Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழகத்தில் மூன்று முதலமைச்சர்களைக் கடந்த, கண்டுபிடிக்க முடியாத முக்கிய வழக்குகள்!

போலீஸ் மானியக் கோரிக்கையும், முக்கிய வழக்குகளும்...

மிழகத்தில் சட்டம் - ஒழுங்கு எப்படி இருக்கிறது என்று ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களைக் கேட்டால், "சட்டம் - ஒழுங்கு மிக அருமையாக இருக்கிறது. தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது" என்பார்கள். ஆனால், மூன்று முதலமைச்சர்களை அதுவும் ஒரே கட்சியில், பார்த்துவிட்ட பெருமையுடன் பல வழக்குகள் முடங்கிக் கிடக்கின்றன.

கண்டுபிடிக்கப்படாத பல வழக்குகள் நிலுவையில் கிடக்க... ஆகஸ்ட் 22, 2016 அன்று தமிழகச் சட்டசபையில் போலீஸ் மானியக் கோரிக்கையின்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா பேசியது என்ன தெரியுமா? "எனது தலைமையிலான ஆட்சியின் இறுதியில், அதாவது 2005-ம் ஆண்டில் கொலைகளின் எண்ணிக்கை 1,366 என இருந்தது. இது, கடந்த தி.மு.க ஆட்சியின் இறுதியில் 2010-ல் 1,715 ஆக உயர்ந்தது. கடந்த 2015-ம் ஆண்டு கொலைகளின் எண்ணிக்கை 1,641 எனக் குறைந்துள்ளது. ஆதாயக் கொலைகள் எண்ணிக்கை 2005-ல் 74 ஆக இருந்தது. 2010-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியின் இறுதியில், 153 ஆக உயர்ந்திருந்தது. 2015-ம் ஆண்டில் எனது ஆட்சியில் இவ்வழக்குகள் 107 எனக் குறைந்துள்ளன. கடந்த 2015-ம் ஆண்டு தாக்கலான 1,641 கொலை வழக்குகளில், பெரும்பாலான கொலைச் சம்பவங்கள் குடும்பப் பிரச்னைகள், காதல் விவகாரங்கள், பணம் கொடுக்கல் - வாங்கல், நிலப் பிரச்னைகள், தனிப்பட்ட முன்விரோதம், வாய்த் தகராறு போன்ற காரணங்களினால் நிகழ்ந்துள்ளன. கடந்த 2015-ம் ஆண்டு 1,763 கொள்ளை வழக்குகள் தாக்கலாகி உள்ளன. இவ்வாண்டு 30.6.2016 வரை 847 கொள்ளை வழக்குகள் தாக்கலாகி உள்ளன. இவ்வழக்குகளை 2010-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, அதாவது தி.மு.க ஆட்சிக்காலத்துடன் ஒப்பிடும்போது, 2015-ம் ஆண்டு 2.97 சதவிகிதம் குறைந்துள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு 11,196 களவு வழக்குகள் தாக்கலாகியுள்ளன. இவ்வாண்டு 30.6.2016 வரை 5,868 களவு வழக்குகள் தாக்கலாகியுள்ளன. 2010-ம் ஆண்டு வழக்குகளை, அதாவது தி.மு.க. ஆட்சியில் இருந்ததை, 2015-ம் ஆண்டு தாக்கலான வழக்குகளோடு ஒப்பிடுகையில், 23.23 சதவிகிதம் குறைந்துள்ளன. 2010-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் கொலை வழக்குகள் உள்பட சொத்து சம்பந்தமாக 23,068 வழக்குகள் தாக்கலாகியுள்ளன. கடந்த 2015-ம் ஆண்டு 19,931 வழக்குகள் தாக்கலாகியுள்ளன. இவ்வாண்டு 30.6.2016 வரை 9,979 வழக்குகள் தாக்கலாகியுள்ளன. தி.மு.க ஆட்சியில், 2010-ம் ஆண்டு தாக்கலான மொத்த சொத்து வழக்குகளை 2015-ம் ஆண்டு தாக்கலான வழக்குகளோடு ஒப்பிடும்போது 3,137 வழக்குகள் குறைந்துள்ளன" என்றார்.

                                                 ஜெயலலிதாவுக்குப் பின் ஆண்ட  இரண்டு முதல்வர்கள்

செப்டம்பர், 22, 2016 அன்று ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின், தமிழக முதல்வராகச் சில மாதங்கள் ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பில் இருந்தார். ஓ.பன்னீர்செல்வத்துக்குப் பின், எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராகப் பொறுப்புக்கு வந்து இன்றுவரை அவர் தலைமையிலான தமிழக அரசு இயங்கிவருகிறது. 2016-ன் சட்டமன்றத் தேர்தல் முடிவுக்குப் பின், தமிழகத்துக்கு மூன்று முதல்வர்கள் கிடைத்துள்ளனர். ஆனால், கிடைக்காதது, 2016-க்கு முன் நடந்த பல வழக்குகளின் குற்றவாளிகள்தான். 

