Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மதுரை மக்களுடன் ஒன்றிணைந்த சினிமாக்கள்..! திரையரங்குகள் அடைப்பு... ரசிகர்கள் சோகம் 

சினிமாக்களோடும் திரையரங்குகளோடும் மிகுந்த பிணைப்புடன் இருக்கும் மதுரை மக்கள், தற்போது திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் சூழலில், கவலையுடன் இருக்கின்றனர்.


   

தமிழக மக்களுக்கான பிரச்னைகள் கொழுந்துவிட்டு எரியும்போதும், பிரபலமான  தலைவர்கள் மரணமடையும்போதும், முக்கிய அரசியல் கட்சிகள் அறிவிக்கும் வேலை நிறுத்தம் போன்ற அசாதாரணமான சூழ்நிலைகளில் மட்டுமே, திரையரங்குகளை மூடி தங்கள் ஆதரவைத் தெரிவித்த திரையரங்க உரிமையாளர்கள், இன்று காலையிலிருந்து தங்களையும் தங்கள் தொழிலையும் காப்பாற்றுவதற்காக திரையரங்குகளை மூடியுள்ளார்கள். 


 தமிழக அரசுக்கு ஏற்கெனவே கேளிக்கை வரி முப்பது சதவிகிதம் கொடுத்துவரும் நிலையில், தற்போது ஜிஎஸ்டி-யால் மொத்தம் 58 சதவிகித வரி கட்ட வேண்டுமென்பதால், தமிழக அரசின் கேளிக்கை வரியை உடனடியாக ரத்துசெய்ய வேண்டுமென்று  திரையரங்குகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தைத் தொடங்கியுள்ளன. மதுரையைப் பொறுத்தவரை, கோயில் திருவிழா, கூத்து கொண்டாட்டங்களுக்குப் பிறகு, சாமான்ய மக்களின் தினசரி பொழுதுபோக்கு, திரையரங்குகளில் சங்கமமாவதுதான்.

என்னதான் டிவி, டிவிடி என்று வீட்டுக்கே சினிமா வந்துவிட்டாலும், திரையரங்குக்கு சென்று படம் பார்ப்பதைக் கடமையாகக்கொண்ட மக்கள் வாழும் ஊர், மதுரை. உழைக்கும் மக்களின் கவலை, வேதனை, வலியை மறக்க திரையரங்குகளே மருந்தாக உள்ளன. தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகள் காலவரையின்றி மூடும் போராட்டத்தைத் தொடங்கியிருப்பதால், சாமான்ய ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியிருக்கிறார்கள்.

ஹைடெக் திரையரங்குகள் ஒருபக்கம் இருந்தாலும், குறைவான கட்டணத்தில் எம்.ஜி.ஆர். சிவாஜி, ரஜினி, கமல் ஆகியோரின் பழைய படங்கள் திரையிடும் திரையரங்குகள் மதுரைக்குள் இப்போதும் உள்ளன. முன்பு போல திரையரங்குகளில் மக்கள் கூட்டம் இல்லாவிட்டாலும், சாதாரண மக்கள் மாலை வேளைகளில் திரையரங்குகளில் தஞ்சமடையத்தான்செய்கிறார்கள். அப்படி, சினிமாவையும் மக்களையும் பிரிக்க முடியாத நகரம் மதுரை.

சமீபத்தில்கூட 'ஷோலே' இந்திப் படம், சக்தி சிவம் திரையரங்கில் வெளியாகி ஒருவாரம் ஓடியது. 'ராஜபார்ட் ரங்கதுரை' மீனாட்சி திரையரங்கில் 20 நாள்களுக்கு மேலாக ஓடி வியப்பில் ஆழ்த்தியது. புதிய படங்களை மட்டுமல்ல, பழைய படங்களையும் ஆதரிப்பவர்கள் மதுரைக்காரர்கள். ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு நாடு முழுவதும் ஜூலை முதல் தேதியிலிருந்து  நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது. ஜிஎஸ்டி வரியை ஏற்றுக்கொள்கிறோம். அதேநேரம்,  தமிழக அரசின் கேளிக்கை வரியை உடனடியாக ரத்துசெய்ய வேண்டும் என்பதுதான், திரையரங்க உரிமையாளர்களின் ஒரே கோரிக்கை. 

தற்போது, மதுரை மாவட்டத்தில் மட்டும் 73 திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. தமிழக அரசு கேளிக்கை வரியை விலக்காத பட்சத்தில், திரையரங்கைத் தொடர்ந்து  மூடி, போராட்டத்தைத்  தொடருவோம்  என,  மதுரை மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close