருத்தமளிக்கக்கூடியது. அகில இந்திய மருத்துவக் கலந்தாய்வில், பொதுப்பட்டியலில் இடஒதுக்கீட்டுப் பிரிவில் வராதவர்களை மட்டும் இடம்பெறச் செய்வதற்கான சூழ்ச்சிதான் இது. இப்படிப்பட்ட குழப்பமான சூழ்நிலையில் மருத்துவப்படிப்பில் மாணவர் சேர்க்கை  நடைபெறுமானால் தகுதிப்பட்டியலில் பின்னுக்குத் தள்ளப்பட்ட இடஒதுக்கீட்டுப் பிரிவினர், இருப்பிடத்தகுதி (Domicile) அடிப்படையில் தமிழ்நாடு பட்டியலில் இடம் பெறுவர். இது, தமிழ்நாடு மருத்துவ மாணவர் பட்டியலை நிச்சயம் பாதிக்கும். 2016-ம் ஆண்டு ஐந்து நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு ஒரு உத்தரவை வெளியிட்டுள்ளது. அந்த உத்தரவின் 132 மற்றும் 133-வது பக்கங்களில், 'ஒரு மாநிலத்தில் கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்வி அமைப்பு சார்ந்த இக்கட்டான பிரச்னைகள் எழும்போது, அதற்கான தீர்வை அந்தந்த மாநிலங்கள்தான் எடுக்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் பொருந்தாது. அப்படி இருக்கையில், வேறுமொழியில், வேறு கல்வித்திட்டத்தில் நடந்த நீட் தேர்வை தமிழக மாணவர்களிடம் புகுத்துவதை தமிழக அரசு ஏன் கண்டுகொள்ளவில்லை?

இதற்கான விளக்கத்தை தமிழக அரசு, மத்திய அரசிடம் இருந்து கேட்டுப்பெறும் வரை, மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடைபெறக்கூடாது. இதற்காக வரும் வியாழக்கிழமை (06-07-2017) வள்ளுவர் கோட்டம் அருகே ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தமுடிவு செய்திருக்கிறோம். மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில்கொண்டு, இந்தப் போராட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்" என்று பிரின்ஸ் கஜேந்திர பாபு தெரிவித்தார்.

நீட் தேர்வுக்கான நம் எதிர்ப்பை அரசுக்கு தெரிவித்து, கிராமப்புற மாணவர்களின் கனவை தவிடுபொடியாக்கும் தகுதித்தேர்வை ரத்து செய்யப் போராடுவோம்.... மாணவர்களின் எதிர்காலம் சிதைந்து விடாமல் பாதுகாப்போம்!

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close