Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிதைந்துக்கிடக்கும் கக்கன் படித்த பள்ளி புதுப்பிக்கப்படுமா? தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

முன்னாள் அமைச்சர் கக்கன் படித்த தும்பைப்பட்டி பள்ளியைச் சீரமைக்க கோரிய வழக்கில் பள்ளி கல்வித் துறையின் முதன்மை செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

உலக வரலாறுகளிலேயே கக்கன் போன்ற நேர்மை, நாணயத்துக்கு உதாரணமான அமைச்சரைப் பார்ப்பது கடினம் என்று சொல்லும் அளவுக்கு உண்மையாகப் பணியாற்றியவர். மேலூர் வட்டத்தில் தும்பைப்பட்டி எனும் கிராமத்தில் பிறந்தவர்தான் பூசாரிக் கக்கன், எளிமையிலும் எளிமையாகத் தோற்றம் அளிக்கும் அவர், முடியாத நிலையில்கூட தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் தானும் ஒரு சாதாரண மனிதன்தான் என அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டவர் . அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர், அவரை மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்து, மருத்துவமனையில் தனி அறை வழங்க சொன்னதைகூட மறுத்து கொசுக்கடியில் வாடிக்கிடந்தவர் கக்கன். இவர் படித்த பள்ளி தும்மைப்பட்டியில் சிதைந்து வருகிறது. அதைப் பாதுகாக்கும் விதமாக கக்கனின் பேரன் சரசுக்குமார் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ''தும்பைப்பட்டியில் இருக்கும் தொடக்கப்பள்ளியில் சுமார் 150 மாணவர்கள் பயல்கிறார்கள். தும்பைப்பட்டி மட்டுமல்லாமல் சுற்றியிருக்கும் கிராமத்தைச் சேர்ந்த சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் குழந்தைகளும் இந்தப் பள்ளியிலேயே பயில்கின்றனர். சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த கக்கன் பயின்றதும் இந்த பள்ளியில்தான். ஆனால், தற்போது இந்தப் பள்ளி உரிய பராமரிப்பின்றி பாழடைந்து காணப்படுகிறது. கட்டடங்கள் விரிசலடைந்த நிலையில், மேற்கூரையும் சேதமடைந்து காணப்படுகிறது. கழிவறையில் தண்ணீர் வசதி இல்லாததால் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதையே தவிர்த்து வருவதாகக் கூறுகின்றனர். குடிநீர் வசதியும் இல்லை. எனவே, பள்ளியில் பயிலும் மாணவர் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. 2009-ம் ஆண்டு இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் மற்றும் அடிப்படை கல்வி உரிமைச் சட்டம் கூறும் தரமான கட்டடம் , பாதுகாப்பான குடிநீர், கழிவறை, நூலகம் உள்ளிட்ட எந்த வசதியும் இந்தப் பள்ளியில் இல்லை. எனவே, தும்பைப்பட்டியில் இருக்கும் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி கட்டடத்தை சீரமைக்கவும், முறையான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதியை ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் கொண்ட அமர்வு, இது குறித்து பள்ளி கல்வித் துறையின் முதன்மை செயலர், மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், கொட்டாம்பட்டி பஞ்சாயத்து யூனியனின் ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close