Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜி.எஸ்.டி நடைமுறையால் கிறிஸ்துமஸ் ஆர்டர் கேன்சல்? ஜவுளி ஏற்றுமதியாளர்கள் கலக்கம்!

தடை, எதிர்ப்புகளை மீறி மத்திய அரசு தடாலடியாக ஜி.எஸ்.டி வரியை அமல்படுத்தி விட்டது. இருந்தாலும், நாடு முழுக்க உள்ள வியாபாரிகள் அந்த வரிக்கு எதிராக கச்சைக் கட்டி வருகிறார்கள். இந்த சூழலில், "ஜி.எஸ்.டி வரி நடைமுறைச் சிக்கலால், கரூர் மாவட்ட ஜவுளி ஏற்றுமதியாளர்கள் தங்களது கிறிஸ்துமஸ் ஆர்டர்களை முடித்து அனுப்ப முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதனால்,எங்களுக்கு பெரிய பிரச்னையும், பல கோடி ரூபாய் நஷ்டமும் ஏற்பட வாய்ப்பிருக்கு" என்று கண்ணீர் வடிக்கிறார்கள் கரூர் மாவட்ட ஜவுளி ஏற்றுமதியாளர்கள். 

 ஜவுளி

ஜவுளி உற்பத்தியில் கரூர் மாவட்டம் தனி இடம் வகிப்பது எல்லோரும் அறிந்ததே. இங்கு உற்பத்தியாகும் ஆயத்த ஜவுளிகள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்த ஜனவரி மாதம் முதல் உலகின் பல்வேறு இடங்களில் நடந்த ஜவுளி வர்த்தகக் கண்காட்சியில் கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் பங்கேற்று, பல்க்காக ஆர்டர்கள் பெற்று வந்தனர். குறிப்பாக,வழக்கமான ஆர்டர்களுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு நாடுகளில் இருந்து சிறப்பு ஆர்டர்களையும் பெற்று வந்து, அவற்றை உற்பத்தி செய்யும் பணியில் கடந்த சில மாதங்களாக தீவிரமாக ஈடுப்பட்டு வந்தனர். இந்தச் சூழலில்தான், மத்திய அரசின் ஜி.எஸ்.டி பூதம் கிளம்பியது.

ஸ்டீபன்பாபுகரூரில் உள்ள முக்கிய ஆயத்த ஜவுளிகள் ஏற்றுமதியாளரான ஸ்டீபன் பாபு, "கிறிஸ்துமஸ் ஆர்டர்களை முடித்து வரும் 30 ம் தேதிக்குள் அந்தந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால்தான் அந்த நாடுகளில் விற்பனையைத் தொடங்க முடியும். ஆனால், அந்தப் பணியை தொடர்ச்சியாக செய்ய முடியாமல் எங்களுக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. 500, 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்ற அறிவிப்பால் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு நூல்விலை உயர்வு எங்களை வாட்டியது. இப்போது, எல்லா பிரச்னைகளையும் தூக்கி சாப்பிடும் விதமாக ஜி.எஸ்.டி வரி விதிப்பை அமல்படுத்தி எங்களை அல்லலில் தள்ளி இருக்கிறது மத்திய அரசு.

இந்தச் சட்டம் ஒட்டுமொத்த ஜவுளி உற்பத்தியாளர்களையும் பயமுறுத்தி வருகிறது. இதனால்,இந்தியாவிற்குள் விற்பனையாகும் உள்நாட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் நூற்றுக்கணக்கானோர் கடந்த சில நாள்களாகவே ஜவுளி உற்பத்தி மற்றும் விற்பனையை நிறுத்தி வைத்துள்ளனர். 'ஜி.எஸ்.டி சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் அல்லது பருத்தி என்ற ஆரம்ப நிலையிலேயே குறிப்பிட்ட வரியை நிர்ணயம் செய்து வசூலித்துக் கொள்ள வேண்டும். இடையில் நடக்கும் அனைத்து ஜாப் ஒர்க்குகள் தங்கு தடையின்றி நடைபெற உதவ வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர். இதே நிலைதான், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆயத்த ஜவுளிகள் உற்பத்தியிலும் உள்ளது.

