Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

” 14 ஆண்டுகளில் கோட்சேவுக்கு விடுதலை... ராஜீவ் வழக்கு கைதிகளுக்கு..!” - உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி விளக்கம்

ராஜீவ் வழக்கு

வெளியுலகத் தொடர்பு இல்லாமல் நான்கு சுவர்களுக்குள் அடைபட்டுக் கிடக்கும் மனிதர்களின் அனுபவத்தைப் போன்ற ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிதான், இப்போதைய தமிழகத்தின் ஹாட் டாப்பிக்! உண்மையிலேயே குடும்பம், உறவுகளை விட்டு, 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ராஜீவ் வழக்கு ஆயுள் சிறைவாசிகளின் அன்றாட வாழ்க்கை எவ்வளவு துன்பகரமானது என உச் கொட்ட வைத்தது, சென்னையில் நடந்த கருத்தரங்கு. 

ஆயுள் சிறைவாசிகளுக்கான அமைப்பும் மரணதண்டைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பும் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில், ஆயுள் தண்டனை என்பது வாழ்ந்துசாகும்வரைக்கும் அல்ல எனும் குரல் பலமாக எதிரொலித்தது. 

ராஜீவ் வழக்கு வழக்குரைஞர் அஜிதாமனித உரிமைச் செயல்பாட்டாளர் வழக்குரைஞர் அஜிதா, ”காவலில் சித்ரவதை நடப்பதில்லை என உறுதிசெய்யமுடியாத நிலையில், தீர்ப்புகள் கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டும். வழக்கு நடைமுறையில் மனிதத் தவறுகள் நடக்க வாய்ப்பிருக்கிறது என்பதை நீதித்துறையும் ஏற்றுக்கொள்ளும்போது, தண்டனைக்காலம் தொடங்கிய பிறகும் மேல்முறையீடுசெய்வதற்கான சட்டம் அகில இந்திய அளவில் உருவாக்கப்படவேண்டும்” என்று அழுத்தமாகச் சொன்னார். 

ராஜீவ் வழக்கு கி.வெங்கட்ராமன்

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன், ” அரசியமைப்புச் சட்டத்தில் மாநில அரசுக்கு உள்ள தண்டனைக்குறைப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தவிடாமல் செய்வது, ராஜீவ் வழக்குக்கான அநீதி என்பது மட்டுமல்ல, இங்கிருக்கும் அரைகுறைக்கூட்டாட்சியில் மாநில சுயாட்சிக்கு மிகவும் ஆபத்தானது ” என அபாயக்குரல் கொடுத்தார். 

ராஜீவ் வழக்கு எழுத்தாளர் தியாகு

எழுத்தாளரும் தமிழ்த் தேசியக் கருத்தாளருமான தியாகு, “ இந்தியாவைப் பொறுத்தவரை, சிறை என்பது தண்டிக்கப்பட்டவர்களைத் திருத்துவதற்காகத்தான் என்று அரசமைப்புச் சட்டம் சொல்கிறது. வாழ்க்கையே சாவைப் போல இருந்தால் எந்த மனிதரும் வாழ்வதில் அர்த்தமில்லை. ஆயுள் கைதியான பீம்சிங்கின் உறவினர் ஒருவரை, எம்ஜிஆரின் ஆட்சியில் 7 ஆண்டுகளில் விடுதலை செய்தார்கள். உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது, ஆயுள் தண்டனை என்பது எட்டு ஆண்டுகள் இருக்கலாம் என்று கிருஷ்ணய்யர் தீர்ப்பே எழுதியிருக்க்கிறார். ஆயுள் தண்டனையை இத்தனை ஆண்டுகள் என வரம்புக்கு உட்படுத்தவேண்டும். காந்தியடிகளைக் கொன்ற கோபால் கோட்சேவை வெளிவிட உச்ச நீதிமன்றம் மறுத்தபோதும், 14 ஆண்டுகளில் அவரை மகாராஷ்டிர அரசு விடுதலைசெய்தது. வெளியே வந்தபின்னர் அளித்த முதல் பேட்டியில், காந்தியைக் கொன்றதில் துளிகூட வருத்தமில்லை என கோட்சே கூறினார். அதைவிட என்ன நடக்கவேண்டும்?” என்றதும் அரங்கில் அப்படியொரு அமைதி! 

ராஜீவ் வழக்கு முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன்

ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அரி பரந்தாமன் பேசியபோது, “ உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டால் அதுதான் இறுதியானது. ஆனால், தண்டனைக் குறைப்பு அதிகாரம், மாநில அரசின் இறையாண்மை அதிகாரம். நவீன சிவில் சமூகத்தில் மனிதர்களைத் திருத்த வாய்ப்பளிக்க வேண்டும். அதிமுக காலத்தில் பீம்சிங்கின் உறவினரைப் போலவே, மதுரை லீலாவதி கொலைவழக்கின் குற்றவாளிகளை திமுக ஆட்சியில் முன்கூட்டியே வெளியே விட்டார்கள். ஆயுள் கைதிகளுக்கு அவசரகால விடுப்பு, சாதாரண விடுப்பு தரவேண்டும் எனச் சட்டம் சொல்கிறது. அந்தக் கைதிகள் தங்களின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கவும் அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றவும் அனுமதிக்கவேண்டும். அவர்கள் சமூகத்துடன் மீண்டுவர வேண்டும். இந்த ஏழு பேரையும் மாநில அரசே  தன் அதிகாரப்படி வெளியில் விடலாம் ” என்றார். 

