Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பா.ம.க. ஆர்ப்பாட்டத்தை கலகலக்க வைத்த குடிமன்னர்கள்!

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் நெடுஞ்சாலைகளுக்கு அருகிலிருந்த பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. மூடப்பட்ட கடைகளை நகருக்குள் அல்லது புறநகர் பகுதியில் இடமாற்றம் செய்ய டாஸ்மாக் அதிகாரிகள் செய்கின்ற ஒவ்வொரு முயற்சியையும்  பொதுமக்கள் போராட்டம் நடத்தி தடுத்து வருவதுடன், ஏற்கெனவே செயல்பட்டு வரும் மதுக்கடைகளையும் மூட வேண்டுமென்றும் தொடர்ந்து போராடி வருகிறார்கள். தன்னெழுச்சியாக நடக்கும் இந்தப் போராட்டங்களை ஒடுக்க முடியாமல் தமிழக அரசு திணறி வருகிறது.  இந்தப் போராட்டங்களுக்கு ஆளும் கட்சியைத் தவிர, அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவிக்கின்றன. மதுக்கடைகளை அகற்ற வேண்டுமென்பதில், மற்ற கட்சிகளைவிட பா.ம.க-வே அதிக அக்கறை எடுத்து நீண்டகாலமாகப் போராடி வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் மது ஒழிப்பு மாநாடு நடத்தியது. நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்து சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி கண்டது. இப்போதும் டாஸ்மாக் கடைகளை அகற்ற தமிழகமெங்கும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று காலை மதுரை நாகமலை புதுக்கோட்டையில் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டி பா.ம.க சார்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்துகொண்டார்கள்.

டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகப் பா.ம.க நிர்வாகிகள் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென அங்கு வந்த குடிமகன்கள் மூன்று பேர், டாஸ்மாக் கடைகளுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பினர். ''டாஸ்மாக் கடைகளை மாற்றக்கூடாது, நூறு ரூபாய் பாட்டிலை நூற்றிமுப்பதுக்கு விற்பனை செய்கிறார்கள். அதைத் தட்டிக் கேட்கமாட்டீர்களா...'' என்று அவர்கள், ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களைப் பார்த்து கேள்வி கேட்க, பதிலுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் அவர்களைத் திட்ட, 'நீங்கள் வேண்டாம் என்று போராடினால்... டாஸ்மாக் வேண்டுமென்று நாங்கள் போராட்டம் நடத்துவோம்... உங்கள் போராட்டங்களால்தான் டாஸ்மாக் கடைகளில் சரக்குகளின் விலையை உயர்த்தி விற்கிறார்கள், இதனால் நாங்கள் ரொம்ப சிரமப்படுகிறோம்' என்று கோபத்துடன்  சத்தமாகப் பேச, விட்டால் போராட்டக்காரர்கள் அவர்களை அடித்து துவம்சம் செய்து விடுவார்கள் என்பதை உணர்ந்த போலீஸ், உடனே களத்தில் இறங்கி அந்த மூன்று கலகக்காரர்களையும் இழுத்துச் சென்றனர். போலீஸ் இழுத்துச் சென்றபோதும், ''எங்களுக்கு ஒரு நியாயத்தைச் சொல்லுங்க, இவர்கள் போராட்டம் நடத்தி பல கடைகளை அடைச்சதனால், மிச்சமிருக்கிற கடையில அதிக விலைக்கு விக்கிறான், இதுக்கு ஒரு நியாயம் சொல்லுங்க'' என்று முழக்கம் எழுப்பியபடி சென்றனர். அதற்குப் பின்பு மீண்டும் ஆர்ப்பாட்டம் தொடர்ந்தது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close