Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

"குண்டூசிகூட கிடைக்காத நிலையை உருவாக்குவோம்" - விக்ரமராஜா எச்சரிக்கை! #GST

 

                  விக்ரமராஜா

"ஜிஎஸ்டி வரிவிதிப்பு கார்ப்பரேட் கம்பெனிகளையும், கோடிகளில் புரளும் பெருவியாபாரிகளையும் பாதிக்காது. ஆனால், குடிசைத்தொழிலை அழித்து, சிறு, குறு வியாபாரிகளின் குடும்பங்களை நடுத்தெருவுக்குக் கொண்டுவந்து நிறுத்தும். விவசாயிகள் தற்கொலைகளைச் சந்திக்கும் நாடு, இனி வியாபாரிகளின் தற்கொலைகளையும் அடிக்கடிப் பார்க்கும். அதனால், நாங்கள் வைக்கும் கோரிக்கையை மத்திய அரசு, உடனே நடைமுறைப்படுத்தணும். நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடக்கும் இந்தியா முழுக்க உள்ள வர்த்தக சங்க நிர்வாகிகள் கூட்டத்தில், எங்க கோரிக்கைகளை அவரிடம் தெரிவிக்கப் போறோம். அதை மத்திய அரசின் பார்வைக்குக் கொண்டு போய், பரிசீலித்து நடைமுறைபடுத்தலேன்னா, இந்தியா முழுக்க உள்ள அனைத்து வியாபாரிகள் சங்கங்களும், அமைப்புகளும் ஒன்றிணைந்து மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுப்போம். ஒருசிறு குண்டூசியைக்கூட வாங்கமுடியாத நிலையை உருவாக்குவோம்" என்று அதிரடியாக பேசுகிறார் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்ரமராஜா.

கரூருக்கு வருகை தந்த விக்ரமராஜாவிடம் நாம் பேசியபோது, "ஒரு பக்கம் நாட்டின் முக்கிய தூணான விவசாயிகளை மத்திய அரசு சிதைச்சுட்டாங்க. இன்னொரு பக்கம், மற்றொரு தூணான சிறு, குறு வியாபாரிகளை ஒழிக்க, இந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பைக் கொண்டு வந்திருக்காங்க. இதுவும், இந்தியா முழுமைக்கும் உள்ள தொழிலை... வியாபாரத்தை... இஞ்ச் பிசகாமல் கார்ப்பரேட் கம்பெனிகளின் ஆக்டோபஸ் கரங்களில் ஒப்படைக்கும் ஏற்பாடாகவே தெரியுது. பெரிய பிராண்ட் கம்பெனிகளுக்கும் பதினெட்டு சதவிகித வரி விதிப்பை அறிவித்துள்ள மத்திய அரசு, கடலைமிட்டாய், தேன்மிட்டாய் விற்கும் சாதாரண வியாபாரிகளுக்கும் பதினெட்டு சதவிகிதம் வரி விதித்திருப்பது எந்தவகையில் நியாயம்?. இந்தவரி பற்றி பல வியாபாரிகள் முழுதாக இன்னும் அறிந்துகொள்ளவில்லை. இந்த வரியை அமல்படுத்த உள்ள அதிகாரிகளுக்கும் இந்த வரிபற்றிய புரிதல் இன்னும் ஏற்படவில்லை. இந்த வரியால், எங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கிப்போகும். வரி விதிப்பது தவறு என்று நாங்கள் கூறவில்லை. ஆனா, இப்படி தான்தோன்றித்தனமாக போட்டிருக்கும் வரி விதிப்பைத்தான் எதிர்க்கிறோம். அதில், சில சலுகைகளையும், வரி சதவிகித அளவை குறைக்கவும் மட்டுமே வலியுறுத்துகிறோம்.

ஏற்கெனவே, எங்கள் கோரிக்கைகளை மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை மூன்று முறை சந்தித்து வலியுறுத்தினோம். நமது முதலமைச்சரையும் சந்தித்து மத்திய அரசிடம் நாங்கள் வைக்கும் கோரிக்கைகளை வலியுறுத்தி, அழுத்தம் கொடுக்கச் சொன்னோம். மாநில நிதியமைச்சர் ஜெயக்குமாரையும் மூன்றுமுறை சந்தித்து, எங்கள் கோரிக்கைகளை விளக்கி, மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு போகச் சொன்னோம். ஆனால், எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல், நாங்கள் வைத்த ஒரு கோரிக்கையைக்கூட பரிசீலிக்காமல், இப்படி வம்படியாக இந்த வரிவிதிப்பை அமல்படுத்தி இருக்கிறார்கள். குடிக்கின்ற தண்ணீர் கேன், தண்ணீர் பாட்டில்களுக்கும் 18 சதவிகிதம் வரி விதித்திருக்கிறார்கள். 

