Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜிஎஸ்டி-க்கு எதிர்ப்பு: விசைத்தறிக் கூடங்கள் மூடல்! பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு

ஜிஎஸ்டி வரிவிதிப்பிலிருந்து ஜவுளித்துறைக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி, விசைத்தறித் தொழிலாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இதனால், சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 5,000 விசைத்தறிக் கூடங்கள் மூடப்பட்டுள்ளன.

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இந்த வரிவிதிப்பால், பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. நெசவுத்துறையைப் பொறுத்தவரை, இதுவரை வாட், சென்வாட், எக்சைஸ் என எந்த விதமான வரிவிதிப்பும் விதிக்கப்படவில்லை. இந்நிலையில், தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள ஜிஎஸ்டி சட்டத்தின்படி காட்டன்நூல் ஜவுளித்துணிகள் அனைத்துக்கும் 5 சதவிகித வரியும், ஒப்பந்தப் பாவுகளுக்கு 18 சதவிகித வரியும் விதிக்கப்பட்டுள்ளது. 

இதனால், விசைத்தறித் தொழிலும் அதனை நம்பி வாழக்கூடிய தொழிலாளர்களும் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். ஏற்கெனவே, ஜிஎஸ்டி வரிவிதிப்பிலிருந்து ஜவுளித்துறைக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி, கடந்த மாதம் 15-ம் தேதி சங்கரன்கோவிலில் விசைத்தறித் தொழிலாளர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து, தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த மாதம் 27, 28, 29 ஆகிய மூன்று தினங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆனால், விசைத்தறித் தொழிலாளர்களின் இந்தப் போராட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த விசைத்தறித் தொழிலாளர்கள், இன்று முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இந்தப் போராட்டத்தின் காரணமாக, சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சுமார் 5,000 விசைத்தறிக் கூடங்கள் மூடப்பட்டுள்ளன. இந்தப் போராட்டத்தில், 15,000 தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர். விசைத்தறித் தொழிலாளர்களின் போராட்டத்தால், நாள்தோறும் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான அளவில் வர்த்தகம் பாதிப்படையும்.

இந்தப் போராட்டம்குறித்து விசைத்தறித் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் மாடசாமி கூறுகையில், ’’நாங்கள் எங்களின் கோரிக்கையை வலியுறுத்தி ஏற்கெனவே பல கட்டப் போராட்டங்களை நடத்தினோம். ஆனால், அரசு எங்களின் கோரிக்கையை நிறைவேற்ற மறுத்துவிட்டதால், வேறு வழி இல்லாமல் இந்தப் போராட்டத்தைத் தொடங்கி இருக்கிறோம். இன்று முதல் நடைபெறும் எங்களது போராட்டத்தைப் பொதுமக்களுக்குக் கொண்டுசெல்லும் விதமாக, விசைத்தறித் தொழிலாளர்களின் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றியுள்ளோம். அடுத்ததாக, 'உண்ணாவிரதப் போராட்டம்', 'முதல்வரின் வீடு முற்றுகை' என போராட்டத்தைத் தீவிரப்படுத்த உள்ளோம்” என்றார். 

தீபாவளிப் பண்டிகைக்கான ஜவுளித் தயாரிப்பில் பல்வேறு நிறுவனங்களும் தீவிரம் காட்டிவருகின்றன. இந்நிலையில், விசைத்தறிக் கூடங்கள் காலவரையின்றி மூடப்பட்டிருப்பதால், உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தீபாவளிக்கு ஏழை, எளிய மக்களுக்கு அரசு வழங்கக்கூடிய இலவச வேட்டி, சேலை போன்றவற்றை உரிய நேரத்தில் வழங்குவதில் சிரமம் ஏற்படும் ஆபத்து உருவாகியுள்ளது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close