Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விவசாயத்தை கொழிக்கவைத்த ஆற்றின் இன்றைய பரிதாப நிலை!

குமரி மாவட்டத்தில் உற்பத்தியாகி, குமரி மாவட்டத்தை மட்டும் செழிப்பாக்கிக் கொண்டிருக்கும் ஆறு பழையாறு. தமிழகத்தின் ஆறுகளை இணைக்க வேண்டும் என்பது தமிழர்களின் நிறைவேறாமல் இருக்கின்ற நீண்டக் கால கோரிக்கை. ஏற்கெனவே தமிழகத்தைச் செழிப்பாக்கிய ஆறுகளைப் பாதுகாக்க முடியாத சூழலில்தான் மக்களும் இருக்கிறார்கள். அதுபோலவே பழையாறும் மக்களின் கவன குறைவால் கானல் நீர் போல மறைந்து கொண்டிருக்கிறது. 

பழையாற்றின் மூலம் சுமார் 15821 ஏக்கர், பாசன வசதிகள் பெறுகிறது. பழையாற்றின் வழியாக 97 குளங்களுக்குத் தண்ணீர் செல்கிறது. ஆற்றின் குறுக்கே 13 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. இன்றும் இந்த அணைகட்டுகள் குமரி மாவட்டத்தின் பாசனத்துக்கும், குடிநீர் திட்டங்களுக்கும் பயன்பட்டு வருகின்றன. பாசனத்தில் பல ஏக்கர் நிலம் இருபோகமும் , சில ஏக்கர் ஒரு போகமும் விளைகிறது. மிகவும் பழைமைவாய்ந்த பழையாறு 30 மீட்டர் அகலம் கொண்டது. தற்போது பழையாறு அகலம் குறைந்து ஓடை போல் ஓடுகிறது .

பழையாற்றின் நடுவில் மண் திட்டுகளும், கரையோரப் பகுதிகளில் செடிகள், கொடிகள் வளர்ந்தும் நிற்கின்றன. அதனால் பழையாற்றின் அகலம் குறைக்கப்பட்டு நீர் பிடிப்புப் பகுதிகளும் குறைந்து காணப்படுகிறது. பழையாற்றில் மண் நிரம்பியுள்ளதால் ஆழம் குறைந்து நீரோட்டமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விரைவில் பழையாறு தடம் இல்லாமல் மறைந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மழை பெய்கின்ற வடகிழக்கு மற்றும் தென் மேற்கு பருவகாலங்களில் பழையாற்றில் தண்ணீர் ஓடும்.

 

தற்போது மக்களின் கவனக் குறைவால் பழையாறு மிகவும் மாசு அடைந்துள்ளது. இப்போதும் பல கோயில்களில் இருந்து சுவாமி ஆறாட்டுக்குக் கொண்டு வரப்பட்டு, பழையாற்றில் வைத்து பூஜைகள் செய்யப்படுவது வழக்கமாக நடந்து வருகிறது. நாகரிகம் வளர, வளர ஆறு பராமரிப்பின்றி போய்விட்டது. இப்போது பழையாற்றில் பல இடங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் ஆற்றின் கரையை ஆக்கிரமித்து கட்டடங்களும் கட்டி வருகிறார்கள். மக்கள் பழையாற்றின் பல இடங்களில் குப்பைகளை கொட்டி பாழாக்கிவிட்டார்கள். குறிப்பாக நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பழையாறு கழிவுகளால் நிரம்பி அலங்கோலமாகக் காட்சி தருகிறது. அதோடு ஆகாயத் தாமரையும் நிரம்பி உள்ளதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் பழையாற்றின் தண்ணீர் உள்ளது.

 

 

மனிதக் கழிவுகள், மருத்துவமனை கழிவுகள் பழையாற்றில்தான் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகின்றன. பழையாற்றுத் தண்ணீரில் குளித்தாலே பல்வேறு விதமான நோய்கள் பரவும் நிலை உருவாகி உள்ளது. மழைக்காலங்களில் குப்பையோடு சேர்ந்து கழிவு நீரும் அதிகமாகப் பழையாற்றில் வந்து கலப்பதால், குப்பைகள் அதிகமாகத் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. அதிகக் குப்பை மற்றும் கழிவு நீர்த் தேக்கம் காரணமாக நோய்களைப் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. நோய்கள் அதிகளவில் பரவுவதற்கு வாய்ப்புள்ளதாக மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். நாளுக்கு நாள் பராமரிப்பு இன்றி, பயன்பாடு இன்றி பழையாறு தனது ஆயுசு நாள்களை சுருக்கிக் கொண்டே வருகிறது. பொதுப்பணித்துறையும் கண்டுக் கொள்ளவில்லை.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் நெற்களஞ்சியமான நாஞ்சில் நாட்டு விவசாயத்தைச் செழித்துக் கொழிக்க வைத்த பழையாறு இன்னும் சில ஆண்டுகளில் மறைந்து விடும். அப்படியே பழையாற்றில் நீர் இருந்தாலும் அது தண்ணீர் அல்ல, பழையாற்றின் கண்ணீர்தான். அதன் பிறகு நாஞ்சில் நாடனின் நாவல், சிறுகதைகளிலும், மட்டுமே பழையாற்றைப் பார்க்க முடியும்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close