Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திரைத்துறை மீதான இரட்டை வரி விதிப்பு முறையை நீக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் கோரிக்கை

”ஜிஎஸ்டி மற்றும் கேளிக்கை வரி என திரைத்துறை மீதான "இரட்டை வரி விதிப்பு" முறையை நீக்கி, சினிமாவை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் நலன் கருதி கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும்” என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசினார். 

ஸ்டாலின்

''சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தால் தமிழ் திரையுலகமே இன்றைக்கு ஒரு கேள்விக்குறியாக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக, நூறு ரூபாய்க்கு டிக்கெட் இருந்தால் 18 சதவிகித வரியும், 100 ரூபாய்க்கு மேலிருந்தால் 28 சதவிகித வரியும் விதிக்கக்கூடிய ஜிஎஸ்டி-யால் சினிமா தொழில் முற்றிலும் பாதிக்கப்படும் நிலை உருவாகியிருக்கிறது. குறிப்பாக, திரையுலகத்தைச் சார்ந்திருக்கக்கூடிய நடிகர்கள் கமல்ஹாசன்,  ரஜினிகாந்த் உள்ளிட்ட கலையுலகைச் சார்ந்த அத்தனை பேரும் இதுகுறித்து தங்கள் கவலைகளை, வருத்தத்தைத் தொடர்ந்து தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், ஜிஎஸ்டி வரியுடன் கேளிக்கை வரி 30 சதவிகிதம் என்று மாநில அரசு முடிவு செய்திருக்கும் காரணத்தால், திரையுலகம் மேலும் அதிர்ச்சியடைந்திருக்கிறது. 65 சதவிகிதம் வரி செலுத்தி எப்படி சினிமா தொழில் செய்ய முடியும் என்று அவர்கள் வேதனைக்கு ஆளாகியிருக்கிறார்கள். இதனால், திரையரங்குகள் எல்லாம் முழு அடைப்புப் போராட்டத்தை இன்றோடு 4-வது நாளாக நடத்திக்கொண்டிருக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி நடத்திக்கொண்டு இருந்தபோது, 1989-ல் 54 சதவிகிதம் இருந்த கேளிக்கை வரியை 40 சதவீதமாக குறைக்கப்பட்டது. பிறகு அந்த 40 சதவிகித கேளிக்கை வரியும் 1.8.1998 முதல் 30 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. 2000-ம் ஆண்டில் அது மேலும் 25 சதவிகிதமாக கேளிக்கை வரி குறைக்கப்பட்டது. அதுமட்டுமல்ல, 22.7.2006 அன்று வெளியிடப்பட்ட அரசாணை எண்.72ன் கீழ் "தமிழ்ப் பெயர் கொண்ட திரைப்படங்களுக்கு முழு கேளிக்கை வரி விலக்கு" அளிக்கப்பட்டது. இந்த வரி விலக்கு தமிழ்ப் பெயர் உள்ள பழைய படங்களுக்கும், காப்பிரைட் வைத்திருக்கும் தமிழ் படங்களுக்கும் அளிக்கப்பட்டது. இது தவிர திரைப்படத்துறையினருக்காக பல்வேறு சலுகைகளை திமுக அரசு உருவாக்கித் தந்திருக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில் திரையுலகத்தினரின் கவலையைப் போக்கும் வகையில், சினிமா தொழில் நலிவடைந்து விடாமல் பாதுகாக்கும் கடமை இந்த அரசுக்கு இருக்கிறது. சினிமா தொழிலை நம்பி இருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் நலன் கருதி, 30 சதவிகிதம் கேளிக்கை வரி விதிக்கும் முடிவை மாநில அரசு கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மத்தளத்துக்கு இருபுறமும் அடி என்று சொல்வதுபோல, சினிமாத்துறைக்கு ஜிஎஸ்டி மூலம் 28 சதவிகித வரி, மாநில அரசின் மூலம் கேளிக்கை வரி 30 சதவிகிதம். மத்திய அரசின் முழக்கம் என்னவென்றால், "ஒரே நாடு, ஒரே வரி". ஆனால் இதற்கு எதிராக "இரட்டை வரி விதிப்பு" முறை சினிமா உலகத்தைச் சூழ்ந்துள்ளது. ஜிஎஸ்டி வந்தவுடன் கேரள மாநில நிதியமைச்சர் தாமஸ் ஐசக் அவர்கள், "கேரளாவில் கேளிக்கை வரி ரத்து செய்யப்படும்" என்று வெளிப்படையாக அறிவித்திருக்கிறார். அதேபோல, மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை, நூறு ரூபாய் டிக்கெட்டில் வசூலிக்கப்படும் 18 சதவிகித ஜிஎஸ்டி வரியில், மாநில அரசின் பங்கான 9 சதவிகிதத்தில் ஏழு சதவிகிதத்தை சினிமா பார்ப்பவர்களுக்கே வழங்கி டிக்கெட் விலையை குறைத்துள்ளது. அதேபோல 100 ரூபாய்க்கு மேல் உள்ள டிக்கெட்டுகளுக்கான 28 சதவிகித ஜிஎஸ்டி வரியில் மாநில அரசின் பங்கான 14 சதவிகிதத்தில் 12 சதவிகிதத்தை படம் பார்ப்பவர்களுக்கே வழங்கி டிக்கெட் விலையை குறைத்திருக்கிறது. ஜிஎஸ்டி வரி மூலமாக மாநில அரசுக்கு கிடைக்கும் வரியை இப்படி படம் பார்ப்பவர்களுக்கே வழங்கி போராட்டங்களுக்கு வித்திடாமல் சினிமா தொழிலைக் காப்பாற்ற முன் வந்துள்ளது மேற்கு வங்க அரசு. எனவே, நிறைவாக நான் இந்த அரசை கேட்டுக்கொள்ள விரும்புவது, கேரள அரசு கேளிக்கை வரியை ரத்து செய்துள்ள நிலையில் அப்படியொரு கொள்கை முடிவை தமிழகத்திலும் எடுத்து சினிமா தொழிலை பாதுகாக்கும் சூழ்நிலையை விரைவில் ஏற்படுத்த வேண்டும் என்று முதலமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.  

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close