நடைமுறையில் இது பல சிக்கல்களை உண்டாக்கும். அதனால், அந்த வரியை ரத்துசெய்ய வேண்டும். ஹோட்டலில் சாப்பிடுபவர்களுக்கு 5,12,18 மற்றும் 28 சதவிகித வரி என்ற  அடிப்படையில் சேவைவரி விதிக்கப்பட்டுள்ளது. ஹோட்டலில் சாப்பிடுபவர்களுக்கு மத்திய அரசோ, மாநில அரசோ என்ன சேவை செய்கிறார்கள். இப்படி ஜிஎஸ்டி வரிவிதிப்பில் உள்ள அபத்தங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். அதேபோல், 'வரிகட்டாத வியாபாரிகளுக்கு சிறை'ன்னு அறிவிச்சுருக்காங்க. இந்த 'சிறை'ங்கிற வார்த்தை நியாயமான பல வியாபாரிகளை கொச்சைப்படுத்தும்விதமா இருக்கு.

 மத்திய, மாநில அரசுகளுக்கு மக்களிடம் இருந்து வரி வசூல் பண்ணித்தருவதே வியாபாரிகள்தான். மக்களுக்கும், அரசுக்கும் இந்த விஷயத்தில் கருவியாக இருந்து செயல்படுவதே நாங்கதான். ஆனால், அதற்கு இந்த அரசுகள் எந்தப் பலனையும் வழங்கியதில்லை. மாறாக, சிறைன்னு சொல்லி பயமுறுத்துறாங்க. கடந்த ஆட்சியில் சிறு, குறு வியாபாரிகளை குடிசைத்தொழில் அடிப்படையில் பிரிச்சு, அவங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், இந்த அரசு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு இணையான அளவு வரி விதிப்பை எங்க தலையிலும் சுமத்தினால், குடிசைத் தொழிலில் ஈடுபடுவோர் மட்டும் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவார்கள். மற்ற தொழிலிலும் நீங்கள் கணக்குப் பண்ணி பாருங்க. கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும், எங்களுக்குமான வரி விதிப்பின் அளவை கம்மி பண்ணனும். பதினெட்டு சதவிகிதத்தில் இருந்து ஐந்து சதவிகிதமாக்கணும். அதேபோல் 20 லட்சம் ரூபாய்க்குமேல் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் இந்த வரி விதிப்பிற்குள் அடங்குவார்கள்'ன்னு சொல்றாங்க. இருபது லட்சம் ரூபாய்க்குக்கீழ் வியாபாரம் பார்த்து குடும்பத்தை ஓட்ட முடியாது. அதனால் சிறு, குறு வியாபாரிகளை கைதூக்கிவிடும் விதமா, குறைந்தபட்ச இலக்கை ஐம்பது லட்சம் ரூபாயா உயர்த்தணும். நம்மூர்ல சின்னச்சின்னதா வச்சுருக்கும் பேக்கரிகள்ல பன், பிரட், கேக் வாங்கினால்கூட பதினெட்டு சதவிகிதம் வரியாம். ஆனால், வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் பிட்ஸா, பர்கருக்கு வெறும் ஐந்து சதவிகிதம்தான் வரியாம். இதில் இருந்தே இந்த வரி விதிப்பு சிறு, குறு வியாபாரிகளை நசுக்கத்தான் என்பது தெளிவாகிறது.

அதேபோல ஜிஎஸ்டி வரிவிதிப்பை மத்திய அரசு, ஒரேநாடு, ஒரே சட்டம், ஒரே சந்தை, ஒரே வரின்னு சிலாகிக்குது. அப்புறம் ஏன் பெட்ரோல், டீசலுக்கு வரி விதிக்கலை? ஒரே சந்தை, ஒரே வரின்னு இந்த வரிவிதிப்பினால், மத்திய அரசுக்கு அதிக வருமானம் வரும். இந்த வரி மூலமாகவே எக்கச்சக்க வருமானம் வரும்போது, தனியாக வியாபாரிகளை வருமான வரி வேறுகட்டச் சொல்வது தேவையற்றது. அதோடு, அந்த வருமானத்தில் ஒருசதவிகிதத்தை வைத்து 60 வயதுக்கு மேற்பட்ட வியாபாரிகளுக்கு ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தணும். இன்னொரு ஒரு சதவிகித தொகையில், இயற்கைச் சீற்றம், கலவரம் போன்ற விஷயங்களால் பாதிக்கப்படும் வியாபாரிகளுக்கு இழப்பீடு கொடுக்கணும். வரும் ஏழாம் தேதி மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் நடக்க இருக்கும் அனைத்து வணிகர் சங்கங்களின் நிர்வாகிகள் கூட்டத்தில் இந்த கோரிக்கைகளை அவரிடம் வைக்கப்போறோம். அவற்றை அவர் மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டுபோய், நடைமுறைப்படுத்தலன்னா, நாடு முழுவதும் உள்ள வியாபார சங்கங்கள் இணைந்து மாபெரும் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்றார் அதிரடியாக.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close