திருச்சி திலகர் நகர் போலீஸ் லிமிட்டில், மே, 29, 2012 முதல் தீவிர (!) புலன் விசாரணையில் இருக்கும் முன்னாள் மந்திரி கே.என்.நேருவின் தம்பி கே.என்.ராமஜெயம் படுகொலை வழக்குமுதல் அப்படிப் பல வழக்குகள் குற்றவாளி குறித்த எந்தத் தகவலும் இல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இப்படி மக்கள் மனதில் நிலைத்துவிட்ட முக்கியக் குற்றச் சம்பவங்களில் குற்றவாளிகள் இன்னும் பிடிபடவில்லை. அந்தப் பட்டியல் விபரம்:

(1) ஏப்ரல் 29, 2009 சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயிலைக் கடத்தி இன்னொரு ரயில்மீது மோதி பலர் பலியாகக் காரணமாக இருந்தவர்கள் யார்?
(2) அக்டோபர் 23, 2014 சென்னை கே.கே.நகர் அடகுக்கடை நடத்திவந்த ஹீராலால், பட்டப்பகலில் கொலை.
(3) மார்ச் 10, 2015 சென்னை தலைமைச் செயலக காலனி. இளம்பெண் அருணா கொலை. காதலன் தினேஷ் தலைமறைவு. 
(4) ஜனவரி 3, 2016 சென்னை பள்ளிக்கரணை. பாட்டி ராஜலட்சுமி, பேத்தி அன்னபூரணி இருவருமே நகைக்காகப் படுகொலை. அழுகிய நிலையில் பிணங்கள் மீட்பு.
(5) ஜனவரி 24, 2016 விழுப்புரம், கள்ளக்குறிச்சி. எஸ்.வி.எஸ் கல்லூரி மாணவிகள் சரண்யா, மோனிஷா, பிரியங்கா உடல்கள் கல்லூரிக் கிணற்றில் பிணமாக மீட்பு.
(6) மார்ச் 4, 2016 சென்னை எழும்பூர் நகைக்காக மூதாட்டி சாரதா படுகொலை
(7) மே 6, 2016 சென்னை முகப்பேர் பல் மருத்துவர் சங்கீதா கொலை.
(8) ஆகஸ்ட், 2016 ஓடும் ரயிலில் கூரையைப் பிரித்து 5 கோடி ரூபாய் கொள்ளை.
(9) ஜனவரி, 2017 காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரம் ஓய்வுபெற்ற கேரள மூத்த போலீஸ் அதிகாரியின் மகள், சுற்றுலாவுக்கு வந்த இடத்தில் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்டதாகப் புகார். 
(10) பிப்ரவரி, 2017 காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரம்... சென்னை தனியார் மருத்துவக் கல்லூரி மாணவி மாமல்லபுர சுற்றுலாத்தலத்தில் பாலியல் கொடுமையில் சிக்கியதாகப் போலீஸில் புகார்.
(11) ஏப்ரல் 2, 2017  காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரம்.... ஜெர்மனி சுற்றுலாப் பயணி 'ஜெசீனா'-வுக்குப் பாலியல் துன்புறுத்தல் போலீஸில் புகார். 

ஜெர்மனி நாட்டு சுற்றுலாப் பயணி 'ஜெசீனா' மீதான பாலியல் துன்புறுத்தல் விவகாரம், உள்ளூர் சட்டம் - ஒழுங்கு விவகாரம் போன்றதுபோல் அல்ல. நாளுக்குநாள் இதுகுறித்த தகவலைக் கேட்டு 'தூதரக' நெருக்கடி அதிகமாகி வருகிறது. சரக போலீஸ் டி.ஐ.ஜி., காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்.பி., கூடுதல் போலீஸ் எஸ்.பி., மாமல்லபுரம், கேளம்பாக்கம், தாழம்பூர், திருக்கழுக்குன்றம் ஆகிய காவல் நிலையங்களைச் சேர்ந்த தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், தலைமைக் காவலர்கள், போலீஸார் என இந்த வழக்கில் 50 பேர் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளதாகப் போலீஸ் தரப்பில் (தொடர்ந்து) கூறப்பட்டு வருகிறது. ஜெசீனா சொன்ன அடையாளத்தைவைத்து போலீஸார் கணினி மூலம் பலர் உருவத்தை வரைந்து காட்டியும், 'அவர்களில் யாரும் இல்லை' என்று ஜெசீனா சொல்லிவிட்டார்.

காவல் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மானியக் கோரிக்கையில் பேசும்போது, குறிப்பிட்ட முக்கிய வழக்குகள் குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் அதை மிகவும் சாதுர்யமாகக் கடந்து செல்லும் திறனை முதல்வர்கள் வளர்த்துக்கொண்டுள்ளனர்.

கேரளத்தின் முன்னாள் போலீஸ் உயர் அதிகாரி,  சென்னை தனியார் மருத்துவக் கல்லூரி மாணவி எனப் பலருடைய புகார்கள் வெளியுலகப் பார்வைக்குக் கொண்டு போகப்படாமலேயே விசாரணை (நிலுவை)யில் இருக்கிறது... இது மாதிரியான புகார்கள், வெளியுலகப் பார்வைக்கு வராமல் போனாலும், குற்றவாளிகளாவது வெளியில் சுற்றாமல் சிறைக்குப் போய் தண்டனையை அனுபவித்தால், அது போதுமே!

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close