Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழக போலீஸின் உணவு மானியத்தில் கைவைத்த அரசு..! அதிர்ச்சி அரசாணை

மிழக சட்டசபையில் போலீஸ் மானியக் கோரிக்கை வருகிற 6, 7 மற்றும் 10 ஆகிய மூன்று நாள்களில் நடைபெற இருக்கிறது. தீயணைப்பு, வனம் போன்ற துறைகளின் மீதான வாத-விவாதங்களும் அந்தத் தேதிகளில் நடைபெற இருக்கின்றன. இதற்காக எப்போதும் இல்லாத அளவுக்குக் கூடுதல் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளைக் காவல் துறை தலைமை செய்துவருகிறது. 

அடுத்தடுத்து, வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஏராளமான வாசகங்களைப் போலீஸார் சுற்றலில் விட்டபடி இருக்கின்றனர். "ஜூலை, 6-ம் தேதியன்று காலை கோட்டை நோக்கிப் போகிறோம்; எங்கள் குறைகளை முதல்வரிடம் நேரடியாகச் சொல்லப் போகிறோம்; இதோ, வந்துகொண்டே இருக்கிறோம்; அதிகாரிகள் சொல்லும் வேலைகளை அடிமையைவிடக் கேவலமாகச் செய்கிறோம்; அப்படி வேலைகளைச் செய்யும்போது சிக்கலில் மாட்டிக்கொண்டால் 'எங்களைத் தெரியாது' என்று அதிகாரிகள் கைவிரித்துவிடுகின்றனர். நாங்கள் குற்றவாளிகளாக நிற்கிறோம். யார் சொல்லிச் செய்தோமோ, அதே அதிகாரியே எங்களைக் குற்றவாளியாக்கித் தண்டனை பெற்றுத் தந்துவிடுகிறார். காவலர் சங்கம் என்பதைக் கொஞ்சம் தள்ளிப் போடவும் நாங்கள் தயார். ஆனால், எங்கள் பிரச்னைகளை எங்களில் சிலரே முதல்வரிடம் மனுவாகக் கொடுப்பதை எந்த அதிகாரியும் தடுக்கக் கூடாது". இப்படிப் போய்க்கொண்டிருக்கிறது, அந்த வாசகங்கள். 

ஃபேஸ்புக்கில் பத்துக்கும் மேற்பட்ட தனி 'பேஜ்'-கள் இதற்காக உருவாக்கப்பட்டுள்ளன. அதேபோல், நூற்றுக்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் குழுக்கள் உருவாக்கப்பட்டுத் தகவல்கள் தீயாய்ப் பரவிக்கொண்டிருக்கின்றன. கன்னியாகுமரியில் இருக்கும் கான்ஸ்டபிள் ஒருவருக்கு, 'காய்ச்சல்' என்றாலும் சென்னையில் உள்ள போலீஸாருக்கு அந்தத் தகவல் உடனுக்குடன் கிடைக்கிறது. 

காவலர் பிரச்னை விஸ்வரூபமெடுத்து வரும்வேளையில்தான், தமிழகச் சட்டசபைக் கூட்டத்தொடர் போய்க்கொண்டிருக்கிறது. காவலர் சங்கம் என்ற கோரிக்கையை முன்வைத்துப் போராடிவரும் போலீஸார், வருகிற 6-ம் தேதி கோட்டை நோக்கி வரவுள்ளதாகத் தகவல்கள் பறக்கின்றன. அதே 6 மற்றும் 7, 10 ஆகிய மூன்று நாள்கள் தமிழகச் சட்டசபையின் போலீஸ் மானியக்கோரிக்கை நடைபெற உள்ளது. அப்போது போலீஸார் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து அனைத்துக் காவல் நிலைய அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