இந்த வகையில்தான், வெளிநாடுகளுக்கு ஜவுளி ஏற்றுமதி செய்யும் நாங்களும் பாதிக்கப்பட்டுள்ளோம். இப்படி வெளிநாடுகளில் இருந்து பல்வேறு நாடுகளுடன் போட்டியிட்டு நமது ஜவுளிகளின் தரம், டிசைன், கலர், விலை போன்றவற்றால் ஆர்டர்களை கஷ்டப்பட்டு பெற்று உற்பத்தி செய்தால், அவற்றை அனுப்பவும், அவற்றில் ஜாப் ஒர்க் செய்யவும் கஷ்டப்படுகிறோம். இந்தத் தொழிலில் சாயமிடுதல், விசைத்தறி, கைத்தறி மூலம் நெய்தல், தைத்தல், முடி போடுதல், பேக்கிங் செய்தல் என்று பல்வேறு உப தொழில்கள்தான் அதிகம். இப்படி ஒவ்வொரு உப தொழிலுக்கும் சரக்கை அனுப்பும் போது ஆன்லைனில் இன் வாய்ஸ் போட்டு அனுப்ப வேண்டும் என்பது ஜவுளி நிறுவனங்களுக்குச் சரியாக இருக்கும். ஆனால், எந்த ஒரு வசதியும் இல்லாத ஜாப் ஒர்க் செய்பவர்களுக்கு அது மிகவும் கஷ்டமான ஒன்றாகும். அதனால் அவர்கள், 'தங்களின் தொழிலுக்கு ஜவுளிகளை அனுப்பாதீர்கள். அப்படி அனுப்பினால் உங்கள் பொறுப்பில் அனுப்புங்கள். எங்களுக்கு இந்த நடைமுறைகள் தெரியாது' என்று கையை விரிக்கின்றனர்.

ஜவுளி

மேலும், ஜி.எஸ்.டி சட்டத்திற்கு உள்பட்ட புதிய இன்வாய்ஸ் எங்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. அதனை, மத்திய அரசு உடனே தயாரித்து தந்தால்தான், அந்த முறையில் நாங்கள் பணி செய்ய முடியும். எல்லோரும் ஆன்லைனில் போய் தங்கள் பணியைச் செய்ய முயற்சிப்பதால், பெரும்பாலும் ஆன்லைன் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் சரியாக பணியைச் செய்ய முடிவதில்லை. பாதி நேரம் வேலை செய்யும்போதே கட் ஆகிவிடுகிறது. சேலத்தில் இருந்தும் வெள்ளக்கோவிலில் இருந்தும் கரூர் நோக்கி வந்த ஜவுளி லாரிகள் அதிகாரிகள் வசம் சிக்கியுள்ளன. அவற்றில் ஜி.எஸ்.டி சட்டப்படி வவுச்சர், இன்வாய்ஸ் இல்லாததால் அவற்றுக்கு அபராதம் விதித்துள்ளனர். இது, ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இதனால், ஏற்றுமதி ஜவுளிகளை தயாரிக்கும் பணி முற்றிலும் முடங்கி போயிருக்கிறது. ஆன்லைனில் ஜி.எஸ்.டி நம்பர் பெறுவதிலும் பல்வேறு நடைமுறைச் சிக்கல் உள்ளது. பலருக்கு இன்னும் நம்பர் வரவில்லை. எல்லா தரப்பிலும் ஜவுளி உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் கிறிஸ்துமஸ் ஆர்டர்களை முழுமையாக முடிக்க முடியாமலும், துறைமுகத்திற்கு அனுப்ப முடியாமலும் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்கள் திண்டாடி வருகின்றனர். இதனால், காலத்தோடு கிறிஸ்துமஸ் ஆர்டர்களை அனுப்ப முடியாமல், அந்த ஆர்டர்களை இழக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.  இதனால் 50 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும்.

அதனால், ஆன்லைன் சார்ந்த இத்துறை தொடர்பான படிவங்களை மத்திய அரசு உடனே தர வேண்டும். அதேபோல், ஜி.எஸ்.டி நம்பரையும் உரிய நேரத்தில் தர வேண்டும். ஜி.எஸ்.டி  நடைமுறையால் தேங்கி நிற்கும் ஜவுளித்துறை விஷயத்தில் மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தி உதவினால் மட்டுமே ஜவுளி வர்த்தகர்களால் திட்டமிட்டப்படி கிறிஸ்துமஸ் ஆர்டர்களை முடித்து அனுப்ப இயலும். இல்லையெனில், கரூர் மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும்" என்றார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close