ராஜீவ் வழக்கு முன்னாள் ஐ.ஜி. தியாகராஜன்

ஒரிசா மாநில சிறைத்துறை முன்னாள் ஐ.ஜி.யும் ராஜீவ் கொலை வழக்கின் விசாரணை அதிகாரியுமான தியாகராஜன், ” ராஜீவ் வழக்குக் கைதிகள் 25 ஆண்டுகள் சிறை விதிகளுக்கு உட்பட்டு இன்னும் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் சூப்பர் மனிதர்கள். இவர்களை விடுவிப்பதில் மத்திய அரசு எப்படி முடிவெடுக்கமுடியும்? யார் அவர்களைப் பற்றி அறிந்தவர்கள்? அரசமைப்புச் சட்டத்தின்படியும் மாநில அரசுதான் முடிவு எடுக்கமுடியும்” என்றார். 

ராஜீவ் வழக்கு மூத்த வழக்கறிஞர் காலின் கான்சால்வஸ்

நிறைவாகப் பேசிய உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும் மரணதண்டனை எதிர்ப்புச் செயற்பாட்டாளருமான காலின் கான்சல்வஸ், “ ராஜீவ் வழக்கில் மரணதண்டனை வழங்கிய முக்கிய நீதிபதி கே.டி.தாமஸ் அவர்களிடம், அதன் பிறகு ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது, சித்திரவதை செய்து வாங்கிய வாக்குமூலத்தின்படி தீர்ப்பு வழங்கிவிட்டீர்கள் என்று சொன்னேன். சரிதான் என ஒத்துக்கொண்டார். அது துணிச்சலானது. ஆனால் இதை அவர் ஓய்வுபெறுவதற்கு முன்பு செய்திருக்கவேண்டும். மராட்டியத்தில் சிவாஜி வழக்கு பிரபலமானது! மலையில் உள்ள சாமியாரிடம் பணத்தைக் கொடுத்தால் பதிலுக்குத் தங்கம் கிடைக்கும் என அப்பாவிகளைக் கூட்டிச்சென்று, அவர்களைக் கொன்றுவிட்டு பணத்தைக் கொள்ளையடித்த வழக்கு. குற்றம்சாட்டப்பட்டவர்கள் அப்பாவிகள் அல்ல. அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வாதாடினேன். தலைமை நீதிபதியாக சதாசிவம் இருந்தார். முழு வாதத்தையும் முடித்தேன்; அவர் சிறிதும் அசையவில்லை. கடைசி முயற்சியாக, அந்தக் கைதி ஆறு மாதங்களாக எழுதிக்கொண்டிருந்த காந்தியைப் பற்றிய புத்தகத்தைக் கொடுத்தேன். அதை நன்றாகப் புரட்டிப் பார்த்த நீதிபதி சதாசிவம், மனம்மாறி, கைதியை மரண தண்டனையிலிருந்து விடுவித்தார். .... இன்னொரு வழக்கு நீதிபதி பேதியின் முன்பு நடந்தது... பெண்களின் நகைகளைப் பறித்து அவர்களைக் கொலைசெய்துவிடுவது தொடர்பான வழக்கு.. அவர்கள் சாகத்தான் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் நீதிபதி. சிறையில் இருந்தபடியே கைதி படித்திருக்கிறார். மனம் திருந்தி வாழ ஆவலோடு இருந்தார். 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மரண தண்டனை விதிக்கமுடியாது. அதையும் மீறி அவனைத் தூக்கிலிட தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது. அதைக் குறிப்பிட்டு வாதாடினேன். அவனுடைய தண்டனையை ஆயுளாகக் குறைத்தார், நீதிபதி. சிறைவாசத்தைக் கணக்கில் கொண்டு, விடுதலை செய்யவும் உத்தரவிட்டார். அந்தப் பையன், பீகாரில் சொந்த ஊருக்குப் போய் மனைவி, பிள்ளைகளுடன் நல்லபடியாக வாழ்ந்துவருகிறான். ... இப்படி, எந்த மனிதனையும் குற்ற மனநிலையிலிருந்து மனம் திருத்தமுடியும் பல உதாரணங்களைக் கூறலாம். ராஜீவ் வழக்கில் இன்னும் சிறையிலேயே அடைக்கப்பட்டுள்ள 7 பேரும், இந்த மேடையில் அமரும் நாள் வரத்தான் போகிறது. அப்போது சிறையில் எப்படித் துன்பப்பட்டார்கள் என்பதை அவர்கள் சொல்வதை நாம் கேட்கத்தான் போகிறோம்” என்றார் காலின் கான்சால்வஸ், ரொம்பவும் உறுதியாக! 

மானுடம் வெல்லட்டும்!

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close