அந்த அறிக்கையில், "போலீஸ் மானியக்கோரிக்கை நடைபெறும் காலகட்டத்தில், எஸ்.பி முதல் ஆயுதப்படை போலீஸார்வரையில், விடுப்பு எடுக்கக்கூடாது. அனைவரும், போலீஸ் ஸ்டேஷன்களில் பணியில் இருக்க வேண்டும். அத்தியாவசிய கோர்ட் பணிக்கு மட்டுமே செல்ல வேண்டும். எந்த நேரத்தில் அழைத்தாலும் உடனடியாகப் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து பணியில் ஆஜர் ஆகவேண்டும். மிகவும் அவசிய காரணத்துக்காக மட்டும் உரிய ஆதாரங்களைக் காவலரிடம் பெற்றுக்கொண்டு அதிகாரிகள் விடுப்பு அளிக்க வேண்டும். மானியக்கோரிக்கை நடக்கும் நாள்களில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்" என்று நிறையச் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த விவகாரங்கள் ஒருபக்கம் இருக்க... மறுபக்கம், போலீஸாரின் கோபம் அதிகாரிகள் பக்கமிருந்து... அரசின்மீது பாயும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது, போலீஸாருக்கு இதுவரையில் வழங்கப்பட்டு வந்த உணவுப்பொருள் 'மானியம்' இனி, இல்லை என்பதே அந்தக் கோபத்துக்குக் காரணம். உணவுப்பொருள் வழங்கு துறை இயக்குநருக்குத் தமிழக அரசின் முதன்மைச் செயலாளர்,  அனுப்பிவைத்த கடிதத்தில், "சிறைத்துறை, போலீஸ், வனம் ஆகிய துறைகளுக்கு இதுவரையில் 50 சதவிகித மானியத்தில் உணவுப்பொருள்கள் வழங்கப்பட்டுவந்தன. அந்த மானியம் இனி வழங்கும் சூழ்நிலை இல்லை. முழு விலையில் மட்டுமே இனி, பருப்பு, பாமாலின் உள்ளிட்ட எந்தப் பொருளையும் இவர்களுக்கு வழங்க முடியும்" என்கிறது அந்த உத்தரவுக் கடிதம்.

போலீஸார் தரப்பில் கூறும்போது, ''எங்களுக்கு, 'அடையாளத்துக்கு மட்டுமே ரேஷன் கார்டு வேண்டும்' என்றவர்களுக்கு அரசு வெள்ளைக் கார்டு கொடுத்தது. உணவுப் பொருள்களைக் கேட்டவர்களுக்குப் பச்சை வண்ணக் கார்டு கொடுத்தது. போலீஸாரான எங்களுக்கு 'காக்கி' வண்ணத்தில் கார்டு கொடுத்தது. எங்களுக்குச் சாதாரண மக்கள் வாங்கும் விலையில் இருந்து 50 சதவிகித மானியத்தில் உணவுப் பொருள்களையும் வழங்கிவந்தது. இப்போது, அந்த மானியத்தில் கைவைக்கச் சொல்லி அரசே, உணவுப்பொருள் வழங்கும் துறைக்கு உத்தரவு போட்டுள்ளது. இதுவரை எங்கள் மானியத்தில் கை வைக்கவில்லை. போலீஸ் மானியக்கோரிக்கை முடிந்ததும் எங்கள் உணவில் கைவைத்து விடுவார்கள். காக்கி ரேஷன் கார்டு என்பதாலோ, என்னவோ... எங்களுக்கு அரசின் தொலைக்காட்சி, கிரைண்டர், மிக்ஸி, மின்விசிறி என்று எதுவுமே கிடைக்கவில்லை. இப்போது இருக்கும் மானியத்திலும் கைவைக்கும் வேலையை அதிகாரபூர்வமாக உறுதி செய்துள்ளனர். இப்படிப்பட்டச் சூழ்நிலையில் நாங்கள் முதலமைச்சரைப் பார்க்காமல் வேறென்ன செய்வது" என்றனர்.

போலீஸ் மானியக்கோரிக்கை நாளன்று, போலீஸ் மானியம் குறைப்பு, காவலர் சங்கம் ஆகிய இருபெரும் பிரச்னைகளை எதிர்க் கட்சிகள் கையில் எடுக்கலாம் என்ற தகவல் போலீஸாருக்கும் தெரியும்... அதை முறியடிக்கும் வேலைகள் மட்டும்தான் இப்போது போய்க்கொண்டிருக்கின்றன. ஜூலை, 6-ம் தேதி காக்கி விறைப்புடன் சட்டசபை களை கட்டலாம்...

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close