Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தீ விபத்து நடந்து 35 நாள்களுக்குப் பின்னர் எப்படி இருக்கிறது தி நகர்?

தி நகர் சென்னை சில்க்ஸ்

சென்னை தி நகர் உஸ்மான் சாலையில் இருந்த சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் கடந்த மே 31-ம் தேதி அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.  7 மாடி கட்டடத்தில் அனைத்துத் தளங்களுக்கும் தீ பரவியதால், தீயை அணைக்க இரண்டு நாள்களுக்கும் மேல் ஆனது.

கட்டடம் இடிப்பு

தீ விபத்துக் காரணமாகக் கட்டடம் பலவீனமாக இருந்ததால், கட்டடத்தை இடிப்பது என சென்னை மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. நெரிசல் மிகுந்த இடத்தில் கட்டடம் இருந்ததால், கட்டடத்தை இடிக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது. ஏறக்குறைய 20 நாள்களுக்குப் பின்னர் கட்டடம் முழுமையாகத் தரை மட்டமாக்கப்பட்டது.
தீ விபத்து நடந்த தினத்தில் இருந்து கட்டடம் முழுமையாக இடிக்கப்படும் வரை சுமார் 20 நாள்கள் உஸ்மான் சாலை மேம்பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. முழுமையாக இடிக்கப்பட்டபிறகு போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. இப்போது, இடிக்கப்பட்ட கட்டடத்தின் குவியல்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, ஏழு மாடிக் கட்டடம் இருந்த இடத்தில் புதிதாகக் கட்டடம் கட்ட சென்னை சில்க்ஸ் சார்பில் சிஎம்டிஏ-வில் விண்ணப்பிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.   

நடவடிக்கைகள் இல்லை

இது ஒருபுறம் இருக்க, மே 31-ம் தேதி தீ விபத்துக்குப் பிறகு, மாவட்ட நிர்வாகம், சென்னை மாநகராட்சி, சி.எம்.டி.ஏ ஆகிய மூன்று தரப்பிலும் தியாகராய நகரில் உள்ள விதிமுறை மீறிக் கட்டப்பட்ட கட்டடங்கள் மீது உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், 35 நாள்கள் ஆனபின்பும் அப்படி எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
தியாகராய நகர் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.நகரில் உள்ள வணிகக் கட்டடங்களில் தீ தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து தீ விபத்துக்கு முன்பே வழக்குத் தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கை மீண்டும் விசாரிப்பது என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பெஞ்ச் முடிவு செய்திருக்கிறது. இந்த வழக்கு வரும் 10-ம் தேதி விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.

நடவடிக்கை எடுக்கப்படும்

இதன் காரணமாக, கடந்த 2-ம் தேதி தி.நகர் பாண்டிபஜாரில் உள்ள ஜி.ஆர்.டி கிராண்ட் ஹோட்டலில், தி. நகரில் உள்ள ஜவுளிக்கடைகளைச் சேர்ந்த உரிமையாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சி.எம்.டி.ஏ துணைத் தலைவர் மற்றும் வீட்டு வசதித்துறைச் செயலாளர் தர்மேந்திரபிரதாப் யாதவ் மற்றும் சில அதிகாரிகளும் பங்கேற்றனர் என்று கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தில், உயர் நீதிமன்ற வழக்கை எதிர்கொள்வது பற்றி விவாதிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

இது குறித்து தி.நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தின் தலைவர் கண்ணனிடம் பேசினோம். "விதிமுறை மீறல் குறித்து இதுவரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீதிமன்றத்தின் மூலம்தான் இதற்கு உரிய தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம்" என்றார்.
இதுகுறித்து தர்மேந்திரபிரதாப் யாதவிடம் கேட்டோம். "தியாகராய நகர் ஜி.ஆர்.டி ஹோட்டலில் அப்படி ஒரு ஆலோசனைக் கூட்டம் நடந்ததா? என்பது எனக்குத் தெரியாது. நான் அதில் பங்கேற்கவில்லை. தி.நகரில் உள்ள விதிமுறை மீறல் கட்டடங்கள் மீது அரசு நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும். அரசு இது குறித்து ஆலோசனை நடத்திவருகிறது" என்றார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close