Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'தயவு செய்து பேரறிவாளனுக்கு பரோல் கொடுங்கள்!' - முதல்வரிடம் உருகும் ராபர்ட் பயஸ்

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனைக் கைதி ராபர்ட் பயஸ், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். ' 26 ஆண்டுகளாக நான்கு சுவற்றுக்குள் நாங்கள் படும் அவஸ்தைகள் சொல்லி மாளாது. இரண்டு ஆண்டுகளாக பரோல் கேட்டுப் போராடி வரும் பேரறிவாளனுக்கு பரோல் விடுப்பு கொடுங்கள்' என உருக்கமாக வேண்டுகோள் வைத்திருக்கிறார். 

ராபர்ட் பயாஸ் கடிதம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க கடந்த வாரம் வந்தார் பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள். ' இன்று நெடுஞ்சாலைத்துறை மானியக் கோரிக்கை நடைபெற இருப்பதால், முதல்வரை சந்திக்க முடியாது' என உதவியாளர்கள் கூற, அருகில் இருந்த அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கோரிக்கை மனுவைக் கொடுத்துவிட்டு வந்தார் அவர். இந்நிலையில், இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார் ராபர்ட் பயஸ். அந்தக் கடிதத்தில், ' தனிமைச் சிறையில் நாங்கள் அனுபவித்து வரும் கொடுமைகள் சொல்லி மாளாது. அணு அணுவாய்ச் சாவதை நிறுத்த, என்னைக் கருணைக் கொலை செய்திட தங்களை வேண்டிக் கேட்டிருந்தேன். இந்நிலையில், பேரறிவாளனின் தந்தை உடல்நிலை மோசமாக உள்ளதையும் தன் தந்தையைக் காண பரோல் கேட்டு பேரறிவாளன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வருவதையும் அறிந்து மேலும் மனவேதனை அடைந்தேன். 

நான் வேலூர் சிறையில் இருந்தபோது, பேரறிவாளன் தன்னுடைய தாய், தந்தையின் மீதான பாசத்தை அடுக்கிய கதையெல்லாம் எழுத்துக்களால் எழுதிவிட முடியாது. நான் நிரபராதி என்பதை நிரூபித்து வெளியே செல்ல வேண்டும் என்ற வைராக்கியத்துடன் இருந்த பேரறிவாளன், தன் தந்தையின் உடல்நிலை மோசமாவதால் பரோல் கேட்டிருந்தார். அதுவும் கிடைக்காமல் காலம் தாழ்த்துவதைப் பார்க்கும்போது, எங்களின் வேதனையைப் புரிந்துகொள்ள மாட்டீர்களா எனக் கத்தத் தோன்றுகிறது. எனது தந்தை உயிருடன் இருக்கும்போதும் பார்க்க முடியவில்லை. அவர் இறந்த பின்பு, இறப்புக்குக்கூட என்னால் போக முடியவில்லை. உலகில் எந்த மனிதனுக்கும் இதுபோன்ற நிலை வந்துவிடக் கூடாது என்பதற்காகவே உங்கள் முன் முறையிடுகிறேன். அந்த வேதனையை பேரறிவாளனுக்கு தந்துவிடாதீர்கள். தயவுசெய்து அவரை உடனே பரோலில் அனுப்பி, அவருடைய தந்தையையும் போராடும் தாயாரையும் காப்பாற்றுங்கள்' என உருக்கமாக விவரித்துள்ளார். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close